நாடும் நடப்பும்

திகைக்காதே, தயங்காதே: தடுப்பூசியை போட்டுக் கொள்வோம் கொரோனாவை வீழ்த்துவோம்

சமீபமாக பரஸ்பரம் பேசிக் கொள்ளப்படும் ஒன்று ‘தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு விட்டீர்களா’ என்பதே! குடும்பம் குடும்பமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரும் கடந்த 2 வாரங்களாக தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு சகஜமாகவே இருப்பதாக கூறி வந்தாலும் கொரோனா தடுப்பூசி தேவைதானா? என்ற விவாதம் ஏற்பட்டு வருகிறது., குறிப்பாக கோவிஷீல்ட்; அல்லது கோவேக்சீனா? தேவைதானா? என்ற விவாதம் ஏற்பட்டு வருகிறது.

இன்று முன்களப் பணியாளர்களான மருத்துவம் சார்ந்த ஊழியர்களில் பலரும் போட்டுக் கொள்ளாமல் பல்வேறு காரணங்களை கூறித் தடுப்பூசியை போடாமல் இருக்கிறார்கள்.

இப்படி தடுப்பூசிக்கு தயங்குவது ஏன்? அது சரியா?

கோவிட்–19 தொற்று நோயை கடந்த ஆண்டு இந்த நாளில் நாம் புதுமையான கொரோனா? என்று அதாவது Novel Corona என்று தான் அழைத்தோம்.

நாடு முழுவதும் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் பரவுவது பெருமளவு கட்டுக்குள் வந்தது. தற்போது பல நாடுகளில் உள்ளதுபோலவே அடுத்தகட்ட அலைகள் உருவாகும் சூழல் உள்ளது.

இன்று நாம் அதற்கான தடுப்பூசியை உபயோகிக்க ஆரம்பித்து விட்டாலும் அது உண்மையில் தடுப்பு சக்தி கொண்டதா? போட்டுக் கொண்ட பின் பின் விளைவுகள் ஏதேனும் வருமா? மது பழக்கம் உள்ளவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகு சாராய சமாச்சாரத்தை தொடரலாமா? என்பன மிக அதிகமான கூகுள் தேடல் ஆகும்.

ஆய்வு அறிக்கைகள் கூறுவது என்ன? பிரிட்டனில் உருவாக்கி இந்தியாவில் உலக தேவையில் 60 சதவிகிதத்தை உற்பத்தி செய்யப்பட்டு வரும் கோவிஷீல்ட் முதல் தவணையில் போட்டவுடன் 54 சதவிகித தடுப்பாற்றலை தந்து விடுகிறதாம்.

மீண்டும் 4 வாரங்களுக்குப் பிறகு போட்டுக் கொண்ட பிறகு 82% தடுப்பாற்றலை தந்து விடுகிறதாம். ஒருவேளை 3வது முறையாக அடுத்த 4 வாரங்களுக்குப் பிறகு போட்டுக் கொண்டால் பூரண தடுப்பாற்றலை பெறலாம் என்று ஆய்வுகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

நம் நாட்டில் மருத்துவ செலவுக்கு தேவைப்படும் பண வசதி மிகக் குறைவாக இருப்பதால் இரண்டே போதும் என்று முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

அப்படி என்றால் கோவேக்சின் சிறப்பானதா? என்றாலும் அதன் முழு ஆய்வு அறிக்கை வெளிவராத நிலையில் அவசர கால அடிப்படையில் இரண்டாம் கட்ட சோதனையின் போதே உபயோகத்திற்கு வந்து விட்டது.

ரஷ்யாவின்’ ஸ்புட்நிக்’ தடுப்பூசியும் ரஷ்யாவில் உபயோகிக்கப்பட்டாலும் அமெரிக்கா ஏற்க மறுத்தாலும் அதை மறைமுகமாக எதிர்ப்பதாலும் நல்ல மருந்தா? இல்லையா? என்பது புரியாத குழப்பமாகவே இருக்கிறது.

ஆக மொத்தம் தடுப்பூசி அரசியல் காரணங்களால் உலக மக்கள் அனைவரையும் சென்றடையாமல் இருக்கிறது.

உலகெங்கும் கிட்டத்தட்ட 48 நாடுகளுக்கு இந்தியாவில் தயாரான கோவிஷீல்ட் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டு, உபயோகிக்கப்பட்டு உரிய நேரத்தில் தந்து உதவியதற்காக பாராட்டையும் பெற்றுள்ளது.

கனடா போன்ற வளர்ந்த நாடு கூட இந்தியாவின் தயாரிப்பான கோவிஷீல்டை வாங்கி தங்களது மக்களை உபயோகிக்க அனுமதி தந்துள்ளது.

சுதந்திரத்தை 1947ல் நாம் பெற்ற சமயத்தில் மலேரியா காய்ச்சலுக்கு பலியானவர்கள் பல லட்சம் பேர் ஆவர். அதைத் தடுக்க அச்சமயத்தில் கனடாவிடம் இருந்தே நாம் மலேரியா தடுப்பு மருந்தை வாங்கினோம்.

73 ஆண்டுகளில் இன்றோ நம் மண்ணில் தயாரான கோவிஷீல்டை அவர்களுக்கு அனுப்பும் வளர்ந்த நாடாக உயர்ந்துள்ளோம்.

அதுதவிர பல ஏழை நாடுகள் தங்கள் பிரஜைகளை காப்பாற்ற இந்தியாவிடம் உதவி கேட்க நாம் அவற்றை இலவசமாகவே கூட அனுப்பி வருகிறோம்.

இப்படி உலகமே நமது தயாரிப்பின் மீது நம்பிக்கை வைத்திருக்க நாம் இனியும் தாமதிக்காமல் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தயக்கம் காட்டக்கூடாது.

ஊசி என்றால் நம்மில் பலருக்கு பயம்! மறுநாள் போட்டுக் கொள்ள முன்னாளில் தூங்காமல் பயத்துடன் மனக்குழப்பத்தில் இருப்பவர்களின் நிலை புரிகிறது.

மிகவும் நம்பகமான ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில் ‘லேன்சட்’ போன்ற மருத்துவ அறிவியல் ஆய்வேடுகள் எல்லாம் கோவிஷீல்ட் மீது முழு நம்பிக்கை வைத்து இது நல்ல தடுப்பூசி என்று வெளிப்படையாக கூறி விட்டது.

மருத்துவ பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பல்துறை நிபுணர்கள் எல்லோருமே தயக்கமின்றி உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தால் அதன் மீது இருக்கும் அச்சங்கள் விலகி நாடே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன் வந்து விடும்.

சமூக உணர்வுடன் சிந்தனையாளர்கள் தயக்கமின்றி போட்டுக் கொண்ட பின் அருகாமையில் இருக்கும் பொதுமக்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக இருந்து அவர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கலாம். அதை புரிந்து கொண்டு உடனே தடுப்பூசியை பெற முன் வர வேண்டும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2–-வது அலை உருவாவதை தடுத்து நிறுத்த அனைத்து மாநில முதல்வர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியும் நேற்றைய சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

அதை உணர்ந்து திகைக்காமல், தயங்காமல் தடுப்பூசியை போட்டுக் கொள்வோம்; கொரோனாவை வீழ்த்துவோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *