செய்திகள்

நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

அரியலூர், டிச.18–

நீர் மேலாண்மைக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். கேள்வி: சென்னை ஐ.ஐ.டி.. அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது….

பதில்: அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றினால் கொரோனா தொற்று ஏற்படாது. அந்தக் கல்லூரிகளில் அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்துவதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அங்கிருக்கின்ற மாணவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை

கேள்வி: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநில அரசு நிலம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்களே?

பதில்: அதில் சில வகைமாற்றம் செய்ய வேண்டியுள்ளது. விரைந்து செயல்பட்டு அதை கொடுத்து விடுவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நிலம் கொடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. நிலத்தில் எந்தவித இடர்பாடும் இல்லை. அரசு உடனடியாக கொடுப்பதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதில் சில பிரச்சனைகள் இருக்கின்றது. அதையும் சரி செய்து உரிய நேரத்தில் வழங்கப்படும்.

கேள்வி: மினி கிளினிக் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது, கிராமப்புற மக்களுக்கும் பயனாக இருக்கிறது. இதற்கு தமிழில் பெயர் வைக்காததன் காரணம் என்ன?

பதில்: மினி என்றால் மக்களுக்கு உடனடியாகத் தெரியும். உடனே மக்களுக்கு ஸ்ட்ரைக் ஆகும், எளிதாக இருக்கும், மக்களுக்குப் புரியும். அதற்காகத் தான் வைத்தோமே தவிர, தமிழ்ச் சொல்லை மறைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தமிழ்ச் சொல்லில் ‘சிறு’ என்று வரும், ‘சிறு’ என்று வந்தால் அது மருத்துவமனைக்கு பொருத்தமாக இருக்காது. அதனால்தான் நம்முடைய அதிகாரிகள், மினி கிளினிக் என்றால் மக்களிடத்தில் ஒரு நல்ல இடத்தை பெறும் என்றார்கள். அதை வைத்து பெயர் வைத்தோம்.

கேள்வி: அரசு கலைக் கல்லூரிகளில் 3,544 நபர்கள் கௌரவ விரிவுரையாளராக பணியாற்றுகிறார்கள். அவர்களை பணி நியமனம் செய்வது தொடர்பாக …..

பதில்: சட்ட விதிகளுக்குட்பட்டு தான் நியமிக்க முடியும். நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள், நீதிமன்றம் சில அறிவிப்புகளை கொடுக்கிறது. ஏற்கனவே, மத்திய அரசாங்கத்தின் வழிமுறைகள் இருக்கின்றன. சட்டத்திற்குட்பட்டு இருந்தால் நியமனம் செய்யப்படுவார்கள்.

கேள்வி: ராஜேந்திர சோழனுக்கு ஒரு மணிமண்டபம் …

பதில்: அது குறித்து கொறடாவும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தெரிவித்திருக்கின்றார்கள். அது அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கின்றது.

நீர் மேலாண்மை முன்னுரிமை

கேள்வி: கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக…

பதில்: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தான் ஆதனூர் – -குமாரமங்கலத்தில் ஏறத்தாழ ரூபாய் 365 கோடி மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், அண்மையில் கரூர், நஞ்சைபுகளூரில் கதவணை கட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார், அந்தப் பணியும் துவங்கியுள்ளது. இப்படி ஒவ்வொரு பணியாக துவக்கிக் கொண்டிருக்கிறோம்.

எல்லா பணிகளையும் செயல்படுத்த வேண்டுமென்று தான் எண்ணம். எனவே, நிதி ஆதாரத்தைப் பெருக்கி, நீரை தேக்கி வைக்க முடிகின்ற இடங்களிலெல்லாம் நீர் தேக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீர் மேலாண்மைத் திட்டத்தில் இந்த வருடம் தேசிய அளவில் விருதைப் பெற்றிருக்கிறோம். பத்திரிகையாளர்களும், ஊடக நண்பர்களும் அரசு செய்த சாதனைகளைச் சொல்லுங்கள். நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு எங்கள் அரசு எவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறது, அவ்வாறு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை நிறைவேற்றியதன் காரணத்தால்தான் தேசிய அளவில் 2019–-2020-ல் விருதுகளை பெற்றுள்ளோம்.

ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையம்

கேள்வி: ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையம்…

பதில்: இது ஒரு நீண்டகால பிரச்சனை. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக அரசின் ஆணைப்படி 13 வருவாய் கிராமங்களில் 8,373 ஏக்கர் 2003 வரை கையகப் படுத்தப்பட்டன. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு 2005–-ல் பழுப்பு நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்காக ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி திட்டத்தை என்.எல்.சி. மூலம் செயல்படுத்த அரசாணை பிறப்பித்து எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை, நீதிமன்றத்திற்கு சென்றார்கள். அதில், நிலத்தினுடைய மதிப்பை 43 சதவீதம் உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு காண வேண்டுமென்று நீதியரசர் குறிப்பிட்டார். அதன்படி, 23 மடங்கு சேர்த்துக் கொடுக்க வேண்டுமென்று உத்தரவு வழங்கினார்.

அதன்படி கூளத்தூர், காட்டாத்தூர் என்ற 2 கிராமங்களில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். எஞ்சிய 11 கிராமத்தில் இருக்கும் நிலம் கொடுத்த விவசாயிகளையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்கள். ஆகவே, அரசைப் பொறுத்தவரை, அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எண்ணம். அதன் அடிப்படையில் செயல்படுத்துவதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் டிட்கோ மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது.

8 வழிச்சாலை

கேள்வி: எட்டு வழி சாலை ….

பதில்: ஏற்கனவே இருக்கும் சாலைகளில் பெரிய பிரச்சனைகள் இருக்கின்றது. சேலத்திலிருந்து சென்னை வரை பிரம்மாண்டமான சாலை அமைக்க மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். சுமார் 92 சதவீதம் பேர் சென்னை முதல் சேலம் வரையுள்ள 8 வழிச்சாலைக்கு இசைவு கொடுத்திருக்கின்றார்கள்.

8 சதவீதம் பேர் வேண்டுமென்றே திட்டமிட்டு தடை செய்து கொண்டிருந்தார்கள். அதை பத்திரிகை நண்பர்களும், தொலைக்காட்சிகளும் பூதாகரமாக்கி விட்டீர்கள். அந்தத் திட்டம் நீதிமன்றம் வரை சென்று இப்போது தான் நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. அது மத்திய அரசின் திட்டம். நமக்கு 50 கி.மீ. தூரம் மீதமாகிறது, எரிபொருள் மீதமாகிறது, விபத்து குறைகிறது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாம் நிலம் மட்டும்தான் எடுத்துக் கொடுக்கிறோம். நிலம் எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. விவசாயிகள் நிலங்களை கொடுக்கலாம் என்று எண்ணினால்தான் எடுக்க முடியும். நாங்கள் நிறைய புறவழிச்சாலைகளை அமைத்துக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக அரியலூரில்கூட புறவழிச்சாலை அமைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஆனால், நிலம் கொடுக்க மறுக்கிறார்கள். அதுதான் பிரச்சனையே. நிலம் கொடுக்க முன்வந்தால், அரசு, சாலை அமைக்கத் தயாராக இருக்கிறது.

கேள்வி: அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கான சாலை விரிவாக்கம் …

பதில்: இங்கு வரும்போது கூட, சிமெண்ட் ஆலைகளின் கூட்டமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் பேசினார்கள். எந்தெந்த சாலைகள் நிலம் எடுக்காமல் விரிவுபடுத்த முடியுமோ, அந்த சாலைகளை அரசு விரிவுபடுத்தும். ஏற்கனவே அதிகமாக நிதி ஒதுக்கி, இங்குதான் அதிக சாலைகளை புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *