செய்திகள்

காஞ்சீபுரம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

Spread the love

காஞ்சீபுரம், பிப்.25–-

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய வழிகாட்டுதலில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, காஞ்சீபுரம் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, திறந்து வைத்து பார்வையிட்டார்.

இப்புகைப்படக் கண்காட்சியில் முத்திரை பதித்த மூன்றாண்டு, முதலிடமே அதற்கு சான்று என்பதை எடுத்துரைக்கும் விதமாக கடந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகளின் விளக்கப் புகைப்படங்கள் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜெயலலிதா அறிவித்த பல்வேறு சிறப்புத் திட்டங்கள் வாயிலாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்பட பல்வேறு சிறப்பு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும் தமிழகத்தினை முதன்மை மாநிலமாக மாற்றிட வேண்டுமென்ற உயரிய நோக்கில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து, அதனை செயல்வடிவத்தில் கொண்டு வந்த திட்டங்களான மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதல், கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் மற்றும் உதவித் தொகை வழங்கும் திட்டம், பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பைகள், அம்மா உணவகம், அம்மா சிமென்ட், அம்மா உப்பு, அம்மா குடிநீர் ஆகிய புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இப்புகைப்படக் கண்காட்சியை பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி,காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி.காஞ்சி பன்னீர்செல்வம், நகராட்சி என்ஜினியர் மகேந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *