செய்திகள்

கட்டுமான பணியாளர்கள் தங்கும் இடங்களுக்கே ‘அம்மா’ உணவக உணவு

சென்னை, பிப்.14–

கட்டுமான பணியாளர்கள் பணியாற்றும், தங்கும் இடங்களுக்கே ‘அம்மா’ உணவக உணவுகளை வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:–

சமுதாயத்தில் உள்ள நலிந்த பிரிவினர்களுக்கு குறைந்த விலையில் சத்தான, சுகாதாரமான உணவு வழங்குவதற்காக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19–ம் நாளன்று அம்மா உணவகங்களை திறந்து வைத்தார். இந்த முன்னோடித் திட்டம், உலக அளவில் நன்மதிப்பைப் பெற்றுள்ளதோடு, இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இதைப் பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன.

கட்டுமானப் பணியாளர்களுக்கு

இம்முன்னோடித் திட்டத்திற்கு மேலும் புத்துணர்ச்சியூட்டும் பொருட்டும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மீதான நிதிச்சுமையை குறைப்பதற்கும், அம்மா உணவகத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ‘லாப நோக்கமற்ற’ ஒரு சிறப்பு நோக்கு முகமையை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது. அம்மா உணவகங்களை அதிக அளவில் பயன்படுத்தி வரும் கட்டுமானப் பணியாளர்களை கவனத்தில் கொண்டு, அவர்கள் தங்கும் மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு அம்மா உணவகம் உணவு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்.

இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்களிப்பு மற்றும் நன்கொடை பங்களிப்புகளை இந்த சிறப்பு நோக்க முகமை சேகரிக்கும். அம்மா உணவகங்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை இந்த அரசு தொடர்ந்து வழங்கும். வருவாய் வரவுகள், பெறப்பட்ட பங்களிப்புகள், நன்கொடைகள் ஆகியவற்றிற்கும் அதன் செலவினத்திற்கும் இடையேயான பற்றாக்குறையை சரிசெய்வதற்கு அரசு நிதியுதவி அளிக்கும். 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், அம்மா உணவகத் திட்டத்திற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *