சினிமா செய்திகள்

முன்னோடி மூத்த சினிமா ‘டான்ஸ் மாஸ்டர்’களுக்கு விருது: சென்னையில் 30-ஆம் தேதி மாபெரும் விழா!

ஸ்ரீதர் தலைமையில் இளைஞர் பட்டாளம் மும்முரம்

சென்னை, டிச 9

தமிழ் சினிமாவில் நடனத் துறையில் சிறப்பான சேவை புரிந்திருக்கும் முன்னோடி மூத்த டான்ஸ் மாஸ்டர்களுக்கு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இம்மாதம் 30ஆம் தேதி பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை- விசேஷ விழா எடுத்து, விருது கொடுத்து கௌரவிக்கிறார்கள் ஸ்ரீதர் தலைமையில் இணைந்திருக்கும் இளைஞர் பட்டாளம். ஸ்ரீதர்- இன்றைய தேதியில் முன் வரிசையில் இருக்கும் இளம் டான்ஸ் மாஸ்டர்களில் குறிப்பிடத்தக்கவர்.

1950இல் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை கடந்த 60 ஆண்டுகளில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கும்- அந்நாள் பிரபலங்களில் ஆரம்பித்து இந்நாள் வரை பணி புரிந்து கொண்டிருக்கும் கலைஞர்களின் வாழ்க்கை விவரக் குறிப்பை காணொளி காட்சியாகவும் தயாரித்து இருக்கிறார்கள். இந்தக் காணொளி காட்சி அன்றைய தினம் மேடையில் திரையிட்டு காட்டப்படும். இப்படி ஒரு முயற்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட பெருமைக்குரியவர். டி.கே.எஸ். பாபு என்று அவரை அடையாளம் காட்டி, நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார் ஸ்ரீதர்.

‘‘டான்ஸ் டான்- 2023’’ விருதுகள் (டான் என்றால் தாதா அதாவது கடின உழைப்பில் உச்சம் தொட்டவர்) என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. விருதுகள் எப்படி வழங்கப்படும் என்பது அன்றைய தினம் தான் பொதுவெளிக்கு வரும், அதுவரை சஸ்பென்ஸ் என்று ஸ்ரீதர் தெரிவித்தார்.

ஸ்ரீதரின் அன்பழைப்பை ஏற்று, கலை உலகில் நடனத் துறையில் முன்னோடிகளாக இருந்து வரும் வசந்தகுமார், சம்பத், பாபா பாஸ்கர், அசோக்ராஜா, விமலா, லலிதா- மணி, ஹரிஷ் குமார், சாந்தி குமார், விஜயமாலினி ஆகியோர் நேரில் வந்து தத்தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

‘‘இது முழுக்க முழுக்க முன்னோடி டான்ஸ் மாஸ்டர்களை, அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் விழா. ஆகவே நடனக்கலைஞர்கள், சினிமா டைரக்டர்கள் பங்கேற்கும் விழா. இந்நாள் முன்வரிசை நாயகர்கள் ஆன பிரபுதேவா, லாரன்ஸ் ராகவேந்திரா… ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம் என்றார் ஸ்ரீதர்.

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்களும் இவ்விழாவில் கவுரவிக்கப்படுகிறார்கள்.

“அடி காந்தாரி”:

இசை ஆல்பம்

டான்ஸ் மாஸ்டர்களை கௌரவிக்கும் இந்த அறிவிப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் “அடி காந்தாரி” என்னும் தனி இசை டான்ஸ் ஆல்பம் வெளியிடப்பட்டது. இதில் நாயகி அக்ஷதா ஸ்ரீதர். நாயகன் அமல் மனோகர். அக்ஷதா ஸ்ரீதரின் கலை வாரிசு, நாட்டியத்தில். இளம் நாயகனாகவே கண்ணில் தெரியும் ஸ்ரீதர் 8 அடி பாய்வார் என்றால்… அவரின் மகளோ 16 அடி பாயும் அசாத்திய திறமை கொண்டவர். மூத்த டான்ஸ் கலைஞர்கள் பலரையும் தன் அங்க அசைவில் – டான்ஸ் மூவ்மெண்ட்ஸில் வசீகரித்திருக்கிறார் அக்ஷ்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *