நாடும் நடப்பும்

2030–இல் விபத்தில்லா தமிழ்நாடு: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி


ஆர். முத்துக்குமார்


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக, கடந்த வாரம் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது. “2030 இல் விபத்தில்லா தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் பல சீரிய முயற்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தனது சாலை பாதுகாப்பு வார செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வேதனை தவிர்ப்போம்

தமிழ்நாட்டில் விபத்துகளில் உயிரைப் பறித்து விடும் பல நிகழ்வுகள் அன்றாடம் சாலைகளில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதை தடுக்க தனிநபர் ஒழுக்கமே அவசியமானது. அதற்கு உத்வேகம் தரும் விதத்தில் ஸ்டாலின் தனது அறிக்கையில் பளிச்சென்று மனதில் பதியும்படி தந்திருக்கும் சொற்றொடர்கள், “விதிகளை மதிப்போம்! வேதனைகளை தவிர்ப்போம்!! மேலும் அவர் தரும் கவித்துவமான எச்சரிக்கை ‘சாலை பாதுகாப்பு! நமது உயிர் பாதுகாப்பு!!

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, இந்தியாவில் அதிகமான சாலை விபத்துகளும், உயிர் இழப்புகளும் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம், சாலை விதிகள் குறித்த அறியாமையும், விதிகளை மதிக்கத் தவறும் மனப்போக்குமே ஆகும். ஓட்டுனரின் உளவியல், போக்குவரத்து நெருக்கடி, வாகனம், சாலை வசதி, சுற்றுப்புறம் போன்றவை வாகன விபத்துகளுக்கு காரணமாக இருந்தாலும், இவற்றில் ஓட்டுநரின் நடத்தை, அதாவது அவரின் உளவியலே, விபத்துக்கான முதன்மை காரணமாக இருக்கிறது என எண்ணற்ற ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.

சாலைகளில் வாகனம் ஓட்டும் போது சிவப்பு விளக்குகளை மீறி வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல், அதிவேக பயணம், அதிலும் குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்றவை கடும் சாலை விதிமீறல்கள் ஆகும். இத்தகைய விதிமீறல்களை கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்கள் கொண்டு வந்தாலும், சாலை விதிகளை நடைமுறைப்படுத்தினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்போடுதான் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க இயலும்.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவு குறைக்கும் பொருட்டு, இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மை காக்கும் 48 போன்ற சீர்மிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதோடு, பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்ற வகையில் சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உடனடி விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அவை இயங்கி வருகின்றன.

விழிப்புணர்வு பிரச்சாரம்

அத்துடன் நின்று விடாமல் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தி உள்ளார். அதன்படி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்; பாதசாரிகள் சாலையை பாதுகாப்பாக கடப்பதற்கு, நடை மேம்பாலங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்; அனைத்து பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டு, மாணவ, மாணவிகள் இடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவை அனைத்திற்கும் மேலாக, பொதுமக்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, விபத்துகளை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொண்டு, “விபத்திலா தமிழ்நாடு” என்ற இலக்கை அடைய ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஒரு வாரம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் தொடர்ந்து தீவிர படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *