செய்திகள்

அனைத்து சி, டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்:

சென்னை, ஜன.5-

தமிழக அரசின் அனைத்து சி, டி பிரிவு பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நிதித்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முறையான காலமுறை சம்பளம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் காலமுறை சம்பளம் பெறும் ஆசிரியர்கள், பணியாளர்கள், 30 நாட்கள் ஊதியத்துக்கு இணையான தொகையைப் பெற்று வந்த முழுநேர மற்றும் பகுதிநேர பணியாளர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் (போனஸ்) வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

ரூ.3 ஆயிரம்

2019–20ம் ஆண்டுக்கு சி, டி பிரிவு சார்ந்த முறையான காலமுறை சம்பளம் பெறும் அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக அரசு பணியாளர்கள், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு போனஸ் வழங்க அரசு ஆணையிடுகிறது.

2019–20ம் ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணியாற்றிய, மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த சத்துணவு திட்ட பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டத்தில் பணியாற்றும் (அங்கன்வாடி, குறுஅங்கன்வாடி) பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள், ஒரு பகுதி தினக்கூலியாக பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றுவோருக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்க அரசு உத்தரவிடுகிறது.

ஓய்வு பெற்றவர்களுக்கு…

மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு ஓய்வூதியதாரர்கள், அனைத்துவகை தனி ஓய்வூதியதாரர்கள் அதாவது, 2017ம் ஆண்டு அக்டோபர் 1ந்தேதி முதல் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர், கிராம நூலகர்கள், துப்புரவு பணியாளர்கள், தோட்டக் காவலர், வேட்டைத்தடுப்புக் காவலர், போலீஸ் நிலைய துப்புரவாளர், ஆயா மற்றும் எந்த பணியாளர் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாலும் அல்லது பணியிடை மரணம் அடைந்திருந்தாலும் பொங்கல் பரிசுத்தொகையாக 500 தொகையை வழங்க அரசு ஆணையிடுகிறது.

இந்த அரசாணை, தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து சி, டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.

யாருக்கு பொருந்தாது?

4-ந் தேதி (நேற்று), அதற்கு பிறகு ஓய்வுபெறுவோருக்கு இது பொருந்தாது. அதுபோல, உலேமா உதவித்தொகை, மாநில சுதந்திர போராட்ட வீரர்களுக்கான உதவித்தொகை பெறுவோர், அறிஞர், சிறந்த மனிதருக்கான சமூக உதவித்தொகை பெறுவோர், சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பெறும் கருணை அடிப்படையில் நியமனம் பெற்ற குடும்ப ஓய்வூதியர்கள், ஏ, பி பிரிவு பதவியில் இருந்து ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஓய்வூதியர்கள், அனைத்திந்திய பணி அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு இது பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *