செய்திகள்

காசா கடற்கரையில் விளையாடிய குழந்தைகள்

போர் நிறுத்தம் நீட்டிப்பு: விடுவிக்கப்பட்ட 11 பிணைக் கைதிகளுக்கு இணையாக 33 பாலஸ்தீனியர்களை விடுவித்த இஸ்ரேல்

ஜெருசலேம், நவ. 28–

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இணையாக 33 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.

போர் நிறுத்தத்தை தொடர்ந்து காசா கடற்கரையில் குடும்பத்துடன் குவிந்த குழந்தைகள் கடல் அலையில் துள்ளி குதித்து விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்த மாதம், 7ம் தேதியில் இருந்து போர் நடந்து வந்தது. பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில், 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்கத் தலையீடு, கத்தார், எகிப்து மத்தியஸ்தத்தின் விளைவாக இந்தப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டப் போர் நிறுத்தத்தின் கடைசி நாளான நேற்று இரவு 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்தது. விடுவிக்கப்பட்ட 11 பிணைக்கைதிகளும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்தின் முதல் நாளான இன்று அதிகாலை ஹமாஸ் விடுவிப்புக்கு இணையாக 33 பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்து மேற்கு கடற்கரைப் பகுதிக்கு கொண்டு சென்றது இஸ்ரேல்.

கடந்த 7ம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட 240 பேரில் இதுவரை 62 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். போர் நிறுத்தத்தை தொடர்ந்து காசா கடற்கரையில் குடும்பத்துடன் குவிந்த குழந்தைகள் கடல் அலையில் துள்ளி குதித்து விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர்.

இஸ்ரேல்–ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் 2 நாள் நீட்டிக்கப்பட்டது நம்பிக்கை அளிக்கிறது. காசா போர் நிறுத்தம் முழு மனிதாபிமான போர் நிறுத்தமாக மாற வேண்டும் என ஐ.நா., பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரஸ் வலியுறுத்தி உள்ளார்.

இஸ்ரேலிய மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு மேலும் சிலரை விடுவிக்க நடவடிக்கை எடுத்தால், நாங்கள் 50 காசா பெண்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எக்ஸ் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப்போர் நிறுத்தத்தின் மூலம் காசாவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மருந்துப் பொருள்கள், எரிபொருள்கள் ஆகியவை தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தாலும், நிவாரணப் பொருள்களில் தட்டுப்பாடு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 200 லாரிகள் வீதம் 2 மாதங்களுக்கு நிவாரண உதவிகள் காசாவிற்கு அனுப்பப்பட வேண்டும் என ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *