சிறுகதை

வறுமையிலும் மனம் கலங்காதே

சிறுகதை துரை. சக்திவேல்
தம்பி நல்லா இருக்கீங்களா! பார்த்து ரொம்ப நாளாச்சு… லீவுக்கு அம்மா, அப்பாவை பார்க்க வந்தீங்களா… என்று பெட்டிக்கடையில் இருந்த மாணிக்கத்திடம் நலம் விசாரித்தார் விவசாயி கருப்பன்.
ஐயா… நல்லா இருக்கேன்… நேத்து தான் வந்தேன்… என்று பதில் சொன்னான் மாணிக்கம்.
அப்பா இல்லையா தம்பி என்று மாணிக்கத்திடம் கேட்டார் கருப்பன்.
அப்பா பட்டணத்துக்கு அக்காவை பார்க்க போயிருக்காரு… பொழுது சாய்ரதுக்கு முன்னாடி வந்துடுவேன்னு சொன்னாரு என்று மாணிக்கம் பதில் கூறினான்.
தெரியும் தம்பி… வந்துட்டாரான்னு பார்க்கலாம்னு வந்தேன் என்று கூறிய அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
விவசாயி கருப்பனும் பெட்டிக்கடை நடத்தி வரும் முத்தையாவும் நண்பர்கள்.
அந்தக் கிராமத்தில் விவசாயத்தைத் தவிர வேறு ஏதும் தொழில் வசதி கிடையாது.
வானம் பார்த்த பூமியான அந்த கிராமத்தில் தற்போது மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டு விவசாய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது.
அந்தக் கிராமத்தில் வாழும் மக்கள் மிகவும் வறுமையில் வாழந்தனர். ஒரு சிலர் அந்த கிராமத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார்.
விவசாயி கருப்பனுக்கு அந்தக் கிராமத்தில் அதிக அளவு நிலங்கள் இருந்தது. அதில் விவசாயம் செய்து வந்தார்.
தற்போது தண்ணீர் இல்லாததால் விவசாய தொழில் செய்ய முடியாமல் வறுமை அவரை வாட்டியது.
விவசாயத்தைத் தவிர வேறு ஒன்றும் அவருக்குத் தெரியாது.
அதனால் தன்னிடம் இருந்த நிலங்கள் ஒவ்வொன்றாக விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
தான் மீண்டும் விவசாயம் செய்வதற்காக சிறிதளவு நிலம் மற்றும் குடியிருக்கும் வீட்டை தவிர மற்றவற்றை விற்பனை செய்தார்.
நிலத்தை விற்பனை செய்த பணத்தின் பெரும் பகுதியை தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளிகளுக்கு கொடுத்தார்.
மீதி இருந்த கொஞ்ச பணமும் தீர்ந்து போனது. வறுமையின் உச்சகட்டத்தை அடைந்தார்.
அவருக்கு குழந்தை இல்லை.
தனது மனைவியுடன் கருப்பன் சொந்தக் கிராமத்திலேயே தனது கடைசி காலத்தை நிறைவு செய்ய விரும்பினார்.
அந்த நிலையிலும் யாரிடம் கையேந்தாமல் கவுரவத்துடன் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.
விவசாயத் தொழில் இல்லாததால் வீட்டில் பொழுது போகாது என்பதால் தினமும் அந்தக் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் தனது நண்பன் முத்தையாவை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் கருப்பன்.
அந்த சின்னக் கிராமத்தில் ஒரே ஒரே பெட்டிகடை உண்டு. 30 ஆண்டுகளுக்கு மேலாக முத்தையா அந்த கடையை நடத்தி வருகிறார்.
அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
முத்தையா தனது மகளை பக்கத்தில் உள்ள பட்டணத்தில் உள்ள தனது உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
மகன் மாணிக்கம் பட்டப்படிப்பு படித்து வெளியூரில் வேலை பார்த்து வந்தான்.
விடுமுறையில் தனது பெற்றோரை பார்ப்பதற்காக கிராமத்திற்கு வந்த மாணிக்கம் கடையில் உட்கார்ந்து இருந்தான்.
அவனது தந்தை முத்தையா வெளியூரில் இருக்கும் தனது மகளை பார்க்க சென்றார்.
அந்த நேரத்தில் தான் கருப்பன் தனது நண்பனை பார்ப்பதற்காக பெட்டிக்கடைக்கு வந்தார்.
முத்தையா இல்லாததால் திருப்பிச் சென்றார்.
அவர் சென்ற பிறகு, மாணிக்கம் தனது தாயிடம்….
அம்மா கருப்பன் ஐயா வந்தார்… அப்பாவை கேட்டார். அவர் இல்லை என்றதும் திரும்பி போய்விட்டார்.
உடல் மெலிந்து இருக்காரே… அவரை பார்த்தா பரிதாபமா இருக்கே என்றான்.
ஆமாம்… ஒருகாலத்தில் எப்படி வாழ்ந்தவரு…
விவசாயம் இல்லாததால் தன்னேடா நிலத்தை எல்லாம் வித்துட்டு இப்ப கஷ்டப்படுறாரு.
இந்த ஊரைச் சேர்ந்தவங்கள் எவ்வளவோ பேர் அவருக்கு உதவி செய்ய முன் வந்தாங்க.
ஆனால் அவற்றை எல்லாம் அவர் வாங்க மறுத்துட்டார்.
வறுமைக்காக யாரிடமும் கையை ஏந்த மாட்டேன்னு சொல்லிட்டாரு.
உங்க அப்பா கூடா சமையலுக்கு வேண்டிய பொருளை வாங்கிட்டு போ… பணம் வந்தவுடன் கொடுத்தா போதும் என்று கூறுவார்.
பட்டினியால் கிடந்தாலும் கிடப்பேன் யாரிடமும் யாசகம் வாங்கமாட்டேன் என்று கூறி கவுரவமா வாழ்ந்துகிட்டு இருக்காரு என்று விவசாயி கருப்பன் பற்றி மாணிக்கத்தின் தாயார் கூறினார்.
மாலை 6 மணி அளவில் மீண்டும் முத்தையாவின் கடைக்கு வந்தார் கருப்பன்.
அப்போதும் முத்தையாவின் மகன் மாணிக்கம்தான் கடையில் இருந்தான்.
அவனிடம் என்ன தம்பி அப்பா இன்னும் வரலையா… என்று கேட்டார் கருப்பன்.
இல்லங்க ஐயா… இதுக்கு மேல இன்னைக்கு வரமாட்டார்… நாளைக்கு விடிஞ்சதும் கிளம்பி வருவார்னு நினைக்கிறேன் என்று கூறினான்.
சரி என்று கேட்ட கருப்பன் அங்கிருந்த நகரத் தொடங்கினார்.
மாணிக்கத்திற்கு சட்டேன்று ஒரு எண்ணம் தோன்றியது.
உடனே‘‘ ஐயா.. ’’என்று கருப்பனை அழைத்தான் மாணிக்கம்.
சொல்லு தம்பி என்று கேட்ட அவரிடம்… ஐயா ஏதாவது சொல்லணும்மா… அல்லது வேறு எதுவும் வேணும்மா… என்று கேட்டான்.
இல்ல தம்பி ஒன்றும் இல்லை சும்மா தான் என்று சொல்லிவிட்டு விருவிருவென்று நகர்ந்து சென்றார்.
அவரது பரிதாப நிலையை பார்த்து அவனுக்கு மனுசு கேட்கவில்லை.
சிறிது நேரத்திற்கு பின்னர் மாணிக்கத்தின் தந்தை முத்தையா வீட்டுக்கு வந்தார்.
அவரிடம், கருப்பன் ஐயா இரண்டு முறை தேடி வந்தார் என்று கூறினான் மாணிக்கம்.
உடனே தனது மனைவியை அழைத்த முத்தையா, ஐயாவுக்கு ஏதாவது வேணும்மா… என்று கேட்டயா என்று கேட்டார்.
இல்லங்க நான் அவரை பார்க்கவே இல்லை… மாணிக்கம் தான் கடையில் இருந்தான் என்று கூறினார் அவரது மனைவி.
அவன் ஒருத்தான் ரொம்ப கவுரவம் பார்ப்பான் யாரிடமும் எதுவும் கேட்கமாட்டேன்.. சரி நான் போய் அவனை பார்த்துட்டு வரேன்று என்று முத்தையா கிளம்பினார்.
உடனே அவனது மகன் மாணிக்கம், அப்பா அவர் சும்மா தான் உங்களைப் பார்க்க வந்தேன்னு சொன்னார் என்றான்.
இல்லடா… அவனுக்கு கை செலவுக்கு காசே இல்லைன்னு கையில் போட்டிருந்த தங்க மோதிரத்தை கழற்றி கொடுத்து அதை விற்று பணம் வாங்கி வரச்சொன்னான்.
பண்டினத்திற்கு போன நான் அந்த மோதிரத்தை விற்று பணம் வாங்கி வந்திருக்கேன். அந்த பணத்தை கொடுத்தவுடன் தான் அவன் என்னிடம் வீட்டு சமையலுக்கு தேவையான பொருளை வாங்கி சமைத்து சாப்பிடுவான்.
வறுமையிலும் யாரிடமும் கையேந்தக்கூடாது என்று நினைப்பவன் அவன்.
பணத்துக்காக எதுவேண்டுமானாலும் செய்ய நினைக்கும் ஒருசிலர் இருக்கும் இந்த காலகட்டத்தில் இந்த மாதிரி ஒரு ஆள் இருப்பதை நினைத்து எனக்குப் பெருமையா இருக்கு.
நான் இப்பவே அவனைப் பார்த்து இந்தப் பணத்தை கொடுத்திட்டு வந்துடுறேன் என்று கூறி கிளம்பி சென்றார் முத்தையா.
நேராகக் கருப்பன் வீட்டுக்கு சென்ற முத்தையா அந்தப் பணத்தை அவனிடம் கொடுத்தார்.
அதன் பின் கருப்பன் தனது வீட்டு சமையலுக்கு தேவையான பொருட்களை முத்தையா கடையில் வாங்கி தனது மனைவியிடம் கொடுத்து சமைத்து சாப்பிட்டனர்.
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு இந்த வையகமே ஈடாகாது.