செய்திகள்

சர்வாதிகார ஆட்சி நடத்தும் பாஜக: மம்தா பானர்ஜி கடும் தாக்கு

கொல்கத்தா, அக்.4–

”நாட்டில், சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும், பாரதீய ஜனதா அரசு, தலித் மக்களை வாட்டி வதைக்கும் தொற்று நோயாக உருவெடுத்துள்ளது,” என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் பலியான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற திரிணாமுல் எம்.பி.,க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் திரிணாமுல் எம்.பி., ஓ.பிரையன் கீழே தள்ளப்பட்டு விழுந்தார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பெண் எம்.பி., பிரதிமா மண்டலும் தள்ளு முள்ளுக்கு ஆளானார்.

இச்சம்பவத்தை கண்டித்தும், ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க கோரியும், மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ், நேற்று கண்டன ஊர்வலம் நடத்தியது. கொல்கத்தாவில் நடந்த ஊர்வலத்தில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்; அப்போது அவர் பேசியதாவது: கொரானாவை விட, மிக கொடிய தொற்றாக, பா.ஜ., உருவெடுத்துள்ளது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான அராஜகத்தை, கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த அநீதிகளுக்கு எதிராக, அனைவரும் அணி திரள வேண்டும். தலித் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக, நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *