செய்திகள் நாடும் நடப்பும்

மழை வெள்ளத்தால் நிலைகுலைந்துள்ள சென்னை பெருநகரப் பொருளாதாரம்


தலையங்கம்


புயல் மழையில் மூழ்கி எழுந்து மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருக்கும் சென்னை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கி விட்டது.

அருவி போல் சிறு ஓய்வின்றி தொடர்ந்து 35 மணி நேரத்தில் 43 சென்டிமீட்டர் மழைப் பொழிவு என்பது படுமோசமான இயற்கை சீற்றம்; அதன் பாதிப்பு நகர கட்டுமானத்தை சிதைத்திருப்பதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

நெளிந்து இருக்கும் வாகனங்களின் முன்பகுதிகள், நாசமாகியிருக்கும் நிலத்தடி கட்டுமானங்கள், பெயர்ந்து போய்விட்ட சாலைகள், மூழ்கிவிட்ட நடைபாதை வர்த்தக நிறுவனங்கள், சிதைந்து நிலைகுலைந்து இருக்கும் தொழில்சாலைகள் என அடிக்கிக் கொண்டே போகலாம்.

அந்த சீரழிவைச் சந்தித்தோர் பட்டியலில் அச்சக துறையும் புத்தகப் பதிப்பு துறையும் உண்டு.

சுய தொழில் செய்து சம்பாதிக்க மிக உதவியாக இருக்கும் இருசக்கர வாகனங்கள் வெள்ள நீரில் பல மணி நேரம் மூழ்கி இருந்ததால் பழுதாகி இருக்கும் நிலையில் சரி செய்து மீண்டும் சவாரிப் பணிகளுக்கு தயாராக குறைந்தது 20 நாட்கள் தேவைப்படுகிறது.

அலுவலகம் சென்று திரும்ப உதவும் பலரின் கார்கள் பிற வாகனங்கள் வந்து மோதி இடிபட்டுச் சாலை ஓரங்களில் தவித்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

இப்படி ஒரே நேரத்தில் ஆயிரம் கார்கள் ஒவ்வொரு பகுதியிலும் ரிப்பேருக்கும் காப்பீடுகளுக்கும் விண்ணப்பங்களையும் சரிபார்த்து உரிய தீர்ப்பு தர 30 நாட்களுக்கும் மேல் தாமதமாகலாம்!

3 நாட்களுக்கும் மேல் பால் வினியோகம் எல்லா பகுதிகளிலும் சீராகவில்லை . இது ஆவின் தயாரிப்பில் கிடையாது என தமிழக அரசு விளக்கம் தந்துள்ளது. ஊழியர்களில் பலர் அலுவலகம் திரும்பி உரிய தரக் கட்டுப்பாடுகள், பிற சமாச்சாரங்களையும் சரி செய்து பார்த்த பிறகு தானே முழு அளவு தயாரிப்பை துவங்கியிருப்பார்கள்.

அதேபோல் நகர பால் வினியோக கட்டுமானமும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும். ஆனால் வீட்டிற்கு கொண்டு வந்து தரும் கடைநிலை தொழிலாளி சந்தித்த மழைச் சேதத்தில் இருந்து முழுமையாக தப்பியிருப்பாரா? அவரது தனிப்பட்ட சோகத்தால் பணிக்கு திரும்ப வர முடியாது இருந்தால் அதனாலும் பால் வினியோகம் தடைப்பட்டு விடும் அல்லவா?

இது போன்ற சேதத்தால் சென்னையின் பொருளாதாரம் இந்த மாதம் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

சிறு துளிப் பெரும் வெள்ளம் என்பது நமக்கு புரிந்தது தான் . அதன் முதல் புள்ளியாய் தமிழக முதல்வர் தனது ஒரு மாதச் சம்பளத்தை மழை நிவாரணத்திற்கு தந்துள்ளார்.

அது போன்றே பலர் சிறுசிறு உதவிகளை ஆங்காங்கு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்படி முதல் உதவி போல் தரப்படும் சிறு சிகிச்சை தான் உயிர் காக்கும் பேறுஉதவியாக இருக்கும்.

கார் வைத்திருப்போருக்கு காப்பீடு தொகை வரும் என்ற நம்பிக்கையில் இம்மாத சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையை செலவு செய்து விடுவார்.

ஆனால் காப்பீடு வசதியைக் கூடப் பெற முடியாத பலரின் வாழ்வில் இந்த மழை மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் தள்ளி அவர்களை தவிக்க வைத்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பேரிடர் நிதி உதவிகள் பல கோடி ரூபாய்கள் என்ற அறிவிப்பு இனிய செய்தியாக இருந்தாலும் அடுத்த வேளை உணவுக்கு தவித்துக் கொண்டிருப்போருக்கு அது எந்த வகையில் நிவாரணம் தரும்?

முதல்வர் ஸ்டாலின் இது பற்றி மேலும் அதிகாரிகள், நிபுணர்களுடன் ஆலோசித்து சாமானியனின் சுமையை குறைக்க வழி காண வேண்டும்.

பாதிப்படைந்த தொழில்பேட்டையில் மின்சார கட்டணத் தள்ளுபடி தரலாம்.

பாதிப்படைந்த நடைபாதை கடைகளுக்கு ஆண்டுக்கான வரி விலக்கு தரலாம்.

பாதிப்படைந்த ஓட்டல்கள், தொழிற்சாலைகளுக்கு மறுசீரமைப்புக்கு குறைந்த அல்லது வரியில்லா வங்கி கடன் வசதிகளையும் தர வேண்டும்.

விமான சேவைகளும் ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்ட போது கட்டணம் முழுமையாக திரும்பத் தரப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மேற்கொள்ள இருந்த பணிகள் பாதித்தது அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு அல்லது சிரமத்திற்கு அடுத்த முறை மேற்கொள்ளும் பிரயாணத்திற்கு கட்டண சலுகை தரப்பட வேண்டும்.

இப்படி நேரடி பாதிப்படைந்தோருக்கும் மறைமுகமாக பாதிப்பால் சிரமப்பட்டோருக்கும் உதவுவது தான் மத்திய, மாநில அரசுகளிடம் மக்கள் எதிர்பார்க்கும் உதவிகள் என்பது தான் உண்மை.

சர்வதேச அமைப்பு இந்தியாவில் இயற்கை பேர் ஆபத்துகள் காரணமாக 2022ல் ஏற்பட்ட இழப்பு 42 கோடி டாலர் என்று கூறுகிறது.

ஆண்டுக்கு ஆண்டு மும்பையில் அல்லது இமயமலை பகுதியில் அல்லது பெங்களூரில் நடப்பு ஆண்டு சென்னையில் அப்படி ஒரு பிரளயத்தை பொருளாதாரம் சந்தித்திருக்கிறது.

பாதிப்படைந்த மக்கள் நம்பிக்கையுடன் மீண்டும் உடனே எழுந்து நின்று நடைபோட வைத்தால் மட்டுமே பொருளாதார மீட்சி துவங்கும். அதில் தாமதம் செய்தால் சர்வதேச முதலீட்டாளர்கள் நமது வளர்ச்சி மீதுள்ள நம்பிக்கை தகர்ந்து விடும். முதலீடுகளின் வரத்தும் நின்று விடும் அபாயமும் உண்டு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *