செய்திகள்

1849 பயனாளிகளுக்கு ரூ.18.5 கோடி வீட்டுமனைப் பட்டா: அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

வேலூர், பிப். 19–

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் 1849 பயனாளிகளுக்கு ரூ.18 கோடி 49 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணியை அமைச்சர் கே.சி. வீரமணி துவக்கி வைத்தார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் சிறப்பு வரன்முறை திட்டத்தின்கீழ் 1849 பயனாளிகளுக்கு ரூ.18 கோடி 49 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணியையும், முதலமைச்சரின் 22 அம்மா மினி கிளினிக்குகளையும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற விழாவில் வருவாய் துறை சார்பில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 145 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 45 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டாக்களையும், சமுக நலத்துறை சார்பில் 960 பயனாளிகளுக்கு ரூ. 9 கோடியே 60 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகள் வழங்கப்பட்டது.

அமைச்சர் கே.சி. வீரமணி பேசியதாவது:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து பட்டா இல்லாமல் இருந்த 1 லட்சம் வீடுகளுக்கு சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்க ஆணையிட்டுள்ளார். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் வருவாய் துறை சார்பில் சிறப்பு வரன்முறை திட்டத்தின்கீழ் இன்று 401 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் சமுக நலத்துறை சார்பில் 3214 பயனாளிகளுக்கு ரூ.23 கோடியே 59 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 31 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.238 கோடியே 7 லட்சம் மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு அருகிலுள்ள 25 ஏக்கர் நிலத்தில் குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம், சட்ட கல்லூரி மாணவர் விடுதி, கேந்திர வித்யாலையா பள்ளி, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலகம், வட்டார மருத்துவமனை, மாவட்ட பல்திறன் மையம், போதைப் பொருள் தடுப்பு காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகம், மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் அலுவலகம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் என 9 அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காட்பாடி விஐடி கல்லூரி அருகில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 37 ஏக்கர் பரப்பளவில் ரூ. 16 கோடியே 45 லட்சம் மதிப்பில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டுமானப்பணிகள் முடிவுற்றுள்ளது. 23–ந் தேதி தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கழிஞ்சூர், செங்குட்டை ஆகிய பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் கே.சி. வீரமணி திறந்து வைத்து கர்பிணிதாய்மார்களுக்கு அம்மா சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், துணை இயக்குநர், சுகாதார பணிகள் மரு.மணிவண்ணன், மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர் எஸ்.ஆர். கே. அப்பு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி. ராமு, மாவட்ட பால்வள தலைவர் வேலழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாநகர் நல அலுவலர் சித்ரசேனா, நகராட்சி பொறியாளர் சீனிவாசன், வட்டாட்சியர்கள் பழனி, ரமேஷ், பாலமுருகன், துணை இக்குநர் நேர்முக உதவியாளர் பாலசுந்தரம், மாவட்ட வேளாண் விற்பனைக்குழு துணை தலைவர் குப்புசாமி, அறங்காவல் குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் , சமூக நலத்துறைஅலுவலர்கள் , வருவாய் துறை அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *