முழு தகவல்

கோவிட்-19: தொற்றுநோய்களும் தடுப்பூசியும்!

தொற்றுநோய்கள் என்றால் என்ன?

ஒரு மனிதரிடம் இருந்து மட்டுமின்றி, வேறொரு உயிரினத்தில் இருந்து மற்றொரு மனிதருக்கு எளிதாக பரவும் நோய் பாதிப்பை, தொற்று நோய்கள் என்று அழைக்கின்றனர். சளி, காய்ச்சல், இருமல் போன்ற அனைத்தும் தொற்றுநோய் வகைகள்தான் என்றாலும் இவை அதிக அளிவிலான உடல்நல பாதிப்பையோ உயிரிழப்பையோ ஏற்படுத்தாது.

ஆனால், பெருந்தொற்று நோய்கள் (pandemic) அல்லது கொள்ளை நோய்கள் என்பவை அப்படிப்பட்டதல்ல. பெருந்தொற்றுகளான கொள்ளை நோய்கள் என்பவை நாடுகளின் எல்லைகளைக் கடந்தும் பரவும் தன்மை கொண்டது என்பதுடன், பெருமளவு மனித உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

இதுபோன்ற பெருந்தொற்று நோய்களுக்கு தடுப்பூசியோ அல்லது தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே, அடுத்தடுத்த மனித இன தொடர்ச்சியை பாதுகாக்கும் தீர்வாக இருக்கும். பெரியம்மை, பிளேக், போலியோ போன்றவை பெருந்தொற்று நோய்களுக்கு எடுத்துக்காட்டுகள் என்பதுடன், தடுப்பூசிகள், மருந்துகள் வந்த பிறகுதான் அவற்றை முற்றாக அழிக்க முடிந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அத்தகைய ஒரு கொள்ளைநோய் வகைதான் கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்றும். இதுபோன்ற பெருந்தொற்றுகள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் தோன்றிக்கொண்டேதான் இருக்கும். அதனை மனித இனம் வெற்றி கொண்டு வருவதால்தான், மென்மேலும் நாம் முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்காரணிகள் (pathogen) விலங்குகளிலும், தாவரங்களிலும் நோயை ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம்.

நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால் (physical contact), காற்றின் வழியாக, நீரின் ஊடாக, உணவினால், தொடுகைக்குட்படும் பொருட்களினால் அல்லது ஒரு நோய்க்காவியினால் தொற்றுநோயானது கடத்தப்படலாம்.

விலங்குகளில் காணப்படும் ஒரு தொற்றுநோயானது, மனிதருக்குக் கடத்தப்படும்போது, மனிதரிலும் நோயை ஏற்படுத்துமாயின் அது Zoonotic disease என் அழைக்கப்படும்.பல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சுற்றுச்சூழலில் மனித இனம் ஏற்படுத்தி வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், தொற்றுநோய்த் தடுப்புக்கும், தொற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகளால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பெரியம்மை

பெரியம்மை (Smallpox), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இந்த நோய், உலகில் ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளது. இது Variola major மற்றும் minor ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. இவற்றுள் V. major அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்தனர். V. minor கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறந்தனர்.. உயிர் பிழைத்தவர்களில் பலரும் இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர்.

20 ஆம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 30 கோடி முதல் 50 கோடி மக்கள் இறந்தனர். 1967ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 1 1/2 கோடி மக்கள் அந்நோய் பீடிக்கப்பட்டு அவர்களுள் 20 லட்சம் பேர் இறந்துள்ளனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். ஆனாலும் 1965 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மருந்துதான் பெரியம்மையை முற்று முழுதாக ஒழித்தது. 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில் ஜேனட் பார்க்கர் என்பவர் பெரியம்மை தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் உலகில் எங்கும் அறியப்படவில்லை.

காலரா-வாந்திபேதி

19 ஆம் நூற்றாண்டில் மிக அதிகமாக பரவிய நோய் எனில் காலரா அல்லது வாந்திபேதிதான். 1816 ஆம் ஆண்டு தொடங்கி 1975 ஆம் ஆண்டு வரையில், படிப்படியாக பல்வேறு நாடுகளிலும் 4 கட்டங்களாக வந்த இந்த நோய் மூலம் ஏறத்தாழ 5 முதல் 7 கோடி மக்கள் பலியாகி உள்ளனர். முதல் காலரா தொற்று 1816-1826, ஆண்டுகளில் இந்திய துணைக்கண்டத்தில் பரவியது. வங்காளத்தில் தொடங்கிய இந்த தொற்று, பின்னர் இந்தியா முழுவதும் 1820 ஆம் ஆண்டில் பரவியது. 10,000 பிரிட்டிஷ் துருப்புக்கள் மற்றும் எண்ணற்ற இந்தியர்கள் இந்த தொற்றுநோயால் இறந்தனர்.

பின்னர் இந்த கொடிய நோய் சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு பரவியது. 1817 முதல் 1860 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் சுமார் 2 கோடிக்கு அதிகமானவர்கள் இறந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 1865 முதல் 1917 ஆம் ஆண்டுகளுக்கிடையில் மேலும் 2 கோடி மக்கள் இந்நோய் தாக்கப்பட்டு மாண்டுள்ளனர். 2, 3 மற்றும் 4 ஆம் கட்டங்களில் ஏற்பட்ட காலரா பரவல் மூலம், ரசியா, ஹங்கேரி, செருமனி, லண்டன், பிரான்சு, கனடா, அமெரிக்க ஐக்கிய மாகானங்கள், வேல்ஸ்ல் போன்ற நாடுகளில் மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவிலும் காலரா மூலம் இரண்டு கோடி மக்கள் வரை இறந்துள்ளனர்.

‘ஆசியன் ஃப்ளூ’-புளு

கடந்த 1918ஆம் ஆண்டு பரவி 1920 வரை உலகை அச்சுறுத்திய ஃப்ளூ என்ற சளிக்காய்ச்சலுக்கு, 2 கோடி முதல் சுமார் 5 கோடி பேர் வரை மாண்டனர். 1918ல் ஃப்ளூ காய்ச்சலால் சுமார் 50 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். ஃப்ளூ காய்ச்சல் பரவிய முதல் 25 வாரங்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி பேர் உயிரிழந்தனர். இதில் சிறார்களும் முதியோரும் பெருமளவில் அடங்குவர்.

இதற்கு பின்னர் பரவிய கொடிய நோய் ‘ஆசியன் ஃப்ளூ’. சீனாவில் 1956ஆம் ஆண்டு பரவிய இந்நோய் சிங்கப்பூர், ஹாங்காங், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் பெருமளவில் உயிர்களைக் கொன்றது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.

மலேரியா, எச்ஐவி

மலேரியா என்பது நோய் பரப்பி வாயிலாக பரவும் ஒரு தொற்றுநோயாகும். இது ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்ப வலயம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 35 முதல் 500 கோடி மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு, அவற்றில் 30 லட்சம் மக்கள் வரையில் இந்த நோயினால் இறக்கிறார்கள். மலேரியா தொடர்பான இறப்புகளில் 90 சதவீதம் சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்கிறது. மலேரியா பொதுவாக வறுமையுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது.

எச்.ஐ.வி கிருமியால் உருவாகும் எயிட்ஸ் நோய், முதன்முதலாக ஆப்பிரிக்காவில் தோன்றி ஹைட்டி தீவின் வழியாக 1966 மற்றும் 1972 ஆம் ஆண்டிற்கு இடையில் ஐக்கிய அமெரிக்காவிற்கு பரவியது. உலக சுகாதார அமைப்பானது இந்த வைரசால் ஏற்படும் எய்ட்சு நோயை ஒரு உலகம்பரவு நோயாக அறிவித்துள்ளது.

இது கண்டு பிடிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டிற்குள், உலகில் கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் இத்தீவிர வைரசு தொற்றினால் இறந்துள்ளனர். அதேபோல், காச நோய், தொழுநோய் போன்றவைகளும் தொற்று நோய் வகைகளில் குறிப்பிடத்தக்கது. இந்த நோய்களாலும் உலகம் முழுக்க பல்லாயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்து இறந்து வருகின்றனர்.

மேலும் அறிய… https://tinyurl.com/y4aqsavr

கொரோனா எனும் கோவிட்-19

கோவிட்-19 என்பது கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸால் உருவாகும் ஒரு நோய்த்தொற்று ஆகும். ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட பிறகு, அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கு 14 நாள்கள் ஆகலாம். இது நோய் புலப்பாட்டுக் காலம் எனப்படுகிறது. தாக்குதலுக்கு ஆளான நபருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமலிருக்கலாம் அல்லது மிக இலேசான அறிகுறிகள் காணப்படலாம் (உ.ம். மூக்கு ஒழுகுதல்). நிமோனியாவை (ஒரு நுரையீரல் நோய்த்தொற்று) ஒத்த, மிகக் கடுமையான அறிகுறிகள் கூட காணப்படலாம்.

முக்கிய அறிகுறிகளாவன: காய்ச்சல், இருமல் (புதிய அல்லது மிக கடுமையான நாள்பட்ட இருமல்), சுவை மற்றும் நுகர்வு உணர்விழப்பு (மூக்கடைப்பு இல்லாமல்), மற்றும் மூச்சு விடுவதில் சிரமம். கோவிட்-19 நோய்த்தொற்று பாதித்தவர்களுக்கு பின்வரும் அறிகுறிகள் காணப்படலாம்: • தொண்டைப் புண் • குமட்டல் • வாந்தி • வயிற்றுப்போக்கு கோவிட்-19 பாதித்த பெரும்பாலான நபர்கள் எந்தவித சிக்கலும் இல்லாமல் மீண்டு வந்துவிடுவார்கள்.

சில பேருக்கு, குறிப்பாக குறைவான நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவர்களுக்கு, குறிப்பிட்ட சில உள்ளார்ந்த நோய்த் தொந்தரவுகள் இருப்பவர்களுக்கு (உ.ம். இதய அல்லது சுவாசப் பிரச்சனைகள்), மற்றும் வயதானவர்களுக்கு, நோய் மிகவும் கடுமையானதாக இருக்கலாம் மற்றும் மரணம் கூட ஏற்படலாம். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கு 2 நாள்கள் முன்பிருந்தே நோய் பரப்பும் தன்மை கொண்டவராக இருக்கலாம். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அறிகுறிளற்ற (எந்த அறிகுறிகளும் இல்லாத) நபர் ஒருவர் நோய் பரப்பும் தன்மை கொண்டவராக இருக்கலாம் என்பதே இந்த நோயின் பாதகமாக இருக்கிறது.

கோவிட்-19 பெயர் காரணம்

உலக சுகாதார மையத்தின் சர்வதேச நோய் வகைப் பாட்டியல் (ICD – International Classification of Diseases) அமைப்பு, பிப்ரவரி 11, 2020 அன்று, இப்போது உலகெங்கும் பரவியுள்ள புது வைரஸுக்கு, சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ்-2 (Severe Acute Respiratory Syndrome Coronavirus-2), சுருக்கமாக சார்ஸ்-கோ வி-2 (SARS-Co V-2) என்று பெயரிட்டது. 2003ஆம் ஆண்டு, சார்ஸ் தொற்றுநோய்க்குக் காரணமாக இருந்த வைரஸுடன், இந்தப் புதிய வைரஸ் மரபணுரீதியாகத் தொடர்புடையதாக இருந்ததால் அப்பெயர் வைக்கப்பட்டது. ஆனால், இந்த இரு வைரஸ்களும் வேறு வேறானவை.

மேலும், உலக விலங்கு நல மையம் (World Organization for Animal Health) மற்றும் உணவு மற்றும் விவசாய மையம் (Food and Agricultural Organization), சுருக்கமாக எஃப்.ஏ.ஓ (FAO) ஆகிய அமைப்புகள், முன்னமே உருவாக்கிய விதிமுறைகளின்படி, புதிதாகப் பரவிவரும் நோய்க்கு – ‘கோவிட்-19’ (COVID-19) என்று பெயரிட்டுள்ளது. வைரஸுக்கும் நோய்க்கும் பெயரிடுகையில்

ஐ.சி.டி.வி. மற்றும் உலக சுகாதார மையம் ஆகியவை ஒன்றையொன்று கலந்தாலோசித்து முடிவு செய்யும்.

நோய் தொற்றின் தன்மை, பரவும் முறை குறித்த ஆஸ்திரேலிய அரசின் விரிவான தகவல்கள்

தொற்று நோய்கள் சட்டம்-1897

ஆங்கில ஆட்சியின் கீழான இந்தியாவின் மும்பை மாகாணத்தின் தலைநகரமான மும்பை நகரத்தில் முதன் முதலில் 1897-இல் எர்சினியா பெசுட்டிசு எனும் பாக்டீரியா மூலம் பிளேக் எனும் நோய்த்தொற்று பரவி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். இத்தொற்று நோயைக் கட்டுப்படுத்த வேண்டி அவசர கால நடவடிக்கையாக 1897-இல் பிரிட்டீஸ் இந்தியா நாடாளுமன்றம், தொற்று நோய்கள் சட்டத்தை (Epidemic Diseases Act, 1897) இயற்றியது.

இச்சட்டத்தின் கீழ் தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கவும், தொற்று நோய் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாகாண அரசுகளுக்கு ஆங்கிலேயே அரசு அதிகாரம் வழங்கியது. அதன்படி, இந்தியாவில் அல்லது நாட்டின் ஏதேனும் ஒரு மாநிலத்தில் ஆபத்தான தொற்றுநோய் பரவும் பட்சத்தில் அதைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள சட்டம் போதுமானதல்ல என்று அம்மாநில அரசு கருதினால், நிலைமை சமாளிக்க மாநில அரசுக்கு எல்லையில்லாத அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகிறது.

இந்த சட்டத்தின்படி பிறப்பிக்கப்படும் விதிகளை மீறுவோருக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 188 ஆவது பிரிவின்படி சிறை தண்டனை வழங்க முடியும். இந்த சட்டத்தின்படி பணியாற்றும் அதிகாரிகள் மீது எந்த வழக்குகளும் தொடர முடியாது.

தடுப்பூசிகளின் வரலாறு

சீனர்கள்தான் முதன்முறையாக தடுப்பூசிகளின் முதலாவது வடிவமான அம்மை குத்துதலை கண்டுபிடித்தனர். இதன்படி, ஆரோக்கியமான நபருக்கு நோய்வாய்ப்பட்ட திசுவை புகுத்தி அவருக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே இந்த நுட்பம்.

தடுப்பூசிகள் தோன்றுவதற்கு முன், நோய்களால் உலகம் மிகவும் அபாயகரமான இடமாக இருந்தது. இன்றைய அளவில் தடுக்கப்படக் கூடிய நோய்கள் காரணமாக ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் மரணமடைந்து வந்தனர்.

எட்டு நூற்றாண்டுகள் கழித்து பிரிட்டிஷ் டாக்டர் எட்வர்ட் ஜென்னர் என்பவர், பால் கறந்து விநியோகம் செய்யும் பெண்களுக்கு லேசான பசுஅம்மை நோய் தாக்குதல் ஏற்படுவதையும் அவர்களுக்கு மிகவும் அரிதாகவே பெரியம்மை தாக்குவதையும் கண்டார்.

பெரியம்மை மிகவும் கொடுமையான தொற்றுநோய். இந்த நோய் தாக்கியவர்களில் 30 சதவீதத்தினர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்தோர் பெரும்பாலும் உடல் நிறைய தழும்புகளைக் கொண்டிருந்தனர். அல்லது பார்வையிழந்திருந்தனர். இதனையடுத்து, தடுப்பூசிகள் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த நூற்றாண்டில் தடுப்பூசிகள் கோடிக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளன.

கடந்த நூற்றாண்டில் பல நோய்களின் தாக்கத்தை வெகுவாக குறைக்க இந்த தடுப்பூசிகள் உதவின. 1960களில் முதன் முறையாக தட்டம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பு வரை, சுமார். 26 லட்சம் பேர் ஆண்டு தோறும் தட்டம்மையால் உயிரிழந்து வந்தனர்.

தடுப்பூசிகள் காரணமாக 2000 முதல் 2017 வரை 80 சதவீத தட்டம்மை நோய் மரணங்கள் குறைந்தன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

தடுப்பூசிகளின் பணி என்ன?

‘இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது. ‘செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது பிறவியில் அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் செயற்கை முறையில் தூண்டும்போது கிடைப்பது. இது, நாம் பிறந்த பிறகு, நம் வாழும் காலத்தில் பெறப்படுவது. இது எப்படிச் சாத்தியமாகிறது? ‘முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தை’தான் இங்கு கைகொடுக்கிறது. ஒரு நோய்க்கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.

தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் (Oral vaccines) மூலம் வீரியம் குறைந்த நோய்க்கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக ‘எதிர் அணுக்கள்’ உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழித்துவிடும். இதன் பலனாக, அந்த நோய் நம்மை அண்ட முடியாது. இதுதான் தடுப்பூசிகள் வேலை செய்வதற்கான அடிப்படைத் தத்துவம்.

எழுத்து-தொகுப்பு: மா. இளஞ்செழியன்.

செய்திப் பிரிவு: மக்கள் குரல் இணையதளக் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *