செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் மம்தா பானர்ஜி

இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு

கொல்கத்தா, மார்ச்.11-–

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டுள்ளது. 42 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நேற்று அதிரடியாக வெளியிட்டார்.

இதன்மூலம் ‘இந்தியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறது.

மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்த கட்சி, காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் சுமுக முடிவு ஏற்படதாததால் தனித்து போட்டியிட முடிவு செய்தது.

அதன்படி மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரடா மைதானத்தில் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

அப்போது 42 வேட்பாளர்களும் மம்தா பானர்ஜியுடன் பொதுக்கூட்ட மேடைக்கு அணிவகுத்து வந்தனர். கட்சியின் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிவிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த பட்டியலில் தற்போதைய 8 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. அதேநேரம் 16 பேர் மீண்டும் வாய்ப்பு பெற்று உள்ளனர். மேலும் 12 பெண்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வேட்பாளர் பட்டியலில் முக்கியமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யூசுப் பதான் (பரம்பூர் தொகுதி), கீர்த்தி ஆசாத் (பர்தமான்-துர்காபூர்) ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

இதைப்போல நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கடந்த டிசம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மகுவா மொய்த்ராவுக்கு மீண்டும் கிருஷ்ணா நகர் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கும் சந்தேஷ்காலியை உள்ளடக்கிய பசிர்கட் தொகுதியில் முன்னாள் எம்.பி. ஹாஜி நூருல் இஸ்லாம் நிறுத்தப்பட்டு உள்ளார். அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி. நஷ்ரத் ஜகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தின் மூலம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என உறுதிபட தெரிவித்தார்.

பாரதீய ஜனதாவை தோற்கடிக்க…

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி களுக்கு எதிராக நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். அசாம் மற்றும் மேகாலயாவிலும் போட்டியிடு கிறோம். உத்தர பிரதேசத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

நாடு முழுவதும் பாரதீய ஜனதாவை தோற்கடிக்க திரிணாமுல் காங்கிரஸ் வழிவகுக்கும். மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த மாட்டோம். தடுப்புக்காவல் மையங்கள் திறக்கப்படுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

மேற்கு வங்காளம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதற்கு முன்பு, பிரதமர் மோடி அதிகாரிகளிடம் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

நாங்கள் வீடுகள் கட்டி கொடுத்திருக்கிறோம். இங்கு அவர் திட்டங்களை மட்டும் தொடங்கி வைக்கிறார். ஆனால் நிதி விடுவிப்பது இல்லை. இதுதான் அவரது உத்தரவாதம். அவர் வழங்குவது அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள்.

மேற்கு வங்காளத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய 59 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்க வில்லை. அவர்களுக்கு மாநில அரசின் நிதியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் அரசுதான் சம்பளம் வழங்கியது. அவர்கள் என்ன உத்தரவாதம் கொடுக்கிறார்கள். உங்கள் உத்தரவாதத்தில் மதிப்பே இல்லை. இது கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரிப்புக்கு வழிவகுத்தது. தேர்தலுக்கு முன், விலையை ரூ.100 குறைத்து, தேர்தலுக்கு பின் ரூ.1,000 உயர்த்துகின்றனர்.

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மூலம் ரூ.70 ஆயிரம் கோடி சம்பாதித்தனர். அப்போது ஏழைகளை பற்றி நீங்கள் நினைத்தீர்களா? அப்போது உங்கள் உத்தரவாதம் எங்கே போயிற்று? 100 நாள் வேலை திட்டம் மத்திய அரசுடையது. ஆனால் அதற்கு கூட நிதியை வழங்கவில்லை.

அடிபணியாத அருண் கோயலை

வணங்குகிறேன்

நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியையே தேர்தல் கமிஷனர் அருண் கோயலின் திடீர் ராஜினாமா காட்டுகிறது. மேற்கு வங்க நாடாளுமன்ற தேர்தல் மற்றும் படைகளை நிலைநிறுத்துவது தொடர்பாக பாரதீய ஜனதாவின் டெல்லி தலைவர்கள் மற்றும் அவரது உயர்மட்ட முதலாளிகளின் அழுத்தத்திற்கு அடிபணியாத அருண் கோயலை வணங்குகிறேன்.

தேர்தல் என்ற பெயரில் அவர்கள் (தேசிய ஜனநாயக கூட்டணி அரசு) என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வாக்குகளை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

முன்னதாக திரிணாமுல் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேசி வருவதாக காங்கிரஸ் கூறி வந்த நிலையில், தற்போது 42 தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை மம்தா பானர்ஜி கழற்றி விட்டிருப்பது உறுதியாகி உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-–

திரிணாமுல் காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாதது வருத்தம் அளிக்கிறது. இது, அக்கட்சியின் இறுதி முடிவா என்று எனக்கு தெரியாது. ஆனால், ஏதேனும் புரிந்துணர்வு கொள்ள கடைசி தருணம்வரை காங்கிரஸ் கட்சி தயாராக இருக்கிறது.

ஆனால், அந்த புரிந்துணர்வு ஒருதலைப்பட்சமான தாக இருக்கக்கூடாது. நேர்மையாகவும், பரந்த இதயத்துடனும் பேச்சு நடத்தி, உருவாக்குவதாக இருக்க வேண்டும். பரஸ்பர புரிதல் அடிப்படையில், அந்த உடன்பாடு அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *