செய்திகள்

மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து தரப்படும்: அமைச்சர் காமராஜ் உறுதி

Spread the love

நாங்குனேரி, அக்.9–

நாங்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

நாங்குனேரி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் நாராயணனுக்கு வாக்கு சேகரித்து வரும் அமைச்சர் இரா.காமராஜ், பட்டாபுரம் கிராமத்தில் திண்ணைப் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

சாதாரண மக்கள் வாழ்கின்ற இந்தப்பகுதியில் தேவைகள் அதிகம் உள்ளன. இந்தத் தேவைகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுவோம். குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும். இந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச்.வசந்தகுமார், அவராக முன்வந்து ராஜினாமா செய்தவர். எனவே இந்தத் தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல். சாதாரணத் தொண்டனை நம்பித்தான் அண்ணா தி.மு.க. இருக்கிறது. இங்கு போட்டியிடுகின்ற நாராயணன் சாதாரணத் தொண்டன். மக்களின் அடிப்படைத் தேவைகளையும், பிரச்சினைகளையும் நன்கு அறிந்தவர். எனவே என்றும் உங்களோடு இருந்து உங்களுக்கு பணி செய்வார் என்றார்.

உறுதிமொழி

பின்னர் அமைச்சர் காமராஜ், வேட்பாளர் நாராயணன் ஆகியோர் அப்பகுதியில் பிரச்சாரம் செய்தனர். அப்போது வேட்பாளர் நாராணயன் பேசும்போது, சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவன் நான். அடுத்து வருகின்ற தேர்தலிலும் அண்ணா தி.மு.க ஆட்சி தொடரவேண்டும். என்னைத் தேர்ந்தெடுத்தால் 100 சதவீதம் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது ஒன்றியச் செயலாளர் விஜயகுமார், மாவட்டப் பிரதிநிதி வள்ளியூர் முத்துராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் வாகைகுளம், சிறுமளஞ்சி, சமாதானபுரம், முத்துலாபுரம், ஏமன்குளம், பரப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர் காமராஜ் பிரசாரம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *