செய்திகள்

அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்

மனுதாக்கல் செய்ய இன்னும் 2 நாட்கள் உள்ளன

சென்னை, மார்ச்.25-

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க., அண்ணா தி.மு.க., பா.ஜக., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

அனைத்து இடங்களிலும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்புடன் நடந்தது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க., அண்ணா தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். மற்ற தலைவர்களும் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். இதையடுத்து தமிழக நாடாளுமன்ற தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. 27ந்தேதி வரை வேலை நாட்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் பெறப்படுகிறது. வேட்புமனு தாக்கலின்போது அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு போன்றவற்றில் மும்முரமாக இருந்ததால், ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை துவங்கி விட்டனர்.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் தி.மு.க., அண்ணா தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

நல்ல நேரம்

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து பவுர்ணமி நாளில் மனுதாக்கல் செய்தனர்.

எந்த ஒரு காரியத்தையும் நல்ல நாளில் தொடங்குவது அண்ணா தி.மு.க.வின் வழக்கமாகும். அந்த வகையில் ஜெயலலிதா வழியை பின்பற்றும் எடப்பாடி பழனிசாமி அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் இன்று நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

அதன்படி அ.தி.மு.க.வின் 33 வேட்பாளர்களும் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

ஜெயவர்த்தன், ராயபுரம் மனோ

அண்ணா தி.மு.க. வேட்பாளர்களான தென்சென்னையில் ஜெயவர்த்தன், வடசென்னையில் ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் தனி தொகுதியில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கோவையில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார்.

தென்சென்னை தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தன் வேட்பு மனுதாக்கல் செய்த போது அவரது தாயார், மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் கே.பி.கந்தன், எம்.கே.அசோக் உடன் இருந்தனர்.

இதேபோல் அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்களும் இன்றைய தினத்தை தேர்ந்தெடுத்து மனு தாக்கல் செய்தனர். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகர் இன்று மனு தாக்கல் செய்தார்.

இதே போல் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் , ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

விருதுநகர் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்த்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தென்சென்னையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அடையாறில் உள்ள தேர்தல் அலுவலகத்திலும், வடசென்னையில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி ராயபுரம் மண்டல அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.

தி.மு.க. கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் நாகை, திருப்பூர் தொகுதியிலும், மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரைவைகோ, வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் பிரதீப் குமாரிடம் தாக்கல் செய்தார்.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைக் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை கோவையில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அக்கட்சியின் வடசென்னை வேட்பாளர் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ராயபுரம் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழிசை, நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி பா.ஜ.க. வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் தேர்தல் அலுவலர் ஸ்ரீதரிடம் மனுவை தாக்கல் செய்தார்.

நெல்லை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன், வேலூர் தொகுதியில் ஏ.சி. சண்முகம் (பா.ஜ.க) ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் சுயேட்சை வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஒவ்வொரு வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்த போது அவர்களுடன் மாவட்டச் செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் வந்திருந்தனர். இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வேட்பு மனு தாக்கலுக்கு வந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் தேர்தல் அலுவலகத்துக்கு செல்ல அனுமதி கிடையாது என்பதால் 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்தப்பட்டனர்.வேட்பாளருடன் 5 பேர் மட்டும் மனு தாக்கலின்போது, தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருவிழா கோலம்

நல்ல நாளான இன்று ஒரே நேரத்தில் அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் தேர்தல் அலுவலகத்தில் திருவிழா போல் கூட்டம் களை கட்டியது. ஒவ்வொரு வேட்பாளர்களும் மற்ற வேட்பாளர்களை சந்தித்து கொண்டபோது மகிழ்ச்சியுடன் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் இன்று மனுதாக்கல் செய்ததால், தேர்தல் அலுவலகங்கள் முன்பு பாதுகாப்பு கருதி வழக்கத்தை விட அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் மனு தாக்கல் செய்ய வரும்போது அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும் தேவையான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீசார் செய்திருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை தமிழகம் முழுவதும் 78 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை வடசென்னை தொகுதிக்கு 10 பேரும், தென்சென்னை தொகுதிக்கு 2 பேரும், மத்திய சென்னை தொகுதிக்கு 2 பேரும் என மொத்தம் 15 பேர் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். 12 தொகுதிகளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

28ந்தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் திரும்பப்பெற 30ந்தேதி கடைசி நாள். அன்று மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.

––––––

ராமநாதபுரம் தொகுதி

ஓ.பன்னீர்செல்வம்

வேட்பு மனு தாக்கல்

––––––––––––––––––––

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக, மருச்சுக்கட்டு பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம் அங்கு வைத்து வேட்பு மனுவில் கையெழுத்து போட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அண்ணா தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *