செய்திகள்

நாளை தீபாவளி: கவர்னர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை, நவ. 13

நாளை (14ந் தேதி) தீபாவளி. இதையொட்டி மக்களுக்கு கவர்னரும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் தன் வாழ்த்து செய்தியில், ‘‘தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். வாய்மையும், அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை தீபாவளி திருநாள் எடுத்து இயம்புகிறது. ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்’’ என்று கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

மத்தாப்பு ஒளிகளின் விழாவான தீபஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.

தீபஒளித் திருநாளுக்கான மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமானால், அதற்கான அடிப்படைக் கூறுகள் அனைத்தும் வலிமையாக இருக்கவேண்டும். அதற்கு அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும். குறிப்பாக அனைவருக்கும் உணவு படைக்கும் வேளாண்மைத் தொழில் சிறக்க வேண்டும். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தான் உழவுத் தொழில் லாபகரமாக அமைந்துள்ளது. உழவர்களுக்கு உண்மையான தீபஒளித் திருநாளாக நடப்பாண்டு தீபஒளித் திருநாள் அமைந்துள்ளது. இந்த ஆண்டை போலவே அனைத்து ஆண்டுகளும் உழவர்களுக்கு மகிழ்ச்சியாக அமைய வேண்டும்.

இந்த ஆண்டில் உழவு செழித்ததைப் போல உலகம் செழிக்கவில்லை என்பது தான் வருத்தமளிக்கும் உண்மை. கொரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரம், தொழில்துறை, வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கி விட்டது. அதனால் நடப்பாண்டு தீபஒளி அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமையவில்லை. இந்நிலை மாற வேண்டும்… இனிவரும் தீப ஒளிகளில் மகிழ்ச்சி மலர வேண்டும்.

தீபஒளித் திருநாள் மத்தாப்புகளால் ஏற்படுத்தப்படும் வண்ணங்களையும், ஒளிகளையும் மட்டும் கொண்டதாக இருக்கக்கூடாது; மாறாக, மக்களின் வாழ்க்கையில் இன்மையை விலக்கி, இன்பத்தைப் பெருக்கி வளமும், நலமும் கொண்டதாக மாற வேண்டும். அத்தகைய இன்பத்தை மட்டுமின்றி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட நல்லவை அனைத்தும் மத்தாப்பின் வண்ணங்களாய் நிறைய தீபஒளித் திருநாள் வகை செய்ய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

டாக்டர் வி.ஜி. சந்தோசம்

விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில்,

‘‘இந்தியாவிலும் உலக நாடுகளிலும் இன்பத் தீபாவளி கொண்டாடும் இந்நேரத்தில் தீபாவளியின் முக்கிய கருத்துக்களான மகிழ்ச்சியுடன் இருப்பதும், மற்றவர்களுடன் அன்பை பகிர்ந்துகொள்வதும் நாம் முக்கியமாக கடைபிடிக்கவேண்டும். எத்தனை மொழிகள், இனங்கள் இருந்தாலும், இந்த தீபாவளி கொண்டாட்டம் எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சியையும், பரஸ்பர அன்பையும் பகிர்ந்துகொள்ளும் அனுபவமாகும். ஆகவே, இந்த தீபாவளி பண்டிகை நாளில் எல்லோரும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் இருந்து ஒற்றுமை காத்து, இனிமையாக வாழ வாழ்த்துகிறேன். எல்லோருக்கும் என் இனிய நல் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

கோகுல மக்கள் கட்சி

கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி. சேகர் தனது வாழ்த்துச் செய்தியில், ‘‘தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும்போது, தர்மத்தைக் காப்பாற்ற மீண்டும் அவதாரம் செய்து வருவேன் என்றான் கண்ணன். ஊருக்கு மட்டும் உபதேசமில்லை, தனக்கும் அதுவே நியதி என்று, தன் மகனே ஆனாலும், தர்மத்தை நிலைநாட்டிட நரகனை வதம் செய்தான். அந்த வகையில், தமிழகத்தின் ஜனநாயக கண்ணனாக அவதரித்து தமிழகத்தில் தர்மம் தழைக்க வழிவகை செய்யும் காலமாய், இனி வரும் காலம் அமைய, அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

அபூபக்கர்

இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபூபக்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

‘‘இந்தியா முழுக்க பெரும்பாலான மக்கள் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. கொரோனா அச்சம் காரணமாக ஏழு மாதங்களுக்கு மேலாக மிகப்பெரிய வருவாய் இழப்பையும் வீட்டுக்குள் முடங்கி தனிமையையும் பல்வேறு சோதனைகளையும் அனுபவித்த மக்களுக்கு இந்த தீபாவளி மிகப்பெரிய மனமகிழ்ச்சியை, உற்சாகத்தை அளிக்க கூடிய பண்டிகையாக அமைந்திருக்கிறது.

தீமைகள், கவலைகள், சோதனைகள் எல்லாம் பட்டாசு புகையாய் மறைந்து அனைவர் வாழ்விலும் வெளிச்சமும் வெற்றியும் பரவட்டும், நிலைக்கட்டும்.வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை தழைத்தோங்கி நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒருமைப்பாட்டு உணர்வு தழைத்தோங்க வேண்டிய தருணம் இது. இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் அனைவருக்கும் மனமார்ந்த மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *