சிறுகதை

வேர்கள் – ராஜா செல்லமுத்து

அனுதினமும் அருகில் இருக்கும் வீட்டில் சண்டை பிடித்துக் கொண்டே இருப்பார் தட்சிணாமூர்த்தி.

காரணம் அவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டிலிருந்து பப்பாளி மரம், தென்னை மரம் ஆகியவற்றின் இலைகள் கீற்று எல்லாம் தழைத்ததும் உதிர்ந்தும் கிளைகளை, கீற்றுகளை உள்ளே நீட்டியும் நிற்பதுதான். அது தட்சிணாமூர்த்திக்கு ரொம்ப எரிச்சலாக இருந்தது.

நீண்டு கொண்டிருக்கும் இலை தழைகளை ஒடித்து விடுவதும் பக்கத்து வீட்டுக்காரர்களை வசை பாடுவதுமாகவே இருப்பார்.

இந்தப் பக்கத்து வீட்டுக்காரப் பக்கிகள் ஏன் இந்த மாதிரி மரங்களை வச்சு தொந்தரவு பண்றாங்க? பெட்ரூம் வரைக்கும் தென்னைமட்ட நீண்டுக்கிட்டு இருக்குது. படி வரைக்கும் பப்பாளி எல தொங்குது. அவங்க வீட்ல தேங்காய், பப்பாளி சாப்பிடுறதுக்கு நாம மரம் வளர்க்கணுமா?. என்று திட்டிக் கொண்டே இருப்பார் தட்சிணாமூர்த்தி.

அதை நேரடியாகப் பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்ல முடியாமல் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் புறம் பேசிக் கொண்டே இருப்பார்.

வந்து நீங்களே பாருங்க. இதெல்லாம் சரியா? இல்ல எவன் பொறுப்பான். ஏதோ நானா இருக்க போய் பொறுத்துக்கிறேன். வேறொருத்தனா இருந்தா தப்பாயிரும்

என்று தண்ணீர் குடிக்காமலேயே பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பார் தட்சிணாமூர்த்தி.

இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்காக வீட்டிற்குள் வந்த கிளைகளை வெட்டிவிட்டார்.

ஏங்க பச்சப் புள்ள மாதிரி இந்த மரங்களை வளர்த்துக்கிட்டு இருக்கோம். அதைப் போய் வெட்டி விடுறீங்களே? இது நியாயமா? என்று பக்கத்து வீட்டுக்காரர் கேட்டனர்.

நீங்க வீட்டுப் பக்கத்துல மரங்கள வச்சுத் தொல்லை பண்றீங்க என்றார் தட்சிணாமூர்த்தி.

உங்க வீட்டுச் சுவத்துல மரத்தாேட எல பட்டா சுவர் என்ன தேஞ்சு போகுமா? இல்ல கிழிஞ்சு போகுமா? மரம் வளர்கிறது. இந்த காலத்தில எவ்வளவு பெரிய விஷயம். ஏதோ கொஞ்சம் பச்சையா இருந்தா இந்த இடம் குளிர்ச்சியா இருக்கும்னு தான் அந்த மரம் செடி கொடிய வச்சிருக்கிறோம். அது உங்களுக்கு பிடிக்கலையா? என்று தட்சிணாமூர்த்தியிடம் பக்குவமாகச் சொன்னார் பக்கத்து வீட்டுக்காரர்.

அதுதான் சமயம் என்று ஒரு பிடி பிடித்தார்.

பக்கத்து வீட்டுக்காரங்க நீங்க எல்லாம் அனுபவிக்கிறதுக்கு நாங்க மரங்கள பாதுகாக்கணுமா? முடியாது. இன்னிக்கு நீங்க இந்த மரம் செடி கொடிகளை வெட்டல. நானே ஆள் வச்சி வெட்டுவேன் என்று சத்தமாக பேசினார் தட்சிணாமூர்த்தி.

தினமும் இதே பேச்சாகவும் பிரச்சினையாகவும் இருந்ததால் இந்த மரங்களே வேண்டாம் என்று முடிவு செய்து தட்சிணாமூர்த்தி வீட்டைச் சுற்றி இருந்த மரங்களை எல்லாம் வெட்டி அப்புறப்படுத்தினார்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள்.

அதுவரையில் நிழல் சுமந்து நின்ற நிலம் வெயில் காய்ந்து கிடந்தது.

இங்கிருந்த மரத்தை ஏன் வெட்டுனீங்க? நான் அங்கங்க சுத்திட்டு வந்து இந்த வெயில்ல இந்த மரத்தோட நிழல்ல நின்னுட்டு தான் வீட்டுக்கு போவேன் .அதை போய் வெட்டியிருக்கீங்களே ? என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் வருத்தப்பட்டு சொன்னார் ஒரு பாதசாரி.

அம்மா நீங்க அப்படி சொல்றீங்க . ஆனா இந்த பக்கத்துல இருக்க வீட்டுக்காரன்ங்க எங்க வீட்டுக்குள்ள மரம் வருது. எங்க வீட்டுக்குள்ள கிளை வருதுன்னு தினந்தோறும் சண்டை போடுறாங்க அம்மா. இந்த பிரச்சனையால தான் நாங்க வெட்டிட்டோம்.

எங்க வீட்டுப் பிள்ளை மாதிரி வளர்த்துக்கிட்டு இருந்த மரம் போச்சுன்னு வருத்தப்படுறோம் என்று அவரிடம் சொன்ன போது அந்த பாதசாரி சிரித்துக் கொண்டே சொன்னார்.

அவன் கிடக்கிறான் கிறுக்கு பைய. அவ வீட்டுக்குள்ள போற கிளையும் மரத்தையும் வேணா , அவன் வெட்டியிருக்கலாம். ஆனா அவன் வீட்டுக்குள்ள பூந்து விளையாடிக்கிட்டு இருக்கிற உங்க வீட்டு மரத்தோட வேர்கள அவன் என்ன செய்ய முடியும் ?அது அவன் கண்ணுக்கு தெரியாம இருக்கு. என்று அந்த பெரியவர் சொன்னபோது

அதைக் கேட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்த ஒரு மாணவன் சிரித்தான்.

ஆமாங்க நீங்க சொல்றது உண்மைதான்.

நான் கூட கவிக்காே அப்துல் ரகுமான் ஐயா கவிதை ஒன்னு படிச்சிருக்கேன்.

தோட்டக்காரனே வேலிக்கு வெளியே இருக்கும் என் கிளைகளை நீ வெட்டி விட்டாய் …உன் தோட்டத்திற்கு உள்ளே ஊடுருவி இருக்கும் என் வேர்களை நீ என்ன செய்வாய்?

அப்படின்னு அவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

அதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.

இந்த மாதிரி ஆளுகளுக்கு எல்லாம் வெளியில் இருக்கிற விஷயங்கள் தான் தெரியும். உள்ள இருக்குற விஷயம் தெரியாது.

உங்க மரத்தோட வேரு அவன் நடு வீட்டு வரைக்கும் பரவி இருக்குன்னு அவனுக்கு தெரியுமா? என்று அந்த மாணவன் சொல்லிப் போனபோது

வெட்டி வீழ்த்திய மரங்களை குனிந்து பார்த்தார் பக்கத்து வீட்டுக்காரர்

அந்த மரத்தினுடைய வேர்கள் தட்சிணாமூர்த்தியின் வீட்டின் எல்லை வரை ஊடுருவி இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *