செய்திகள்

உலகிலேயே மிகப்பெரிய தியான மையம்: வாரணாசியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

வாரணாசி, டிச.19-

வாரணாசியில், உலகிலேயே மிகப்பெரிய தியான மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நேற்று முன்தினம் சென்றார். 2ம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், நேற்று அவர் ‘ஸ்வர்வேத மகாமந்திர்’ என்ற தியான மையத்தை திறந்து வைத்தார். இது உலகிலேயே மிகப்பெரிய தியான மையம் ஆகும்.

அம்மையம் 7 மாடிகளை கொண்டது. ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் அமர்ந்து தியானம் செய்ய முடியும். திறப்பு விழாவை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி தியான மையத்தை சுற்றி பார்த்தார்.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-

ஒரு காலத்தில் நாம் அடிமை மன நிலையில் இருந்தோம். தற்போது காலச் சக்கரம் மாறிவிட்டது. அந்த மன நிலையில் இருந்து மாறவேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகம் இந்தியாவை பெருமிதத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டிய தருணமிது. அடிமைத்துவ காலத்தில் இந்தியாவை பலவீனப்படுத்த முயன்ற கொடுங்கோலர்கள் முதலில் நமது கலாச்சார சின்னங்களைத்தான் குறிவைத்து அழித்தனர். எனவே, சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் பழைய கலாச்சார சின்னங்களை மீட்டெடுப்பதுடன், அவற்றை மறுகட்டமைப்பு செய்து புதுப் பொலிவேற்ற வேண்டியது தற்போது நமது தலையாய கடமையாக மாறியுள்ளது.

காசி விஸ்வநாதர் ஆலயம் இந்தியாவின் அழியாத பெருமைக்கு எடுத்துக்காட்டு . அதேபோன்று மகாகாள் மஹாலோக் நமது அழியாத தன்மைக்கு சான்று. கேதார்நாத் ஆலயம் வளர்ச்சியின் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

காசி என்று அழைக்கப்படும் வாராணசி (பிரதமரின் நாடாளுமன்ற தொகுதி) இந்தியாவின் கலையை வடிவமைத்து நினைத்துப்பார்க்க முடியாத உயரத்துக்கு கொண்டு சென்ற நகரமாகும். இங்கிருந்து அறிவு மற்றும் ஆராய்ச்சிக்கான புதிய வழிகள் திறக்கப்பட்டன. இங்கிருந்துதான் மனித விழுமியங்கள் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வு அகில உலகத்துக்கும் சென்றுசேர்ந்தது என்பது பெருமிதத்துக்குரியது.

9 தீர்மானங்களை

பின்பற்ற வேண்டும்

மக்கள் 9 தீர்மானங்களை பின்பற்ற வேண்டும். முதலாவது ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும். நீர்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இரண்டாவது, கிராமங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மூன்றாவது உங்கள் கிராமம், உங்கள் பகுதி, உங்கள் நகரத்தை சுத்தமாக பராமரிக்க உறுதியேற்க வேண்டும். நான்காவது, உள்ளூர் தயாரிப்பு பொருட்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். ஐந்தாவது, முடிந்த வரை சொந்த நாட்டை சுற்றிப் பாருங்கள், இதைசெய்யும் வரை நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது. பெரிய பணக்காரர்கள் வெளிநாடுகளில்திருமணம் செய்வதை தவிர்த்து, இந்தியாவில் திருமணங்களை நடத்த முன்வர வேண்டும்.

ஆறாவது, இயற்கை விவசாயம் குறித்து நமது விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பூமித்தாயை காப்பாற்றுவதற்கான முக்கியமான பிரச்சாரம் அது. ஏழாவது, உணவில் சிறுதானிய வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அது, உடல் மற்றும் மனவலிமை பெற பேருதவி புரியும். எட்டாவது உடற் தகுதியைப் பெற யோகா அல்லது ஏதேனும் விளையாட்டை உங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றுங்கள்.

எனது இறுதியான மற்றும் ஒன்பதாவது கோரிக்கை என்பது குறைந்தபட்சம் ஒரு ஏழைக் குடும்பத்துக்காவது உதவுங்கள். இந்தியாவில் இருந்து வறுமையை அகற்ற இதனை மக்கள் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையில், காலச்சக்கரம் மீண்டும் ஒருமுறை சுழன்றுள்ளது. அடிமை மனப்பான்மையில் இருந்து விடுதலை பெற்று விட்டதாகவும், நமது பாரம்பரியம் குறித்து பெருமைப்படுவதாகவும் செங்கோட்டையில் இருந்து நாடு அறிவித்தது.

சோமநாதர் கோவிலில் இருந்து தொடங்கிய பணி, இப்போது ஒரு இயக்கமாக மாறிவிட்டது. காசி விஸ்வநாதரின் பிரமாண்டம், இந்தியாவின் பெருமையை பாடி வருகிறது. காசிக்கு புத்துயிரூட்ட அரசு, சமூகம், துறவிகள் ஆகியோர் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *