செய்திகள் முழு தகவல் வருவது புரிகிறதா?

வருவது புரிகிறதா? பகுதி 1- பிளாக்செயின் தொழில்நுட்பம், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?


இணையத்தின் தோற்றம்!


இணைய உலகத்தின் அடுத்த பரிமாணம் வெப்–3.0: நோக்கமும் அபார வளர்ச்சியும்!!


நவீன செல்பேசிகளும் 5 ஜி தொழில்நுட்பமும் இணைந்து இன்று உலகை மிக மிக சுருக்கி, இலகுவாக்கிவிட்டது என்றே சொல்லலாம். இதற்கெல்லாம் வித்திட்டது என்றால் கணினி வலைப்பின்னலில் (NETWORK) தொடங்கி இணையம் ( INTERNET) எனும் வளர்ச்சிதான் என்பதை நாம் அறிவோம். இணையம் இல்லாமல் இன்று உலகம் இல்லை என்னும் அளவுக்கு, இணைய உலகம் அபாரமான வளர்ச்சி அடைந்து உள்ளது.

இதற்கு காரணமாக அமைந்தது, சோவியத் யூனியன் 1957-ஆம் ஆண்டு ‘ஸ்புட்னிக்’ என்னும் செயற்கைக்கோளை விண்ணில் பறக்கவிட்டதுதான். இது தமக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கான ஆய்வாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உண்டாகியது. எனவே அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர், ஓர் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஆணை பிறப்பித்தார். அந்த ஆய்வமைப்பு ‘ஆர்ப்பா’ (ARPA – Advanced Research Project Agency) எனப்பட்டது. ’ஆர்ப்பா’வின் முதன்மைக் குறிக்கோள் சோவியத் யூனியனைப் போன்று விண்கலனை ஏவிப் பரிசோதனை செய்வதேயாகும்.அடுத்த ஆண்டான 1958-இல் அமெரிக்காவின் ‘எக்ஸ்புளோரர்’ விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

1969-இல் ‘அர்ப்பாநெட்’ (ARPANET – The Advanced Research Projects Agency Network) அமைக்கப்பட்டது. இப்படித்தான் இணையத்தின் தொடக்கப்புள்ளி அமைந்தது.இதன் முதல் கட்ட ஆய்வுகள் 1969 இல் தொடங்கி நடைபெற்றாலும் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமான இணையப் பயன்பாடு 1990 இல் தொடங்கியது. இதனையே வெப்–1.0 என்று அழைக்கிறார்கள். 1990 முதல் 2000 ஆண்டு வரையில் அதன் வளர்ச்சி தொடர்ந்தது. அதன் வெளிப்பாடாக இணைய வானொலி, இணைய தொலைக்காட்சி, yahoo போன்ற நிறுவனங்கள் உருவாகி மின்னஞ்சல் போன்றவை பயன்பாட்டுக்கு வருகிறது. கணினிகள் ஒன்றோடு ஒன்று வலைப்பின்னலில் இணைக்கப்பட்டது.

அதன்மூலம் பொதுமக்கள் வேறு கணினிகளில் உள்ள தகவல்களை பெற முடிந்தது. ‘READ ONLY’ எனும் வகையில் தகவல்களை படிக்க மட்டுமே முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, கூகுள் நிறுவனமும் இந்த இணைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பங்கேற்றது. வெப்–1.0 என்ற இணைய உலகில் பயனாளிகளாக மட்டுமே பொதுமக்கள் இருந்த நிலையை மாற்றி, வெப்–2.0 பங்கேற்பாளர்களாகவும் உருமாற்றுகிறது என்பதே அதன் அடுத்த வளர்ச்சி. இதுகுறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்…


– : மா .செழியன் :–


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *