செய்திகள்

நவராத்திரி கொலுவுக்கு வரும் பெண்களுக்கு வெற்றிலை – பாக்கு– பழத்துடன் இலவச சானிடைசர், முகக்கவசம் தரும் இல்லத்தரசி

சென்னை, அக். 18

கால மாற்றத்துக்குத் தகுந்தாற்போல் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொண்டு செயல்படும் போது, அது பலரின் கவனத்தைக் கவரும். வித்தியாசமான முயற்சி பலரையும் பேச வைக்கும்.

இந்தப் பட்டியலில் இடம் பெறுபவர் தான் ராணி சாய்ராம். சென்னை வடபழனியில் 50 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்.

அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து துவங்கி இருக்கும் நவராத்திரி கொலு பண்டிகையையொட்டி இவரும் தன் வீட்டில் கொலு வைத்திருக்கிறார்.

‘கொரோனா’ வைரஸ் பரவல் காரணமாக கூட்டத்தை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி, முகக்கவசம் கட்டாயம் என்ற நிபந்தனை எதிரொலியாக, தன் வீட்டு கொலுவுக்கு ஒரு நாளில் அதிகபட்சம் 5 குடும்பங்களை மட்டுமே அழைக்கிறார். அவர்களுக்கு வெற்றிலை பாக்கு பழம் ரவிக்கைத் துணியுடன் (ஜாக்கெட் பிட்) கை கழுவுவதற்கு பயன்படும் சானிட்டைசர் ஒரு பாட்டில், முகக் கவசங்களை இலவசமாக வழங்குகிறார்.

மாலையில் பூஜை முடித்து, நவராத்திரி கொலு பார்க்க வரும் பெண்கள் சிறுவர் சிறுமிகளுக்கு இந்த முறை நான் பிரசாதம் (விதவிதமான சுண்டல் இனிப்பு) வழங்கவில்லை. இருந்தும் நெருக்கடியான இந்த நேரத்திலும் கொலுவை கொண்டாட வைத்திருக்கும் ஆண்டவனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘எங்கள் குடியிருப்பில் மொத்தம் 50 வீடுகள் உள்ளன. அதில் கொலு வைத்திருக்கும் ஒரு சிலரில் நானும் ஒருத்தி. பாரம்பரியமாக ஆண்டுக்கு ஆண்டு வைத்துக் கொண்டிருக்கும் கொலு பண்டிகையை கொரோனா காரணமாக நிறுத்த மனசு கேட்கவில்லை. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.

எல்லாரும் சந்தோஷமாக சுபீட்சமாக நோய் நொடி இல்லாமல் தீர்க்காயுசோடு இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை சங்கல்பத்தோடு இந்த ஆண்டு கொலு வைத்திருக்கிறேன். அரசு வழி முறையின்படி நடக்கிறேன். முகக் கவசத்தோடு வர வேண்டும். ஒருவருக்கொருவர் 3 அடி இடைவெளி விட்டு உட்கார வேண்டும் என்ற கண்டிப்பான அன்புக் கட்டளையோடு நவராத்திரி கொலுவுக்கு மிகவும் நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும் மட்டுமே அழைத்திருக்கிறேன்.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 குடும்பங்கள் என்ற கணக்கில் என்று சமூக பொறுப்புணர்வோடு பேசினார் ராணி சாய்ராம்.

நவராத்திரி கொலுவில் பார்வை யிட்டு கிளம்புகிறவர்கள் வீட்டின் மூலையில் ஒரு மேஜையில் வரிசை யாய் வைத்திருக்கும் தாம்பூலத் தட்டை எடுத்துக் கொண்டு விடைபெறலாம்.

அந்தத் தாம்பூலத் தட்டில் வழக்கமான வெற்றிலை பாக்கு பழம் ஜாக்கெட் பிட்களோடு கை கழுவுவதற்கு பயன்படும் சானிட்டைசர் முகக் கவசம் ஆகியவற்றை தருகிறேன் என்றும் சிரித்துக் கொண்டே கூறினார் ராணி சாய்ராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *