நாடும் நடப்பும்

ஆரோக்கியமாய் வல்லரசாக உயர்வோம்

கடந்த ஆண்டு உலகமே கோவிட் பெருந்தொற்றை எதிர்நோக்கிய விதம் இதுவரை மனித குலம் கண்டிராத வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் வல்லரசு அமெரிக்காவும் ஸ்தம்பிக்க வைத்த அந்த பெருந்தொற்றின் நாச சக்தியை ஓரளவு தணிய ஆரம்பித்துள்ள நிலையிலும் உலகம் மீண்டும் பழைய சகஜ நிலையை காணாது தவிக்கிறது.

தடுப்பூசி வந்துவிட்டாலும் பல நூறு கோடி ஜனத்தொகையை சென்றடையச் செய்வதில் உள்ள சிக்கல்களைச் சந்தித்து வருவதை பார்க்கிறோம். ஆனால் கடந்த 12 மாத அனுபவம் சுகாதாரத் துறைக்கு தரப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து விட்டோம்.

இம்முறை நோயை எதிர்த்துப் போராட நவீன விஞ்ஞானமும் கையடக்க செல்போனும் பெரிதும் உதவியதை உணர்ந்துள்ளோம்.

இதே வேகத்துடன் மனித இனத்தின் இதர சவால்களையும் சாமர்த்தியமாக சந்திக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை மறந்து விடக்கூடாது.

பெரும் தொற்றுக்கு இணையான எச்சரிக்கை தரப்பட்டுள்ள மற்றொரு நோய் உடல் பருமன் விவகாரமாகும்!

உடல் பருமனால் தான் ரத்த அழுத்த குறைபாடுகள், சர்க்கரை நோய் வருவதுடன் இதயத்தை பாதித்தும் விடுகிறது. இந்நோய்களால் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 90 சதவீதத்துக்கு மேல் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை!

உடல் பருமனை குறிப்பாக பெரிய தொப்பையைக் கொண்ட ஜனத்தொகை ஆசியாவில் இந்தியர்கள் தான் அதிகமாக இருக்கிறோம்!

இந்த நோயையும் அரசுகளும் தனியார் அமைப்புகளும் களமிறங்கி மக்களை பாதுகாக்க வேண்டிய சட்ட திட்டங்கள் உருவாக வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

அடிப்படையில் உணவுப் பொருட்களில் உப்பு உபயோக அளவை பாதியளவாக குறைக்க நடவடிக்கைகள் அவசியமாகிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பன போன்ற பழமொழிகள் போதிக்கப்பட்டு வளரும் இளம் தலைமுறை இனி உப்பில்லா உணவின் அருமையை உணர்ந்து ஆரோக்கியமான பாரம்பரிய உணவுக்கு மாற வழி கண்டாக வேண்டும்.

உப்பின் அளவு அதிகமாக இருக்கும் கருவாடு, ஊறுகாய், வடகங்கள், ரொட்டி (Bread), பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ‘உப்பு அதிகம் – ஜாக்கிரதை’ என்ற அபாய எச்சரிக்கை வாசகங்களை அறிமுகப்படுத்தலாம்.

தொப்பையைக் குறைக்க யோகா, நடைப் பயிற்சிகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றின் சிறப்புகளை பள்ளி மாணவர்களுக்கு போதித்து வளர்க்க பாடமாகவும் இருத்தல் வேண்டும்.

உயிர்வாழ ஆக்சிஜன் தேவை, நமது சுவாசத்தின் வாயிலாக வெளியேற்றுவது கார்பன்டை ஆக்சைட் என்பதை போதிக்கும் போதே குடிநீரில் இருப்பது ஆக்சிஜன். ஆனால் அனைத்து வித குளிர்பானங்களிலும் இருப்பதோ கார்பன் டை ஆக்சைட், அதைப் பருகி மகிழ்வதால் உடலுக்கு நல்லதா? என்ற ஆரோக்கியமான விவாதத்தையும் முன்வைத்து பாடம் நடத்தலாம்!

நிதிநிலை அறிக்கைகளிலும் தேர்தல் வாக்குறுதிகளும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி வல்லரசாக்க பல்வேறு உறுதிகளைக் கொண்டு இருந்தாலும் சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்!

ஆக ஆரோக்கியமான மக்கள் இன்றி வல்லரசு கனவு நனவாகாது என்பதை 2020 உணர்த்தி இருப்பதை மறந்து விடக்கூடாது.

ஆரோக்கியமாக வாழ்வோம் ; இந்தியாவை வல்லரசாக உயர்த்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *