செய்திகள்

புதிய வகை கொரோனா: பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இதுவரை 88 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சென்னை, ஜன. 29–

தமிழகத்தில் இதுவரை 88 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் நேற்று 300 ஆண்கள், 203 பெண்கள் என மொத்தம் 503 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 151 பேரும், கோவையில் 48 பேரும், செங்கல்பட்டில் 41 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூர், ராமநாதபுரம், பெரம்பலூர், கரூரில் தலா இருவரும், சிவகங்கையில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் புதிய பாதிப்பு இல்லை. கொரோனாவுக்கு இதுவரை 8 லட்சத்து 36 ஆயிரத்து 818 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் – 5 லட்சத்து 5 ஆயிரத்து 756 பேர். பெண்கள் 3 லட்சத்து 31 ஆயிரத்து 28 பேர். மூன்றாம் பாலினத்தவர் 34 பேர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் தலா 3 பேரும் 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 12,339 ஆக உள்ளது. இதில் சென்னையில் நேற்று 4 பேர் உட்பட இதுவரை மொத்தம் 4,096 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 544 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 8 லட்சத்து 19 ஆயிரத்து 850 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 4 ஆயிரத்து 629 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,582 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது 68 அரசு ஆய்வகங்கள், 186 தனியார் ஆய்வகங்கள் என 254 ஆய்வகங்கள் உள்ளன. நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 457 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டனர். இது எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 58 லட்சத்து 60 ஆயித்து 674 ஆகும்.

6,428 பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் நேற்று 13-வது நாளாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. நேற்று 244 மையங்களில் 6 ஆயிரத்து 172 பேருக்கு ‘‘கோவிஷீல்டு’’ தடுப்பு மருந்தும், 6 மையங்களில் 256 பேருக்கு ‘‘கோவேக்சின்’’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 250 மையங்களில் 6 ஆயிரத்து 428 சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை 86 ஆயிரத்து 310 பேருக்கு ‘‘கோவிஷீல்டு’’ தடுப்பூசியும், 2 ஆயிரத்து 308 பேருக்கு ‘‘கோவேக்சின்’’ தடுப்பூசி என மொத்தம் 88 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

25 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 9 பேரும் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி முதல் தற்போது வரை பிரிட்டனில் இருந்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவர்களை உள்ளாட்சி துறை, காவல் துறை உதவியுடன் கண்டறிந்து அதில் 2,900-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் பிரிட்டனில் இருந்து திரும்பிய 26 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேர் என மொத்தம் 46 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களது சளி மாதிரிகள் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே, மேலும் 11 பேரின் சளி மாதிரி முடிவுகள் வெளியாகாததால், அவர்கள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *