சிறுகதை

விளையாட்டல்ல வாழ்க்கை–20 | டிக்ரோஸ்

பஸ், பஸ்… என ஊரே அதிரும்படி அலறிக்கொண்டே பஸ்சை பிடிக்க ஓடினாள் வானதி.

அவளுடன் சினேகிதி கல்பனாவும் தான்!

மாஸ்க் அணிந்த வாயில் இருந்து வந்த சத்தம் அவர்களின் காதுகளில் மட்டுமே ரீங்காரித்தது!

பல மாத ஆன்லைன் வகுப்புகளுக்குப் பிறகு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஒரு வழியாக கல்லூரி வர அழைப்பு வந்த நாளில் வானதியும் கல்பனாவும் ஆடை, அலங்கார ஷாப்பிங்குகளை ஆன்லைனில் முடித்துக் கொண்டனர்.

புதுச்செருப்பு, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு இரண்டு தெரு தள்ளி இருந்த கல்பனா இவள் வீட்டிற்கு வந்து ‘ஓலா, ஹூபரை’ புக் பண்ண முயற்சித்து தோல்வி அடைந்தனர்.

காலை 8.50 மணிக்கு பஸ்சை பிடித்தால் 9.15 மணிக்கெல்லாம் மாநில கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து விடலாம், மெல்ல சென்றால் கூட 9.30 மணி துவக்க நேர வகுப்பிற்குள் சென்று விட முடியும்!

ஆனால் விதி யாரை விட்டது… அதோ 8.50 மணி பஸ் காலியாகவே புறப்பட்டு செல்ல ஓட்டப் பந்தய வீராங்கனைகளாக மாறியும் பிடிக்க முடியவில்லை. பரவாயில்லை 9 மணி பஸ்சில் ஏறினால் எப்படியாவது முதல் வகுப்புக்கு சென்று விடலாம் என மனதை தேற்றிக்கொண்டு இருந்த போது தான், பாலு கண்ணில் பட்டான்!

பாலு வானதியின் பள்ளிக்கால சீனியர். அவன் படித்த புத்தகங்களை அண்ணன் ராமுவை அனுப்பியோ, அல்லது அம்மாவோ சென்று வாங்கி வந்து விடுவாள்.

இது 10–ம் வகுப்பு வரை தொடர்ந்த சங்கதி, ஆனால் பிளஸ் டூவில் இவளோ பொருளாதார பாடங்களை எடுத்ததால் பாலுவின் கணக்கு, விஞ்ஞான புத்தகங்கள் சரிபட்டு வராததால் புத்தகம் வாங்கும் படலம் நின்று விட்டது.

அடிக்கடி ராமுவை பார்க்க வரும் பாலு தவறாமல் வானதியிடம் பேசி விட்டு செல்வான், அவ்வப்போது தன் வீட்டு பலகாரங்களை கொடுத்து விட்டும் செல்வான்.

பாலு பேட்மிட்டன் விளையாட்டில், மாநில அளவில் முன்னணி பிளேயர்!

‘இப்படி ஓடிப் போய்தான் பஸ்சை பிடிச்சி சரியான நேரத்திற்கு கிளாஸ்சுக்கு போகணுமா?’ என கல்பனாவிடம் கேட்டபடி, ‘ஒரு வேளை கேர்ள் பிரண்ட் யாராவது காத்திருப்பாளோ…’ என யோசித்தாள்.

அண்ணனிடமோ, தன்னிடமோ இதுவரை ராமு எதையும் மறைத்ததில்லை…

இன்று 9 மணி பஸ் சரியாக 9.02 க்கு தான் வந்தது. பஸ்சில் ஏறுபவர்களை எண்ணி ஏற அனுமதித்துக் கொண்டு இருந்தார் கன்டெக்டர். 50 சதவிகித சீட் எண்ணிக்கை மட்டுமே அனுமதி!

கடைசியாக ஏறிய வானதி, கல்பனாவை சற்றே உற்றுப்பார்த்த பார்வையில் ஒருவரை இறக்கி விட வேண்டுமே என்ற தீர்க்கம் கண்ணில் தெரிந்தது.

ஆனால் தராசில் சரி நிகர் சமமாக எடைபோடும் பூனை– எலி கதையில் வரும் குரங்கு போல் இறுதியாக ஏறிய பயணியை 50 சதவிகிதம் அறுத்தெரிந்து விட்டால் கணக்கு சரியாகி விடும் என்று யோசிக்க, ‘அப்படினா அரை டிக்கெட் ரேட்டா? என பயணி ‘வெட்டு ஒண்ணு துண்டு இரண்டு’ என படக்கென கேட்டு விட்டால்?

குழப்பத்தில் விசிலை இரட்டிப்பாய் ஊதி விட்டதால் டிரைவர் இந்த கணக்கு வழக்கில் ஈடுபட நேரமின்றி ‘விடுக்’ என்று கியரை போட்டு குலுக்கலுடன் பஸ்சை இயக்கி ரேசில் ஓடும் பந்தய வீரராக மாறி ஐந்து நிமிடங்கள் முன்பே இவர்களை மாநில கல்லூரி ஸ்டாப்பில் இறக்கி விட்டார்.

கல்லூரியில் நுழைந்தவுடன் யார் எவர் என்று முகம் தெரியாத பலர் வரிசையாக நின்றபடி வணக்கம் கூறியபடி சைகைக் காட்டி கையை நீட்டச் சொன்னார்கள், ஜுரம் இருக்கா? என்பதை ஆராய்ந்து விட்டு, கைகளுக்கு சானிடைசர் அடித்து விட்டு அனுமதித்தனர்.

முன்பெல்லாம் கல்லூரி ஆரம்ப நாளில் மாணவர் சங்கத் தேர்தல்களில் நிற்க இருக்கும் வேட்பாளர்களின் நட்பு வட்டம் ரோசாப்பூ, பிட் நோட்டீஸ் கூடவே ‘மொக்க ஜோக்’ தந்து வரவேற்ற குதூகல ஆரவாரம் இப்போது இல்லையே என மனம் நொந்தது!

விறுவிறுவென 9.25 மணிக்கே வகுப்பறையில் நுழைந்து விட்ட வானதி, கல்பனாவிடம் தனது புத்தகங்களை தந்து விட்டு மெல்ல விளையாட்டுத்துறை பகுதிக்கு சென்றாள்.

வானதி பஸ்சை பிடிக்க வேகமாக ஓடாத மாணவியாக இருந்தாலும் 100 மீட்டர் வேக ஓட்டபந்தய வீராங்கனை! பள்ளி அளவில் ஓட களம் இறங்கினால் விசில் அடித்த மறு நிமிடம் புயலாய் மாறி சூறாவளியாய் உயர்ந்து இறுதி கோட்டை தொட்ட பிறகே மீண்டும் மூச்சு விடுவாள்!

இன்று மாலை ஓட்டப் பயிற்சி உண்டா? என விசாரிக்கவே விளையாட்டுத்துறை பக்கம் சென்றால் நிச்சயம் பாலுவும் கண்ணில் படலாம் என்ற ஆர்வமும் அவள் மனதில் இதயதுடிப்பை 148 வரை அதிகரிக்க வைத்தது.

அங்கே அவள் எதிர்பார்த்தபடி பாலு சில நண்பர்களுடன் தன் கையில் பேட்மிட்டன் ராக்கெட்டுடன் காற்றை அடித்தபடி பேசிக் கொண்டே இருந்தவன், இவள் பக்கம் திரும்பி பார்க்க வானதியின் இதய துடிப்பு 183 தாண்டியது!

தன் கைக் கடிகாரத்தில் இருக்கும் டிஜிட்டல் தகவல்களில் இதயத் துடிப்பு சுட்டிக் காட்டும் வசதி இருந்ததை பார்க்க, ‘கடிகாரம் பொய்த்ததா?’ என அவள் விழிகள் கேள்விக்குறியாய் விரிந்தது. காரணம் அது காட்டிய இதய துடிப்பு 80 தான்!

‘ஏய் வானதி, என்ன இங்கே…’ என கேட்டபடி பாலு நெருங்கி வர அவளது டிஜிட்டல் கடிகாரம் நிச்சயம் சார்ஜ் இழந்து செயல்படாமல் இருக்க வேண்டும்.

இதயமோ 200 துடிப்புகள் தாண்டினாலும் யூகங்கள் நொடிப்பொழுதில் ஓடிவிட்டாலும் இவளது கடிகாரத்தில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லையே!

சுதாரித்துக் கொண்ட வானதி மாஸ்க்கை சற்றே இறக்கியபடி தனது அழகிய சிரிப்பை உதிர்த்து ‘பயிற்சி வகுப்புகள் உண்டா?’ எனக் கேட்டாள்.

யெஸ், உண்டு .ஆனா கல்லூரி மைதானத்தில் கிடையாது, மாலை 5 மணி முதல் 7 மணி வரை வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் உள்ளரங்கில் நீ, நான், வேறு சில விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சஞ்சீவ் சச்தேவா சாரும் வருவார் என்றான்.

‘பேட்மிண்டன் பயிற்சியாளர் எனக்கெதற்கு’ என கேட்ட அவள் கண்களை பார்த்து ‘அவர் இன்று யோகா பயிற்சியாளர் ஒருவரை அழைத்து வருவதால் நீயும் வரலாம்’ என அழைப்பு விடுத்தான்.

அதே வேகத்தில் பாலு இயற்பியல் துறை பக்கமாக சென்று விட்டான். மாலை நேர எதிர்பார்ப்புகளுடன் வானதி தன் வகுப்புக்குள் நுழைந்தாள்.

****

அன்று மாலை வானதியின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அன்றைய யோகா பயிற்சியாளர் தந்த ஆசனப் பயிற்சிகளை துல்லியமாக செய்த அவளது திறமையை கண்டு இதர பயிற்சியாளர்களும் இவளை தினமும் யோகா பயிற்சிக்கு வீடியோ கான்பிரன்சிங்கில் இணைத்துக் கொண்டனர்.

‘ரொம்ப தேங்க்ஸ் பாலு, இதில் சேர எனக்கு ரொம்ப நாள் ஆசை’ என்று கூறியபடி, ‘ஆனா என்னிடம் இருக்கும் மொபைல் போனில் பயிற்சியாளர் மட்டுமே தெரிகிறார். உனது லேப்டாப்பில் வருவது போல் எல்லோரும் தெரிவது இல்லை’ என்று அலுத்துக் கொண்டாள்.

இம்முறையும் தன் அண்ணன் வழியாக பாலுவின் முந்தைய வெர்சன் லேப்டாப் தற்போது வானதி கையில் தவழ வந்து விட்டது!

––––––––––––––––––– ******** –––––––––––––

decrose1963@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *