செய்திகள்

கன்னியாகுமரி பார்லிமெண்ட் தொகுதியில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி

கன்னியாகுமரி பார்லிமெண்ட் தொகுதியில் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி

சென்னை, மார்ச் 6–

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று பாரதீய ஜனதா அறிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடம் காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுடன் ஏப்ரல் 6–ந்தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் அண்ணா தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சிக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாரதீய ஜனதா சார்பில் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் நேற்று இரவு கையெழுத்திட்டனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று பாரதீய ஜனதா டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இன்று வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த முறை மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டு வந்த மேம்பாலங்கள், சுற்றுச்சாலைகள் என வளர்ச்சிப் பணிகள் அவருக்கு பலம் சேர்க்கும். இப்போது மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி இருப்பதால், இடைத்தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றால் மாவட்டத்துக்கு மத்திய அமைச்சர் கிடைப்பார் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்குகளைப் பெற முடியும் என பாரதீய ஜனதா நம்புகிறது.

கடந்த 2014 மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *