போஸ்டர் செய்தி

3 புதிய மாவட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

சென்னை, ஆக. 15–

சுதந்திர தினத்தையொட்டி இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் 3வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என்றும், சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்த ஆண்டு 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

மின்மிகை மாநிலம் உருவாக்கப்பட்டது போல நீர்வளம் மிக்க மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் முதல்வர் கூறினார்.

அம்மாவின் வழியில் இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளோம் என்றும், மக்கள் பாதிக்க கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அம்மாவின் அரசு அதனை எதிர்க்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நாடு முழுவதும் இன்று 73வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அரசு செய்த சாதனைகளையும், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது உட்பட பல்வேறு விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரையில் கூறியிருப்பதாவது:–

அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தையும், 73வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தியாகத்திற்கும் அமைதிக்கும் அடையாளமாகத் திகழும் புனிதமான தேசியக் கொடியை அம்மாவின் நல்லாசியுடனும், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடனும், 3வது முறையாக கோட்டைக் கொத்தளத்தில் ஏற்றியதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

அம்மாவின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறது. அவற்றில் சிலவற்றை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

கடந்த நவம்பர் மாதம் கஜா புயலின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால், மனித உயிர்கள் பெருமளவு காப்பாற்றப்பட்டன. புயலுக்குப் பின் அரசு யந்திரம் முழுவீச்சில் செயல்பட்டதன் காரணமாக, வெகு விரைவில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிந்தது. மறுவாழ்வுப் பணிகள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பெட்டகம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முதன்முறையாக வழங்கப்பட்டது. இப்பணிகளில் இரவு பகல் பாராது பாடுபட்ட அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் இந்த நேரத்தில் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிருஷ்ணா நீர், வீராணம் நீர் தந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா

சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தவர் அம்மா.

அம்மா எடுத்த நடவடிக்கையால் தற்போது மீஞ்சூரிலும், நெம்மேலியிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

மேலும், நெம்மேலியில் ஆயிரத்து 259 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடல்நீரை குடிநீராக்கும் மற்றொரு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு நான் அடிக்கல் நாட்டி, பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதே போன்று, பேரூரில் 6 ஆயிரத்து 78 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழைநீர் சேமிப்புக்கு ஆதரவு தாருங்கள்

நாடு செழிக்க நன்னீர் அவசியம். மழை நீரை சேமிக்க வேண்டும். நீர் ஆதாரங்களைக் காக்க வேண்டும். இதன் மூலம், மனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீரை உறுதி செய்ய வேண்டும். இன்று மாநிலம் எதிர் கொண்டிருக்கும் முக்கிய சவால் இதுதான். இப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்ள, 2003ம் ஆண்டிலேயே அம்மா மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைத் தொடங்கி, அதனைத் தீவிர இயக்கமாக செயல்படுத்தியதன் விளைவாக, நிலத்தடி நீரின் அளவு உயர்ந்தது. இந்தத் திட்டத்தினை முழுவீச்சுடன் செயல்படுத்திட அம்மாவின் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

கழிவு நீரை மறு சுழற்சி மூலமாக தொழிற்சாலைகளுக்கு வழங்கும் முறை 1993ம் ஆண்டே அம்மாவினால் செயல்படுத்தப்பட்டு, தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. அதே போன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் கோயம்பேட்டிலும், கொடுங்கையூரிலும் நிறுவப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் தான் அனுமதி

பயன்படுத்தப்பட்ட நீரினை சுத்திகரித்து மறுசுழற்சி செய்வதற்கு, அம்மாவின் அரசு ஒரு கொள்கையை அறிவிக்க உள்ளது. இக்கொள்கையின்படி, மக்கள் பயன்படுத்திய நீரை சுத்திகரிப்பு செய்து, தொழிற்சாலைகளுக்கும், பிற பயன்பாட்டிற்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், புதிய தொழிற்சாலைகள் அல்லது அடுக்குமாடிகள் கட்டுகின்றபோது, பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவதற்கு சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கினால்தான் அனுமதி வழங்கப்படும். இதனால் பெருமளவு நீர் சேமிக்கப்படும்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், செங்குன்றம் ஆகிய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவினை அதிகரிப்பதற்கென தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோதாவரி – காவிரி இணைப்பு

கோதாவரி ஆற்றினை காவேரி ஆற்றுடன் இணைக்கும் திட்டத்தினை விரைவாக செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும்.

கங்கை சீரமைப்புத் திட்டம் போன்று, காவேரி ஆற்றினை சீரமைக்க ‘‘நடந்தாய் வாழி காவேரி” என்ற திட்டத்தினை செயல்படுத்த அம்மாவின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே போன்று, பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகளும் மாசுபடுவதைத் தடுக்க, அம்மாவின் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

சேத்துப்பட்டு ஏரி, அத்திப்பட்டு ஏரி போன்ற தமிழ்நாடு முழுவதும் உள்ள பல முக்கிய ஏரிகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலங்களும், பெருங்குடி ஏரியும் இவ்வாறு பாதுகாக்கப்படும்.

குடிமராமத்து பணி

இவ்வாறு பல்வேறு கோணங்களில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் ஒரு துளி நீரைக்கூட வீணாக்கக் கூடாது என்பதில் அம்மாவின் அரசு மிகுந்த கவனத்துடன் செயலாற்றி வருகிறது. இதை சரியான முறையில் நிறைவேற்றும் வகையிலும், நீராதாரத்தை முறையாக சேமித்து பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உரிய முறையில் ஒருங்கிணைக்கும் வகையிலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள குடிமராமத்து திட்டத்தை இணைத்து, தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம்” என்ற ஒரு தீவிர மக்கள் இயக்கத்தை 7.8.2019 அன்று நான் தொடங்கி வைத்தேன்.

நீர் வளம்மிக்க மாநிலம்

அம்மாவினால், ‘‘தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக” எவ்வாறு உருவாக்கப்பட்டதோ, அதே போன்று இந்த இயக்கத்தின் மூலம் ‘‘தமிழ்நாடு நீர் வளம் மிக்க மாநிலமாக” விரைவில் உருவாகும். இத்திட்டங்களின் மூலம், இனி வருங்காலத்தில் பருவமழை பொய்த்தாலும், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயக்கத்திற்கு மக்கள் தங்கள் ஒத்துழைப்பை பெருமளவு நல்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி பிரச்சினைக்கு தீர்வு

அதுபோல், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும் வகையிலும், தமிழ்நாட்டு மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், பல்வேறு சட்டப் போராட்டங்கள், கோரிக்கைகள் ஆகியவற்றின் மூலம், காவேரி நீர் மேலாண்மை ஆணையமும், காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. பல்லாண்டு காலமாக தீர்வு காணப்படாமல் இருந்த காவேரி பிரச்சனைக்கு, நிரந்தரத் தீர்வு கண்டது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். தற்போது மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை தீர்ப்பாயம்” நடைமுறைக்கு வந்தாலும்கூட, ஏற்கனவே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட இவ்விரு அமைப்புகளும் தொடர்ந்து செயல்படும்.

மேலும், பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்த கோரிக்கையின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் முதன் முறையாக பெறப்பட்டது.

பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடு சட்டமன்றத்தில் 23.1.1968 அன்று, தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது” என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இதே போன்று எம்.ஜி.ஆரும் 13.11.1986 அன்று இரு மொழிக் கொள்கையை ஆதரித்து தமிழ்நாடு சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அம்மாவும், ‘இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம்’ என்றார்.

இரு மொழி கொள்கையில் உறுதி

அம்மாவின் அரசும், இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடிய எந்தத் திட்டமாக இருந்தாலும், அம்மாவின் அரசு அதனை எதிர்த்து, மக்கள் நலனை பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030ம் ஆண்டுக்குள் எய்தப்பட்டு, அதன் மூலம் தமிழ்நாடு உலக அரங்கில் வளர்ச்சிப் பாதையில் சென்றிட அம்மாவின் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது. இந்த நோக்கத்தினை செயல்படுத்தும் விதமாக பல்வேறு மக்கள் நலத் திட்டப்பணிகளை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகின்றது.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ், புதிய பயிர்களையும், பகுதிகளையும் அறிவிக்கை செய்து, இத்திட்டத்தை கூடுதல் பரப்பளவில், அதிக வேளாண் பெருமக்கள் பலன் பெறும் வகையில், இந்த ஆண்டு ரூபாய் 634 கோடியே 74 லட்சம் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களுக்காக 5 ஆயிரத்து 410 கோடியே 67 லட்சம் ரூபாய் இழப்பீட்டு நிதியாக பெற்றுத் தந்துள்ளது.

விரைவில் அழுகும் வேளாண் பொருட்களை பாதுகாக்கும் வகையில், ஏற்கனவே 10 மாவட்டங்களில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட உள்ள ‘‘விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம்”, மேலும் 5 மாவட்டங்களில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

2018–ம் ஆண்டு தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் அமெரிக்கன் படைப்புழுவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன், பாதிக்கப்பட்ட வேளாண் பெருமக்களுக்கு 186 கோடியே 25 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கியது.

நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் பனை மரங்களை அதிக அளவில் வளர்க்கும் வகையில், இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள நடைமுறைகள் மற்றும் தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய உலகத்தரம் வாய்ந்த நவீன கால்நடைப் பூங்கா சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பளவில் நிறுவிட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விவசாயிகளிடமிருந்து தரமான பாலை கொள்முதல் செய்யவும், அதை மக்களுக்கு தாமதமின்றி கிடைக்கச் செய்யவும், சமீபத்தில் கரூர், தருமபுரி, தேனி, தூத்துக்குடி மற்றும் கடலூரை தலைமை இடமாகக் கொண்டு 5 புதிய பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது வேலூரில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் புதிதாக உருவாக்கப்படும்.

காவல் துறையினர், அல்லும் பகலும் அயராது பாடுபட்டு தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக பாதுகாத்து வருகின்றனர். அவர்களது மனநலன் மற்றும் குடும்ப நலன் ஆகியவற்றை பேணிக் காப்பதற்காக, ‘‘காவலர் நிறைவாழ்வு பயிற்சி திட்டம்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அன்னிய முதலீடு

2015–ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றியினைத் தொடர்ந்து, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த ஆண்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 10 லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் அளவிற்கான தொழில் முதலீடுகள், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்மிகை மாநிலம்

தமிழ்நாட்டில் 2011ம் ஆண்டு முதல் அம்மாவும், அதனைத் தொடர்ந்து அம்மாவின் அரசும் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக, தற்போது தமிழ்நாட்டின் சராசரி மின் தேவை 15 ஆயிரத்து 600 லிருந்து 16 ஆயிரத்து 100 மெகா வாட்டாக உள்ள போதிலும், 18 ஆயிரத்து 300 மெகா வாட் நிறுவு திறனுடன் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. 9,000 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் 2023க்குள் நிறுவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் நடவடிக்கைகளினால் இந்த ஆண்டு கடும் கோடை காலத்தில் ஏற்பட்ட உச்சக் கட்ட மின்தேவைகள் கூட, தடையின்றி பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ காப்பீட்டுத் திட்ட தொகை உயர்வு

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக டிசம்பர் 2018 முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்களின் ரத்த சோகையை போக்கவும், பிறந்த குழந்தைகளின் எடையளவை உயர்த்தவும் 4,000 ரூபாய் மதிப்புள்ள இரும்புசத்து, ஊட்டச் சத்து ஆகிய பொருட்கள் அடங்கிய இரண்டு அம்மா தாய் சேய் நலப் பெட்டகம் வழங்கப்படுகின்றன.

கல்வி என்பது எழுத்தறிவை மட்டும் கொடுக்காமல், மனிதனை சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த அம்மாவின் அரசு, 12ம் வகுப்பு வரையில் புதிய பாடத் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கென மிக அதிக அளவில் 28 ஆயிரத்து 957 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி செல்லாத குழந்தைகள் குறைவு

அம்மாவின் அரசு கல்வித் துறையில் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களின் பயனாக பள்ளி செல்லாக் குழந்தைகள் எண்ணிக்கையும், இடைநிற்றல் விகிதமும் பெருமளவில் குறைந்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் கல்வி பயில வகை செய்தல் எனது நோக்கம்” என்று அம்மா, தமிழ்நாட்டில் 65 கல்லூரிகளை தொடங்கி வைத்தார். அம்மாவின் வழியில் வந்த இந்த அரசு, 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கியுள்ளதுடன் 5 பாலிடெக்னிக் கல்லூரிகளையும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, உயர் கல்வியில் சேரும் மாணாக்கர்கள் சதவீதம் 48.6 என உயர்ந்து, இந்தியாவிலேயே உயர் கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2014 முதல் 2017 வரையிலான 4 ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் நாட்டிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது.

40 ஆயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த அம்மாவின் அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை 20 ஆயிரத்து 196 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம்

சென்ற ஆண்டு சுதந்திர தின விழா உரையில், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், பதக்கங்கள் வென்ற அல்லது கலந்து கொள்ளும் வீரர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கும், தமிழ்நாடு அரசு அல்லது தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் 2 சதவிகிதம் வரை வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தேன். அதை 3 சதவிகிதமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு, அதன் அடிப்படையில் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரூ.351 கோடி ஸ்கூட்டர் மானியம்

கடந்த 2018–19ம் ஆண்டில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 612 சுய உதவிக் குழுக்களுக்கு 11 ஆயிரத்து 448 கோடியே 99 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் வழங்கி உயரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் மூலம் இதுவரையில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 849 பணிக்குச் செல்லும் பெண்கள், 351 கோடியே 30 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் இரு சக்கர வாகனங்களை வாங்கி பயன் அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு 2 ஆயிரம் புதிய பஸ்கள்

மக்கள் நலனில் அக்கறை கொண்ட அம்மாவின் அரசு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒப்பளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கி பொது மக்களின் சேவைக்காக இயக்கப்படும்.

ஆதிதிராவிட மக்களின் குடியிருப்புகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, இணைப்புச் சாலைகள், பாதைகள், தெரு விளக்குகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் தலா 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு செயற்கைக் கோள் அலைபேசி ‘நேவிக்’ மற்றும் ‘நேவ்டெக்ஸ்’ சாதனங்களை அம்மாவின் அரசு வழங்கியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க ஏதுவாக 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் மானியத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சூரை மீன்பிடி படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நாள்

1956ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள், ‘‘தமிழ்நாடு” மாநிலம் உருவாக்கப்பட்டது. அந்த நாளினை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் நாள் ‘‘தமிழ்நாடு நாள்” என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

தற்பொழுது காஞ்சிபுரத்தில் அருள்மிகு அத்திவரதர் எழுந்தருளியதை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர், மருத்துவம், அன்னதானம் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, பக்தர்கள் சீரிய முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு செய்த பல்வேறு நடவடிக்கைகளை பயன்படுத்தி சுமார் ஒரு கோடி பக்தர்கள் அருள்மிகு அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு முழுமையான கணக்கெடுப்பிற்குப் பின், சிறப்பு நிதியுதவியாக குடும்பத்திற்கு தலா 2,000 ரூபாய் அம்மாவின் அரசு வழங்கும்.

அம்மாவின் அரசு, கைத்தறி நெசவாளர்களுக்கு தொழில்நுட்ப மேம்பாடு, வடிவமைப்பு மேம்பாடு, ரக மாற்றம், வணிக சின்னத்தை பிரபலப்படுத்துதல், சந்தை விரிவாக்கம் மற்றும் நடைமுறை மூலதனம் ஆகியவைக்கான நிதியுதவி வழங்குவதற்காக, கைத்தறி ஆதரவுத் திட்டத்தினை ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் நெசவாளர்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர்.

மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என முழங்கியவர் அம்மா. அவர் வழியில் நடைபெறும் இந்த ஆட்சியில், மக்களின் குறைகளை மக்களை நாடிச் சென்று இந்த அரசு தீர்த்து வருகிறது. எனவே தான், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைகளுடன், ஒரு சிறப்புத் திட்டமாக, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு மாத காலத்திற்குள் மனுக்களுக்கு தீர்வு எட்டப்படும்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழி பொருட்கள் மீதான தடை 1.1.2019 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. எதிர்கால சந்ததியினரின் நலனுக்கான அரசு எடுத்துள்ள இம்முயற்சிகளுக்கு பொது மக்களும், வணிகர்களும் தங்களது ஆதரவை தொடர்ந்து நல்கிட வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

புதிய மாவட்டங்கள்

தற்போது பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, நிர்வாக வசதிக்காக, வேலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும். மேலும், வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய வட்டம் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் மிக மிகச் சாமான்யர்கள், உங்கள் ஒத்துழைப்பால் நாம் சாதித்து உள்ளவைகளோ மிகப் பெரியவை;

அயராத உழைப்பால் சாதிப்போம்

இன்னும் நாம் சாதிக்க வேண்டியவற்றுடன் ஒப்பிடும்போது இவை கடுகளவு தான்.

நாங்கள் சாமான்யர்கள், ஆனாலும் மகத்தான இம்மாநில மக்களின் அறிவாற்றலோடும், அயராத உழைப்போடும் சாதிக்க வேண்டியவற்றை சாதித்தே தீருவோம்.

ஒட்டு மொத்த செயல்திறன், சட்டம்–ஒழுங்கு மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றில் சிறந்து விளங்கியமைக்காக, ‘இந்தியா டுடே’ பத்திரிகை தமிழ்நாட்டிற்கு 4 விருதுகள் வழங்கியுள்ளது. நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தமிழ்நாட்டில் 3 காவல் நிலையங்கள் தேர்வு, வேளாண் துறைக்கு கிரிஷி கர்மான் விருதுகள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்திற்கு விருது, பொது விநியோகத் திட்டத்தை கணினிமயமாக்கியதற்கு விருது, புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித் துறைக்கு விருது, தரமான மருத்துவ சேவைகள் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த முறையில் செயல்பட்டதற்கான விருது, போக்குவரத்து கழகங்களுக்கும், நகராட்சிகளுக்கும் சிறந்த முறையில் பணியாற்றியதற்கான விருது, சமூக நலத் துறையின் சிறந்த பணிக்கான விருது என அகில இந்திய அளவில் பல்வேறு விருதுகளை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரமாக உயர்வு

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தனது இன்னுயிரை ஈந்த தியாக செம்மல்களை சிறப்பிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 15,000 ரூபாயிலிருந்து 16,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும்,

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் 7,500 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நமது முன்னோர்கள் செய்த தியாகத்தின் விளைவாக பெறப்பட்ட இந்த சுதந்திர திருநாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி நமது நாட்டை ஒரு வல்லரசு நாடாக உயர்த்தவும், மேலும் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்திடவும் பாடுபடுவோம் என்று இந்த நன்னாளில் உறுதி எடுப்போம்.

நம் மக்கள், மிகவும் மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையைப் பெறுவதற்கு உறுதியான, துடிப்பான, வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்.

வாழ்க அண்ணா நாமம்!

வளர்க எம்.ஜி.ஆர் புகழ்!

ஓங்குக அம்மாவின் கீர்த்தி!

தொடர்க அம்மாவின் ஆட்சி!

வாழ்க பாரத மணித் திருநாடு, வளர்க செந்தமிழ்நாடு

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *