புதுடெல்லி, டிச. 31–
வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 3-வது முறையாக நீட்டித்துள்ள மத்திய அரசு, வருகிற ஜனவரி 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
2019-20-ம் நிதி ஆண்டுக்கு தனி நபர்கள் வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 3-வது முறையாக நீட்டித்துள்ள மத்திய அரசு, ஜனவரி 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் வருமான வரி கணக்கு தணிக்கை செய்யப்படவேண்டிய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, வருகிற பிப்ரவரி 15-ந் தேதிவரை அவர்கள் கணக்கு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக வருமான வரி செலுத்துவோர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிதி ஆண்டில் கடந்த 28-ந் தேதி வரை 4.54 கோடி வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 4.77 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.