செய்திகள்

8 விவசாயிகள் மீது டிராக்டர் ஏற்றி கொன்ற வழக்கு: இணையமைச்சர் மகனுக்கு 8 வாரம் ஜாமீன்

உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி, ஜன. 25–

லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் இந்திய ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நிபந்தனைகளுடன் 8 வாரம் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில், கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.

ஒன்றிய அமைச்சர் மகன்

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறியதில் விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில், 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 8 பேர் பலியாகினர்.

இதையடுத்து, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவர் உள்பட வழக்குக் தொடர்புடையவர்களை கைது செய்தனர். லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர், 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உத்தரப்பிரதேச மாநில கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அதேசமயம், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரை உச்ச நீதிமன்றம் நியமித்தது. மேலும் 3 மூத்த போலீஸ் அதிகாரிகளையும் சிறப்பு புலனாய்வு குழுவுடன் சேர்த்தது.

8 வாரம் ஜாமீன்

இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன் மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து க்கிம்பூர் கேரி சம்பவத்தை கண்காணிக்க உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்புக் குழு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து, ஒரு வாரத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதனை எதிர்த்து ஆஷிஷ் மிஸ்ரா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது. இந்த நிலையில், ஆஷிஷ் மிஸ்ரா வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நிபந்தனைகளுடன் 8 வாரம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *