செய்திகள்

மின்சார மான்ய கட்டணங்களுக்காக ரூ.8,834 கோடி ஒதுக்கீடு

சென்னை, பிப்.23

மின்சார மான்ய கட்டணங்களுக்காக ரூ.8,834 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், அவர் கூறியதாவது:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் நிறுவுதிறனான 16,167 மெகாவாட் உட்பட, மாநிலத்தின் தற்போதைய ஒட்டு மொத்த மின் நிறுவுதிறன் 32,149 மெகாவாட் ஆகும். 2011 ம் ஆண்டு முதல் மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்கள், மின்கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் ஆகியவற்றின் வாயிலாக, 15,745 மெகாவாட் மின்சாரம், மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில், 6,220 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட திட்டங்கள், 50,582 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக, 62,365 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11,510 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட பல்வேறு பணிகள் பரிசீலனையில் உள்ளன. இவ்வாறு, தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றியதோடு அல்லாமல், எதிர்காலங்களிலும் இந்நிலை தொடருவதற்கான நடவடிக்கைகளை அரசு உறுதிசெய்துள்ளது.

34,088 கி.மீ. உயரழுத்த மின்பாதை

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மின்கட்டமைப்பிற்கு உடனடியாகச் செலுத்தும் வசதிகள் உட்பட, மின் தொடரமைப்பு உட்கட்டமைப்பில் இந்த அரசு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. 2011 -12 ஆம் ஆண்டு முதல் 110 கிலோவோல்ட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட 701 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 14,664 சுற்று கிலோமீட்டர் நீளமுள்ள கூடுதல் உயர் அழுத்த மின்பாதைகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன. 110 கிலோவோல்ட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட 128 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை கன்னியாகுமரி இடையிலான தொழில் வழித்தட மின் தொடரமைப்புத் திட்டத்தை 4,333 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் செயல்படுத்தி வருகின்றது. தடையற்ற மற்றும் நிலையான மின்சாரம் வழங்குவதற்கு மின்சாரம் பகிர்மான உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது மிகவும் அவசியம். 2011 ஆம் ஆண்டு முதல், 34,088 கிலோமீட்டர் உயரழுத்த மின் பாதைகள், 90,368 கிலோமீட்டர் தாழ்வழுத்த மின் பாதைகள் மற்றும் 1,37,579 மின்மாற்றிகள் இயக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 1.99 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் உட்பட, பல்வேறு பிரிவுகளில் உள்ள பயனாளிகளுக்கு, மொத்தம் 89.09 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடுமையான நிதி நெருக்கடியை கருத்திற்கொண்டு, அரசு தொடர்ந்து நிதியுதவியினை வழங்கி வருகிறது. 2020 -21 ம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் மின் கட்டண மானியமாக 8,413.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021 -22 ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மானியக் கட்டணங்களுக்காக 8,834.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உதய் திட்டத்தின் கீழ், 5 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடன்களை மானியமாக மாற்றுவதற்கான ஐந்தாவது மற்றும் இறுதிக் கட்ட மானியமாக 4,563 கோடி ரூபாய், 2021 -22ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் விதமாக உதய் திட்டத்தின் வழிமுறைகளின்படி, 2021 22ஆம் ஆண்டு இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 7,217.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்காக, 2020- 21ஆம் நிதியாண்டில் பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிலிருந்து 37,130.30 கோடி ரூபாய் மதிப்பில் கடன்களைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *