செய்திகள்

164 அரசு கலைக் கல்லூரிகளில் சேர 8ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கலந்தாய்வு 25ந்தேதி தொடங்குகிறது

சென்னை, மே.6-

அரசு கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு வருகிற 8ந்தேதி (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், கலந்தாய்வு வருகிற 25ந்தேதி தொடங்குகிறது என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்திருக்கிறது.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிவிட்ட நிலையில், அதற்கடுத்ததாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பப்பதிவு எப்போது தொடங்கும்? கலந்தாய்வு எப்போது ஆரம்பிக்கும்? என்ற விவரங்களை உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று வெளியிட்டார்.

அதன்படி, 2023–24ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு வருகிற 8ந்தேதி முதல் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 19ந்தேதி என்றும் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 163 அரசு கலை கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டத்தில் இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதியதாக செயல்பட உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 164 கல்லூரிகளில் உள்ள மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்களுக்கு விண்ணப்பப்பதிவு தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு ஒருவர் ஒரு கல்லூரிக்கு மேல் விண்ணப்பம் செய்தால், ஒவ்வொரு கல்லூரிக்கும் விண்ணப்பக் கட்டணம் தனித்தனியாக செலுத்த வேண்டி இருந்தது. தற்போது ஒரே விண்ணப்பக் கட்டணத்தில் 5 கல்லூரிகளுக்கு ஒரு மாணவர் விண்ணப்பிக்க முடியும் என்ற சலுகையை உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு முடிந்ததும், மாணவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிக்கு வருகிற 23ந்தேதி அனுப்பி வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து வருகிற 25ந்தேதி முதல் 29ந்தேதி வரையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.

பின்னர் வருகிற 30ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9ந்தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும், அடுத்த மாதம் 12ந்தேதி முதல் 20ந்தேதி வரை 2ம் கட்ட பொது கலந்தாய்வும் நடத்தப்பட இருக்கிறது.

கலந்தாய்வு நிறைவு பெற்றதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் 22ந்தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்திருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *