சிறுகதை

பஞ்சு மிட்டாய் – ராஜா செல்லமுத்து

அம்மா எனக்கு பஞ்சு மிட்டாய்? என்று பள்ளிக்கு செல்லும் குழந்தை கிரி வீதியில் விற்றுக்கொண்டு போகும் பஞ்சு மிட்டாயைக் கேட்ட போது அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் யூனிஃபார்ம் எல்லாம் அழுக்காயிரும் . ஸ்கூல் முடிச்சு சாயங்காலம் வந்து சாப்பிட்டுக்கலாம் என்று அம்மா புவனேசுவரி சொல்லியும் கேட்காத கிரி அடம்பிடித்து வண்ண வண்ணமாய் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்த பஞ்சுமிட்டாயை வாங்கித் தின்றான்.

பார்த்து யூனிஃபார்ம்ல பண்றாங்க மெதுவா சாப்பிடு என்று புவனேசுவரி சொல்வதைக் கூட காதில் கேட்காத அந்தக் குழந்தை உதட்டில் வைத்ததும் கரைந்து போகும் அந்த பஞ்சு மிட்டாயைத் தின்று கொண்டிருந்தது .

எதுக்கு தான் குழந்தைங்க ஸ்கூலுக்கு போகும் போது இத கொண்டு வராங்களோ? வேணும்னே வியாபாரம் செய்ய கொண்டு வந்து இந்த மாதிரி குழந்தைகளக் கெடுக்குறாங்க குழந்தை அழுது அடம் புடிக்கும்; எப்படியும் அம்மா அப்பா வாங்கி கொடுத்து விடுவாங்கன்ற தைரியத்தில் தான் இந்த பஞ்சு மிட்டாய விக்கிறவங்க எல்லாம் கரெக்டா ஸ்கூல் முடிஞ்ச நேரமும் ஸ்கூல் ஆரம்பிக்கும் நேரம் வர்றாங்க என்று புவனேசுவரி புலம்பிய படியே தன் மகனை பள்ளிக்கு கூட்டிச் சென்றாள்.

பஞ்சு மிட்டாய் தின்ற திருப்தியில் குழந்தை அம்மாவிற்கு என்றும் இல்லாமல் அன்று நிறையத் தடவை கைகாட்டியது.

சரி போதும் என்று சொல்லச் சொல்ல மேலும் மேலும் கைகாட்டி சென்றது.

பய இத்தன தடவ கை காட்டுறானே என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டே வந்தாள் புவனேஸ்வரி

எப்போதும் சாயங்காலம் 5 மணிக்கு பள்ளி முடியும் போது குழந்தையை கூட்டி வரும் புவனேசுவரிக்கு அன்று மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே அவளின் செல்போன் அலறியது.

யார் இந்த நேரத்தில? என்று சாவகாமாக கேட்ட புவனேசுவரியின் காதில் இடியாக இறங்கியது ஒரு தகவல்.

என்னது என் பையன் மயக்கம் போட்டு விழுந்துட்டானா? என்ன சொல்றீங்க காலைல நல்லா தானே இருந்தான்? என்று அழுகையும் கண்ணீருமாகப் குரல் தழுதழுக்கப் பேசினாள் புவனேசுவரி.

நீங்க சீக்கிரமா ஸ்கூலுக்கு வாங்க என்று பள்ளி நிர்வாகம் குறிப்பிட என்னாச்சோ ஏதாச்சோ என்று அரக்கப் பரக்கப் பள்ளிக்கூடத்திற்கு கிளம்பினாள் புவனேஸ்வரி.

அங்கு மயங்கிய நிலையில் கிடந்தான் கிரி

என்னாச்சு ? என்று மகனை வாரி அணைத்து கண்ணீர் மல்க சுற்றி இருந்தவர்களை கேட்டாள்..

என்னன்னு தெரியலம்மா நல்லா தான் ஸ்கூல்ல இருந்தான். அப்படி மயக்கம் வந்து கீழ விழுந்திட்டான். ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக பயமா இருந்தது. அதான் உங்கள சீக்கிரமாக வரச் சொன்னாேம். வாங்க போலாம் என்று மருத்துவமனைக்கு உடனே அழைத்து சென்றார்கள்

அங்கு கிரிஷைச் சோதித்த டாக்டர்

காலைல ஏதாவது குழந்தைக்கு கொடுத்தீங்களா? என்று கேள்வியாக கேட்டார்

ஆமா சார் டிபன் சாப்டான்.

அதுக்கப்புறம் வேற ஏதாவது வாங்கி கொடுத்தீங்களா? என்று டாக்டர் கேட்ட போது

சற்று யோசித்த புவனேசுவரி ஆமா சார். பஞ்சுமிட்டாய் சாப்பிட்டான் என்று அழுது கொண்டே சொன்னாள்

அதுதான் இப்ப பிரச்சினையே. அது குழந்தையை பாதிச்சு இருக்கு. நல்ல வேள கூட்டிட்டு வந்துட்டீங்க. இல்லன்னா விளைவு விபரீதமாக இருந்திருக்கும் என்று மருத்துவர் எச்சரித்துக் கொண்டே கிரிக்கு மருத்துவம் பார்த்தார்.

பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல. இனிமே இந்த பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுக்காதீங்க. அதுல கலர் வரணும்ங்கிறதுக்காக சில ரசாயன வண்ணங்களை சேக்குறாங்க. அது குழந்தைங்களுடைய பிளட்டில சர்குலேட் ஆகி பிரச்சனை ஏற்படுத்துது

என்று அந்த மருத்துவர் சொன்னபோது

சார் நான் வேண்டாம்னு தான் சொன்னேன். ஆனா கரெக்டா ஸ்கூல் ஆரம்பிக்கும்போதும் முடியும் போதும் இந்த பஞ்சு மிட்டாய் விக்கிறவங்க ஸ்கூல் பக்கத்தில் உள்ள தொந்தரவு பண்றாங்க. குழந்தை கேட்டு அடம் பிடிச்சு எப்படியாவது சாப்பிட்டுறாங்க. இதை தடுக்கிறதுக்கு என்ன வழின்னு தெரியவில்லை சார்?என்றாள் புவனேசுவரி.

அவள் சொன்னபோது அடுத்தடுத்த மருத்துவமனைகளில் இரண்டு மூன்று குழந்தைகள் அட்மிட் ஆனார்கள்.

கிரசுக்கு சொன்ன அதே விஷயத்தை தான் எல்லா மருத்துவர்களும் பஞ்சு மிட்டாயில் புட்பாய்சன் கலந்திருப்பதாகச் சொன்னார்கள்.

மறுநாள் அதிரடியாக எல்லா பஞ்சு மிட்டாய் வியாபாரிகளையும் பிடித்து அதில் கலப்படம் செய்திருக்கும் நச்சுப் பொருட்களை ஆய்வு செய்து அத்தனையும் குழி தோண்டிப் புதைத்தார்கள்.

இனிமேல் பஞ்சுமிட்டாய் வித்தால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று பஞ்சு மிட்டாய் இருப்பவர்களை எச்சரித்து அனுப்பினார்கள் காவல்துறையினர்.

நாட்கள் கடந்தன.

கிரி உடல்நிலை சரியானது; வழக்கம் போல அன்று காலை பள்ளிக்கு செல்வதற்கு புவனேசுவரி கிளம்பினாள்.

எங்க கொஞ்ச நாளா பஞ்சுமிட்டாய் விக்கிறவங்கள காணோம் என்று ஏக்கமாய்க் கேட்டான் கிரி.

அவங்க லீவுல இருக்காங்களாம்; இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வருவார்களாம் என்று குழந்தைக்கு புரியாத விஷயத்தை மறைத்து புரியும் மொழியில் சொன்னாள்.

எனக்கு பஞ்சு மிட்டாய் வேணும் என்று அடம் பிடித்தான் கிரி.

இல்லையே ? என்று புவனேசுவரி சொல்ல

எனக்கு பஞ்சு மிட்டாய் வேணும் என்று அடம்பிடித்து அழ ஆரம்பித்தான்

என்னென்னவோ பொருட்களை வாங்கி கொடுத்தாள்; அந்தச் சிறுவன் சமாதானமாக வில்லை.

சரி இப்ப ஸ்கூலுக்கு போ; சாயங்காலம் உனக்கு பஞ்சு மிட்டாய் வாங்கி வச்சிருக்கேன் என்று மகனை ஆறுதல் சொல்லி அனுப்பினாள்

சத்தியமாக என்று தாயிடம் கேட்டான் கிரி .

எஸ் என்றாள் புவனேஸ்வரி.

சாயங்காலம் பள்ளியை முடித்துவிட்டு கூப்பிட்டு வந்தாள்.

அம்மா பஞ்சுமிட்டாய் எங்க? நீ சாயங்காலம் வாங்கி தரேன்னு சொன்னே ? எனக்கு பஞ்சு மிட்டாய் வேணும்

என்று அடம் பிடித்தான்.

இன்னைக்கு இந்த பக்கம் வரல; வீட்டு பக்கம் வந்திருந்தாங்க. வீட்டில் வாங்கி வச்சிருக்கேன் வா என்று புவனேசுவரி வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்

நீ பொய் சொல்ற ?

வீட்ல இருக்கு வா என்று இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

.. குச்சியில் சுற்றப்பட்ட பஞ்சுமிட்டாயை கிரிக்கு கொடுத்தாள் புவனேஸ்வரி.

எப்படிம்மா என்று புவனேஸ்வரி கழுத்தோடு கட்டிக் கொண்டது குழந்தை

எப்ப பஞ்சு மிட்டாய்கார் வந்தாங்க? என்று கிரீ விசாரித்தான்

சாயங்காலம்

இனிமேல் நீ வீட்டிலேயே வாங்கி வை. பஞ்சு மிட்டாய் நான் வீட்டில் சாப்பிட்டுக்கிறேன்

என்றான் கிரி

மறுநாள் பள்ளிக்கு செல்லும் போது

இன்னைக்கு சாயங்காலமும் பஞ்சு மிட்டாய் வாங்கி வச்சுருக்கனும் சரியா ?

கிரியைப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து வீட்டிலேயே எந்தக் கலப்படமும் இல்லாமல் தாய் அன்பில், பாசம் குழைத்து இனிப்புச் சேர்த்து பஞ்சு மிட்டாய் வீட்டிலேயே உருவாக்கினாள் புவனேஸ்வரி.

அவள் மட்டும் அதை செய்யவில்லை . சுற்றி இருந்த குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கும் பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் வித்தையை சொல்லி தந்தாள் புவனேஸ்வரி.

எல்லா வீடுகளிலும் வண்ணங்களற்ற வெண்ணிறத்தில் தயாராகிக் கொண்டிருந்தது பஞ்சு மிட்டாய்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *