செய்திகள்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவே என் பெயரில் 5 பேர் போட்டி: ஓ.பன்னீர்செல்வம்

புதுக்கோட்டை, ஏப்.12-

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவே என் பெயரில் 5 பேர் போட்டியிடுகின்றனர் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட இடங்களில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பலாப்பழ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தார்.

பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணிநகர், ஓட்டப்பாலம் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், “மீனவர்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, சமுதாயக் கூடங்கள் அமைத்தல், தொகுதி பிரச்சினைகளைப் பிரதமர் மோடியின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காணப்படும்” என்று வாக்குறுதிகளை அளித்தார். மக்களிடம் நேரடியாகப் பேசி, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தும் வருகிறார்.

புதுக்கோட்டை பகுதியில் பேகையில், “தேர்தலில் போட்டியிட நான் கேட்ட சின்னங்களையே என்னை எதிர்த்து என் பெயரிலேயே போட்டியிடுபவர்களும் கேட்டனர். இந்நிலையில் குலுக்கல் முறையில் எனக்கு பலாப்பழம் சின்னம் கிடைத்தது. அவர்கள் எல்லாம் ஒ.பன்னீர்செல்வம்… நான் ஓ.பன்னீர்செல்வம்…” என விளக்கி கூறி வாக்கு சேகரித்தார்.

ஜெயலலிதாவால்

அடையாளம் காட்டபட்டவன்

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புண்ணிய பூமியான ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். தொகுதியில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், பேருந்து நிலையம் அமைத்துத் தரப்படும் நான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, முதலமைச்சராக இருந்ததால் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்ற ஏற்பாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக நல்ல கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த எழுச்சி தேர்தலில் தெரிகிறது. நான் கேட்ட சின்னம் கிடைத்தது. குழப்பம் ஏற்படுத்துவதற்காக என் பெயரில் 5 பேர் போட்டியிடுகின்றனர். ஆனால் இதனை மக்கள் புரிந்து கொண்டனர். சின்னம் மக்களுக்கு தெளிவாக தெரிகிறது. அமெரிக்காவில் இருந்து கூட இந்த சின்னத்தை தெரிந்து கொண்டு விசாரித்தார்கள். அந்த அளவுக்கு சின்னம் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகிவிட்டது.

அண்ணா தி.மு.க.வில் உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தான் உச்ச பதவியான பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அப்படி செய்யவில்லை. சர்வாதிகாரத்தில் பதவியை எடுத்துக்கொண்டார். தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பார்கள். இணைந்து செயல்படக்கூடிய அ.தி.மு.க. என்பது சாத்தியமாகும். ஆனால் எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க. மட்டுமே சாத்தியப்படும். அ.தி.மு.க. இருக்கும் வரை, தொண்டர்கள் இருப்பார்கள். இன்னும் பல காலம் அ.தி.மு.க. இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி இருக்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *