சினிமா செய்திகள் முழு தகவல்

‘கூடப் பொறக்கலை; ஆனா ஆழமான சகோதர பாசம்…!

பொன்மனச் செல்வன், காவியத் தலைவனான கதை

ஜானி…ஜானின்னு தான் கூப்பிடுவார்

கூடப் பொறக்கலை; ஆனா ஆழமான சகோதர பாசம்…!

– செளகார்ஜானகி

தமிழ் சினிமாவில் ஜெமினி யும், சௌகார் ஜானகியும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் காலத்தால் அழியா காவியம் என்று சொல்லலாம்.

“இருகோடுகள்” படத்தில் சௌகார் கலெக்டர். ஜெமினி குமாஸ்தாவாக வருவார்.

தன் மிரட்டல் நடிப்பால் சௌகார் ஒருபக்கம் அசத்தும் அதே வேளையில், தனது முன்னாள் மனைவியை பற்றி இந்நாள் மனைவியிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தில் ஜெமினி வாழ்ந்திருப்பார்.

1950 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஜெமினியை சந்தித்ததாக கூறும் சௌகார், ஜெமினியுடனான தனது முதல் சந்திப்பே வித்தியாசமானது என்கிறார்.

“சவுக்கார்” படம் முடிந்த உடன் அடுத்து ஒரு நல்ல நிறுவனத்தில் படம் பண்ணலாம் என்று காத்திருந்தேன்.

ஜெமினி ஸ்டுடியோ நிறுவனர் வாசனை சந்திக்கப் போயிருந்தேன். அங்கு என்னை வரவேற்றது ஜெமினிதான். அந்த அலுவலகத்தில் காஸ்டிங் மேனேஜராக பணியாற்றி கொண்டிருந்தார். பார்ப்பதற்கு க்ளாமரஸ் ஹீரோ மாதிரி இருந்தார்.

என்ன பிரதர் பண்றது…

என்னை பற்றி விசாரித்தார்.

எதற்காக நடிக்க வந்திருக்கிறீர்கள்…? என்றார்.

குடும்பத்துக்காக நடிக்க வந்திருக்கிறேன் என்றேன்.

கல்யாணம்… ஆகிடுச்சாமே… குழந்தை இருக்கிற போது … ஏன்? என்று கேட்டார்

ஜெமினி நிறுவனத்தில் நல்ல கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றேன்.

சரி இங்க நில்லுங்க என்றார்.

ஒரு சுவர் ஓரம் நிற்க வைத்து எனது உயரத்தை அளந்து சுவற்றில் ஒரு கோடு கிழித்தார்.

அய்யே 5 அடி தானா…! என்றார்

என்ன பிரதர் பண்றது… கடவுள் அவ்வளவுதான் கொடுத்திருக்கிறார் என்றேன்.

“ஜானி…ஜானி…”

‘‘டென்னிஸ் விளையாடிவிட்டு எங்கள் வீட்டுக்கு ஓடி வந்து விடுவார். என்னை ஜானி… ஜானி… என்று தான் அழைப்பார். என் கையால் எது செய்து கொடுத்தாலும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். ஜானி “மைசூர் ரசம்” வச்சுருந்தா ஒரு டம்பளர் கொடு என்பார். கூட பிறக்கவில்லையே தவிர, எங்களுக்குள் ஆழமான சகோதர பாசம் இருக்கிறது’’

வெளிச்சம் போடும் திறமை

அவரைப் பார்த்தவுடன் என் மனதில் தோன்றியது, எல்லோரையும் சினிமாவுக்கு தேர்வு செய்யும் இவரே ஒரு ஹீரோ போல் இருக்கிறாரே என்று நினைத்தேன்.

சிரித்த முகம், கனிவான பேச்சு, அழகான தோற்றம், பார்த்ததும் எனக்கு மனதில் நல்ல சகுனம் தோன்றியது.

என்னை வாசன் சாரிடம் அறிமுகம் செய்து வைத்து, “மூன்று பிள்ளைகள்” என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார்.

எப்போது நான் பிரதர் என்று அழைத்தேனோ அன்று முதல் இறுதி வரை அந்த அன்பு அவரிடம் மாறவே இல்லை.

காரணம் அவருடைய கல்வி, அவருடைய கலாச்சாரம். ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்த நபர் அவர்.

எந்த பெரிய ஹீரோக்கள் அருகில் நடித்தாலும் ஜெமினியின் திறமை வெட்ட வெளிச்சமாக தெரியும்.

எனக்கு கிடைத்த பெருமை

எனக்கு பெருமை என்ன வென்றால், நான் தயாரித்து பாலச்சந்தர் இயக்கிய “காவியத்தலைவி” படத்தில் கதாநாயகனாக ஜெமினி நடித்தது தான். அந்த படத்திற்காக, தமிழக அரசின் சிறந்த நடிக ருக்கான விருது அவருக்கு கிடைத்தது. அடுத்து நான் தயாரித்த “ரங்க ராட்டினம்” என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்தார்.

இரு கோடுகள், பாக்கியலட்சுமி என நாங்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இருகோடுகள், காவியத்தலைவி இரண்டும் போட்டிப் போட்டு நடித்த படங்கள். ஜெமினி சௌகார் ஜோடி படம் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

“மனம்போல் மாங்கல்யம்” என்ற படத்தில் நடிக்க கேட்டார். அப்போது தெலுங்கு படம் நிறைய இருந்தது. எனக்கு பதிலாக சாவித்திரி நடித்தார். வயதான பிறகு “கொண்டாட்டம்”, “தொடரும்” என இரண்டு படங்களில் நாங்கள் இருவரும் இணைந்து நடித்தோம்.

“ஷாட்” என்றால்…

ஷூட்டிங்கின் போது விளையாட்டு பிள்ளையாகத்தான் இருப்பார். ஷாட் என்று வந்து நின்றால் அந்த வேஷத்துக்கு தகுந்தாற் போல் மாறிவிடுவார். திடீர் திடீர் என காணாமல் போய்விடுவார்.

பெரிய நடிகராக இருந்தும் தலைகனத்து டன் நடந்து கொண்டது இல்லை. அவர் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். சிரித்த முகத்துடன் மட்டுமே காணப்படுவார். ஒரு நாள் கூட முகம் சுளித்து நான் பார்த்ததில்லை.

எம்ஜிஆருடன் நடிக்கும் போது எல்லோரும் பயப்படு வார்கள். காரணம் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு, பேர் புகழ் என அந்த படத்தில் நாம் காணாமல் போய்விடுவோமோ என நடிகர்கள் நினைப்பதுண்டு.

யாருடன் நடிக்கி றோம் என்று அவர் நினைக்கமாட்டார். அவ ருக்கு கொடுத்த கேரக்டரில் தன்னம்பிக்கையுடன் நடிப்பார்.

ஜென்டில்மேன் ஆக்டர்

ஜெமினி காதலில் மட்டும் மன்னனல்ல, நடிப்பில் மட்டும் மன்னனல்ல, அவருடைய கல்வி, பண்பாடு, நாகரீகம் என அவர் ஒரு “ஜென்டில்மேன் ஆக்டர்” என்று நான் சொல்லுவேன்.

ஹீரோயின்களுடன் மிகவும் டீசன்டாக நடிப்பார். ஆபாசமாக டயலாக் பேசியது இல்லை. படப்பிடிப்பின்போது யாரையும் அவர் கிண்டல் செய்து நான் பார்த்ததில்லை. காதல் மன்னனாகத்தான் ரசிகர்கள் மனதில் அவர் இருக்கிறார். இருப்பார்.

குடும்ப பொறுப்பிலிருந்து அவர் ஒரு நாளும் தவறியதில்லை. ஒரு நல்ல தந்தையாக ஜெமினி வாழ்ந்து சென்று உள்ளார். அவருடைய ஆசிகள், வாழ்த்துக்கள் அவரது குழந்தைகளுக்கு என்றும் கிடைக்கும்.

எழுத்து, தொகுப்பு: ஷீலா பாலச்சந்திரன்

மேலும் படிக்க….

ஆல் ரவுண்டர்; ஜென்டில் மேன்; அவரைப் புடிக்காம இருக்க முடியாது! – ஏவிஎம் சரவணன்

கண்களில் மட்டுமே காதலை காட்டி கண்ணியம் காத்தவர்

‘காதல் மன்னன்’: பிளாஸ்பேக்!

ஜெமினியோடு திரை பிரபலங்களின் சுவையான பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *