சென்னை, மார்ச்.1-
தமிழக தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவத்தினர் தமிழகம் வந்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு பணிக்காகவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நள்ளிரவு டெல்லியில் இருந்து வந்த சிறப்பு ரெயிலில் 11 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்தனர். மேலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடுதலாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் சென்னை சென்டிரல் வந்தடைந்தனர். இந்த துணை ராணுவத்தினர் அனைவரும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேலம்
அந்த வகையில் சேலம் மாநகரம் மற்றும் மாவட்டப் பகுதிகளின் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் 189 பேர் நேற்று ரெயில் மூலம் சேலம் வந்தனர்.
எஸ்பி சிவகுமார்பாண்டே தலைமையில் வந்த துணை ராணுவத்தினரில் 91 பேர் சேலம் மாவட்ட காவல்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் ஓமலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர். தருமபுரி மாவட்ட தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவப் படை வீரர்கள் 90 பேர் வருகை தந்துள்ளனர்.
கோவை
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 94 பேர் (ஒரு கம்பெனி) ரெயில் மூலம் கோவை வந்தனர். அவர்கள் கோவை ராம்நகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு படையினர் தங்களின் உடைமைகள், துப்பாக்கிகள், சமையலுக்கு தேவையான அடுப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து வந்து உள்ளனர். போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து துணை ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு, வாகன சோதனை, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.