செய்திகள்

2 பெட்டிகளில் இருந்த 264 பவுன் தங்க நகை மாயம்: போலீசில் புகார்

சென்னை, ஏப். 11–

உளுந்தூர்பேட்டை அருகே டெம்போ டிராவலரில் 2 பெட்டியில் எடுத்துச் செல்லப்பட்ட 264 பவுன் தங்க நகைகள் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் தெருவில் வசித்து வரும் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தனது சொந்த ஊரான புதூர் நாகலாபுரத்திற்கு டெம்போ ட்ராவலர் வேன் மூலம் நேற்றிரவு சென்றுள்ளனர். அப்போது வேனின் மேற்பகுதியில் தங்களது உடைமைகளை சூட்கேஸ்களில் வைத்துச் சென்றுள்ளனர்.

நகை பெட்டிகள் மாயம்

இந்நிலையில், இன்று அதிகாலை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு டீக்கடையில் தேனீர் அருந்திவிட்டு மேலே உள்ள சூட்கேஸை பார்த்தபோது அதில், இரண்டு சூட்கேஸ்கள் மட்டும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அருகிலுள்ள திருநாவலூர் காவல் நிலையம் சென்று வேனின் மீது இருந்த மற்ற சூட்கேஸ்கள் இருக்கும் போது 264 பவுன் நகைகள் இருந்த இரண்டு சூட்கேஸ்களை மட்டும் காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட திருநாவலூர் போலீசார், காணாமல் போன சூட்கேஸ்களை விக்கிரவாண்டி முதல் உளுந்தூர்பேட்டை வரை உள்ள சாலையோர உணவகங்கள் மற்றும் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்தும் சாலையோர கடைகளில் பணிபுரியும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.