செய்திகள்

மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, நவ.28-

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் வி.பி.சிங்கின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

வி.பி.சிங்கின் உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அழைப்பிதழில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அகிலேஷ் யாதவ், வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி ஆகியோருடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ரிமோட்’ மூலம் சிலையை திறந்துவைத்தார்.

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சிலை திறப்புக்கு பின்னர் கலைவாணர் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வி.பி.சிங்குக்கு தாய் வீடு, உத்தரப்பிரதேசம் என்றால், தமிழ்நாடு தான், தந்தை வீடு. தந்தை பெரியார் பெயரை உச்சரிக்காமல் அவருடைய பேச்சு இருக்காது. அப்படிப்பட்ட தந்தை பெரியாரின் சமூகநீதி மண்ணில் வி.பி.சிங்குக்கு முதன்முதலாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாம் அவருக்கு நன்றியை காட்டி இருக்கிறோம்.

சமூக நிதி கதவை திறந்தவர்

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதிக் கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங். தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று அதில் உறுதியாக இருந்தார். வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதம் தான் என்றாலும், அவர் செய்த சாதனை என்பது மகத்தானவை. ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 27 சதவீத இடஒதுக்கீட்டைச் சாத்தியப்படுத்திக் காட்டியவர். தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், லோக்பால் சட்டம் போன்றவற்றுக்கு தொடக்கப்புள்ளியாக இருந்தார்.

தேர்தல் சீர்திருத்தங்கள், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது, நாடாளு மன்றத்தின் நடுவே அம்பேத்கர் படம், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், உழவர்கள் பிரச்சினையைத் தீர்க்க 3 குழுக்கள், டெல்லி குடிசைப்பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (எம்.ஆர்.பி.) அச்சிட உத்தரவு, நுகர்வோர் பாதுகாப்பு, காவிரி நடுவர் மன்றம் அமைப்பு இப்படி பல சாதனைகளை செய்து காட்டிய மாபெரும் சாதனையாளர்தான்வி.பி.சிங்.

சாதிவாரி கணக்கெடுப்பு

சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சினை இல்லை; எல்லா மாநிலங்களின் பிரச்சினை. எங்கெல்லாம் புறக்கணிப்பு ஒதுக்குதல் தீண்டாமை அடிமைத்தனம் அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை முறிக்கின்ற மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி. அந்த சமூகநீதி தழைக்க வேண்டுமானால், தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின–பழங்குடியின மக்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு முழுமையான இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும். இதை அகில இந்திய அளவில் கண்காணித்து, உறுதி செய்ய அனைத்து கட்சி எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். இதனை அகில இந்திய அளவில் சமூகநீதியில் ஆர்வம் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக இணைந்து மக்கள் நலனுக்காகச் செயல்படவேண்டும்.

“வி.பி.சிங்கின் முயற்சியால் தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு அடியாவது முன்னேறி இருக்கிறார்கள். ஆனால், நமக்கான உரிமைகள் இன்றைக்கும்கூட முழுமையாக கிடைக்காத, கிடைக்க முடியாத சூழல்தான் நிலவுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு 2006-க்கு பிறகுதான் நடைமுறைக்கு வந்தது.

ஆனால் பல்கலைக்கழக மானியக்குழு இணை இயக்குனர் பதவிக்கு இடஒதுக்கீடே கிடையாது. எல்லாமே பொதுப்பிரிவு. மத்திய அரசின் துறைச் செயலாளர்கள் 89 பேரில் 85 பேர் உயர் சாதியினர். பட்டியலினப் பிரிவைச் சேர்ந்தவர் ஒரே ஒருவர், பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 3 பேர் மட்டும் தான். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட கிடையாது. மத்திய அரசு துறைகளின் கூடுதல் செயலாளர்கள் 93 பேரில், 82 பேர் உயர் சாதியினர். பிற்படுத்தப்பட்டவர் கிடையாது. மத்திய அரசு துறைகளின் இணைச் செயலாளர்கள் 275 பெயரில் 19 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள். 2018 முதல் 2023 வரை நாடு முழுவதும் ஐகோர்ட்டுகளில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 72 பேர் மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் 458 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை. ஏன், அரசுத் துறைகளின் பதவி உயர்வுகளின் போது இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தபடவில்லை. இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்கு தான் நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும்”

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய உறுதிமொழி; ‘‘இந்தியா முழுமைக்கும் வாழும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின–பழங்குடியின சிறுபான்மை–விளிம்பு நிலை மக்களுடைய உயர்வுக்கான அரசியல் செயல்திட்டங்கள் அரசின் செயல்திட்டங்களாக மாற்றி அமைக்க இன்றைக்கு உறுதி ஏற்போம்!’’ என்று கூறி, ‘‘வி.பி.சிங். மறையலாம். அவர் ஏற்றி வைத்த சமூக நீதி தீபம் அணையாது. அவரை யார் மறந்தாலும், தமிழ்நாடு மறக்காது. திராவிட மாடல் அரசு மறக்காது!’’

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு வி.பி.சிங்கின் சிறிய அளவிலான முழு உருவச்சிலை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. வி.பி.சிங்கின் வாழ்க்கை வரலாறு குறும்படமும் காண்பிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *