சிறுகதை

பொறுமை | ராஜா செல்ல முத்து

Spread the love

அன்றும் தன் வீட்டில் வந்து உட்கார்ந்திருந்த செந்திலைப் பார்த்ததும் சீத்தாராமனுக்கு கோபம் கோபமாய் வந்தது. அவன் உட்கார்ந்திருக்கும் தோரணையே இவன் கொஞ்சம் திமிர்ப்பிடித்தவன் என்றே தோன்றியது.

‘‘என்ன..?’’ என்று கேட்டதும்.

‘‘சார்.. அந்த வேல..’’ என்று தலையைச் சொறிந்து கொண்டே கேட்டான்.

‘‘எந்த வேலைய்யா..?’’ அப்படிக் கேட்கும்போதே சீத்தாராமனின் பேச்சு கொஞ்சம் மூர்க்கமாயிருந்தது.

‘‘நேத்து கோபால் சார்.. வீட்டுக்கு போகச் சொன்னீங்களே..! – அதான்..’’ என்று செந்தில் சொல்ல

‘‘ஓ.. அதுவா..? நேத்து நீ.. போயிட்டு வந்தயில்ல..’’ அவர் கேட்கும்போதே அவர் பேச்சில் கொஞ்சம் நக்கல் தெரிந்தது.

‘‘ஆமா சார்..’’

‘‘ம்.. – நான் சொன்ன கோபால் கிட்ட போயிட்டு வந்திட்ட அப்பிடித்தானே..!’’

‘‘எஸ் சார்..’’ அவன் பேசும் போதே மூர்க்கம் தெரிந்தது.

‘‘ஒன்னைய கோபால் பாத்தாரா..?’’

‘‘எஸ் சார்..’’

‘‘என்ன சொன்னார்..?’’

‘‘நீ.. போயி சீத்தாராமன பாரு.. அவரு சொல்லுவாரு.. இதத்தான் சொல்லிவிட்டார் சார்..’’

‘‘ம்… கோபால் சார்.. வேற எதுவுமே பேசலியா..?’’ என்ற சீத்தாராமனின் கேள்விக்கு

‘‘இல்ல சார்..வேற எதுவும் சொல்லல..உங்கள பாக்க மட்டும் தான் சொன்னாரு..’’ என்று எதிர் பதில் தந்தான் செந்தில்.

‘‘ம்ம்..’’ – என்று பெருமூச்சை பெரிய மூச்சாய் வெளிவிட்ட சீத்தாராமன்

‘‘செந்தில்..’’

‘‘எஸ் சார்..’’

‘‘நீ.. என்ன படிச்சிருக்க..?’’

‘‘பிஎஸ்சி சார்..’’

‘‘ம்ம்.. – ரெகுலர் தானே..’’

‘‘ஆமா..’’ இதைச் சொல்லும் போதே அசடு வழிந்தான்.

‘‘அரியர்ஸ் ஏதும் இல்லையே..!’’

‘‘இல்ல சார்.. கம்ப்ளீட் பண்ணிட்டேன்..’’

‘‘ஓ.. – இருக்கட்டும்.. இருக்கட்டும்….கோபால்சார் வீட்டுக்கு எத்தன மணிக்கு போன..?’’

‘‘காலையில பதினோரு மணிக்கு சார்..’’

‘‘ஒன்னைய எத்தன மணிக்கு போகச் சொன்னேன்..’’

‘‘பத்து மணிக்கு சார்..’’ சொல்லும் போதே தலையைச் சொறிந்தான்.

‘‘போன டைம் தப்பு..அதுக்கு மேல வேற என்ன பண்ணுனீங்க..?’’

‘‘வேற ஏதும் பண்ணல் சார்..’’ ரொம்பவே வேகமாகப் பேசினான்.

‘‘உண்மையாவா..?’’

‘‘ஆமா சார்..’’

‘‘வேற ஏதும் நீ.. பண்ணலையா..?’’

‘‘எஸ் சார்..’’

‘‘ம்ம்..’’ – என்ற சீத்தா ராமன் தலையை மேலும் கீழும் ஆட்டினார்.

‘‘அப்ப நீ.. எதுவுமே செய்யல..’’

‘‘ஆமா சார்..’’ என்று அடித்துப்பேசினான்.

‘‘கோபால ஒன்னைய நான் எதுக்கு பாக்க அனுப்பினேன்..’’

‘‘வேலைக்கு சார்..’’

‘‘அப்பிடியா..?’’ என்று கேட்ட சீத்தாராமன் எழுந்து போய் சரிசமமாக இல்லாமல் தொங்கிக் கொண்டிருந்த புகைப்படத்தைச் சரி செய்தார்.

‘‘சரி நீ.. வீட்டுக்குப் போகலாம்..’’ என்று ஒற்றை வார்த்தையில் சொல்ல செந்திலுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

‘‘என்ன சொல்றீங்க.. சார்..’’ என்று கொஞ்சம் அதிர்ச்சியாகவே கேட்டான்.

‘‘ஆமா.. செந்தில் டிகிரி படிச்சிருக்கிற உனக்கு பழக்கவழக்கம் சரியில்ல.. அடுத்தவங்க கிட்ட எப்பிடி நடந்துக்கிறனுன்னு தெரியல.. அறிவுங்கிறது வேற.. ஒழுக்கம் பணிவுங்கிறது வேற.. அது உன்கிட்ட இல்ல.. ஒன்னால எங்க போனாலும் வேல செய்ய முடியாது..’’என்று ஒரே போடாகப் போட்டார்.

‘‘சார் என்ன சொல்றீங்க..? பதறினான் செந்தில்.

‘‘ஆமாப்பா.. நீ..கோபால் வீட்டுல என்ன பண்ணுனேன்னு நீ.. சொல்லல ஒன்னைய எத்தன தடவ கேட்டேன். அத நீ.. சொல்லவே இல்ல. ஆனா..! கோபால் என் கிட்ட சொல்லிட்டாரு..’’ என்று சீத்தாராமன் சொன்ன போது

‘‘சார்.. சார்.., அப்பிடி தப்பா ஏதும் நான் எதுவும் பண்ணலியே..! சார்..’’ என்று முறையிட்டான் செந்தில்.

‘‘தம்பி பதறாதே.. பெரிய தப்பு எதுவும் நீ.. பண்ணல.. தான் ஆனா.. நீ.. பண்ணுனது சின்னத்தப்பு தான். ஆனா..! அது ஒன் கிட்ட பொறுப்பு இல்லன்னு காட்டிப்புடுச்சே..!’’ என்று மேலும் பூடகம் போட்டார் சீத்தாராமன்.

‘‘சார்.. என்னன்னு சொல்லுங்க சார்..’’ என்று அவன் மறுபடியும் கேட்க

‘‘செந்தில் கோபால் வீட்டுக்கு நான் சொன்ன நேரத்துக்கு நீ.. போகல அப்படித்தானே..!’’

‘‘எஸ் சார்..’’

‘‘ம் – அப்பிடி லேட்டா போனா நீ.. அவரு வீட்டுக்குப் போனதும் முதல் காலிங்பெல் அடிச்சியா..?’’

‘‘ஆமா சார்..’’

‘‘அதுக்கப்புறம் மறுபடியும் காலிங்பெல் அடிச்சியா..?’’

‘‘ஆமா சார்..’’

‘‘அதுக்கப்புறமும் காலிங் பெல் அடிச்சியா..?’’

‘‘ஆமா சார்..’’

‘‘ம்.. – அதான் ஒன்னோட தப்பு..’’ என்றார் சீத்தா ராமன்.

‘‘பெல் அடிச்சது தப்பா சார்..’’ என்று தன்னை மறுபடியும் நியாயப்படுத்த முனைந்தான் செந்தில்.

‘‘தம்பி.. பெல் அடிச்சது தப்பில்ல.. ஆனா..! ஒரு பெல்லுக்கும் இன்னொரு பெல்லுக்கும் இடைவெளி இல்லாம நீ.. இத்தன பெல்ல அடிக்கிற நீ.. பொறுமையா.. செய்ய வேண்டிய வேலய நீ.. செய்ய மாட்டன்னு ஒன்னைய வேலையில சேக்க முடியாதுன்னு சொல்லிட்டாருப்பா..’’ என்று சீத்தாராமன் சொன்னான்..

‘‘சார்..’’ என்று உருகிப் பேசினான் செந்தில்.

‘‘தம்பி.. தம்பி.. நமக்கு நல்லதுன்னு தெரியுறது அடுத்தவங்களுக்கு தப்பா தான் தெரியும். சரி போயிட்டு வா.. அப்பறம் பாக்கலாம்..’’ என்று சீத்தாராமன் சொன்னதும் தூக்கி வாரிப்போட்டது செந்திலுக்கு.

‘‘சார்..நான் பண்ணுனது தப்பு சார்..’’ என்று மறுபடியும் அவன் கெஞ்ச

‘‘தம்பி..போயிட்டு வாங்க..நான் சொல்லி அனுப்புறேன்..’’ என்று சொல்லும்போது சீத்தாராமனின் வார்த்தைகளில் சுரம் இல்லை என்பது செந்திலுக்குத் தெளிவாகவே தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *