செய்திகள்

குடிமக்கள் பதிவேடு பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு

Spread the love

புதுடெல்லி, பிப்.5-

தேசிய அளவில் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

அசாம் மாநிலத்தில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகமாக உள்ளனர். எனவே, அங்கு குடிமக்கள் பதிவேடு தயாரிக்க ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் அப்பணி நடந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 31ந்தேதி, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 19 லட்சம் பேரின் பெயர் விடுபட்டிருந்தது. நாடு முழுவதும் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபோல், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அதன்மூலம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அவர் கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.கடந்த 31-ந் தேதி, நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையில், தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி எதுவும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், குடிமக்கள் பதிவேடு குறித்த குழப்பங்களுக்கு மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தது.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:- தேசிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *