செய்திகள்

சாமானியனுக்கு ‘கொரோனா’ தடுப்பூசி: ஆர்வத்தோடு போட்டுக் கொள்ள தனியார் மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம்

சாமானியனுக்கு ‘கொரோனா’ தடுப்பூசி:

ஆர்வத்தோடு போட்டுக் கொள்ள தனியார் மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம்

‘ஊசியா … வலிக்குமே… என்று வீண் பயம் வேண்டாம்’: நம்பிக்கையூட்டும் நர்ஸ், டாக்டர்கள்

சென்னை, மார்ச். 3–

‘கொரோனா’ தடுப்பூசி சாமானியனுக்குப் போடும் இயக்கம் மார்ச் 1–ந் தேதி முதல் மின்னல் வேகத்தில் துவங்கியிருக்கிறது அல்லவா? இதில் மத்திய – மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் பேட்டி, 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் (சீனியர் சிட்டிசன்) தனியார் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆர்வத்தோடு தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

அரசு மருத்துவமனைகள் ஒரு பக்கம் (தடுப்பூசி போட கட்டணமில்லை, இலவசம்) தனியார் மருத்துவமனைகள் மறுபக்கம் தடுப்பூசியைப் போடும் பணியில் மும்முரமாகி இருக்கின்றன.

‘ஊசியா… ஊசி என்றாலே பயம். அதற்குப் பதிலாக மாத்திரையாகவோ – மருந்தாகவோ கொடுத்து விடுங்கள்… சாப்பிட்டு விடுகிறோம்’ என்று சொல்லி, சாதாரண ஊசிக்கே பயப்படுகிறவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்டவர்களைக் கூட ஊசி குத்திக்கொள்ள ஒரு பயமும் வேண்டாம். எல்லாம் உங்கள் நன்மைக்காகத்தான் மத்திய – மாநில அரசுகள் ஏற்பாடு இது என்று பக்குவமாக எடுத்துச் சொல்லி வீண் பயத்தைப் போக்கி, தடுப்பூசி போடும் முயற்சியில் நர்ஸ்கள், டாக்டர்கள் இறங்கி இருக்கிறார்கள்.

இடது கையில்…

இடது கைப்பழக்கம் கொண்டவர்களாக இருந்தாலும், வலது கைப்பழக்கம் கொண்டவர்களாக இருந்தாலும் சரி ஊசியை இடது கையில் மட்டுமே குத்துகிறார்கள். தடுப்பூசியைப் போடுவதற்கு முன்னால் 45 வயதைக் கடந்தவர்களுக்கும் 60 வயதைத் தாண்டிய முதியோர்களுக்கும் பிபி (ரத்த அழுத்தம்) பல்ஸ் (இருதயத் துடிப்பு) பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பூசியைப் போட்ட இடத்தில் வழக்கமாக ஊசி போடும் போது ஊசி குத்திய இடத்தை தடவிக் கொடுப்பது போல தடவிவிட்டு அனுப்புகிறார்கள்.

இளைஞர்கள் – இளைஞிகளுக்கு தடுப்பூசியைப் போடுவது பற்றி இன்றைய தேதி வரை எந்த ஒரு அறிவுறுத்தலும் இல்லை. ஆகவே நேற்று முன்தினம் முதல் 45 வயதைத் தாண்டியவர்கள், 60 வயதைக் கடந்த மூத்தவர்கள் வந்து போகிறார்கள்.

முன் பதிவு ஒரு பக்கம் நேரில் வந்தாலும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, வரிசையில் காத்திருந்து தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு செல்ல ஒவ்வொரு மருத்துவமனையும் உரிய ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *