செய்திகள்

பஞ்சு மிட்டாய்க்கு மட்டும் ஏன் இந்த தடை?


ஆர்.முத்துக்குமார்


சாலையோர உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தமிழகம் சிறுவர்கள் விரும்பி வாங்கி ரசித்து சுவைக்கும் பஞ்சு மிட்டாயை தடை செய்துள்ளது. காரணம் அதில் இளம்சிவப்பு நிற வண்ணத்தைப் பெற ரசாயனம் ஒன்றை உபயோகிப்பதால் அதில் கேன்சரை உருவாக்கும் நச்சு தன்மை இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

எல்லா வகை உணவுப் பதார்த்தங்களிலும் நேரிடையாக ஏதேனும் வண்ணம் தரும் உணவு தர ரசாயத்தை கலப்பது வாடிக்கை.

பஞ்சு மிட்டாயை சிறு ராட்டினம் போன்ற கருவியில் வண்ணம் ஏற்றப்பட்ட சர்க்கரையை மாவாக திரித்து அதில் இருந்து பஞ்சு போல் நூலாய் பிரித்தெடுக்க இனிய சுவைமிகு பஞ்சு மிட்டாய் தயாரிப்பை பார்க்கும் போதே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நாவில் ஆசை பொங்க உடனே ரசித்து உண்ண ஆசைப்படுவர்!

இந்த வண்ணமும் மணமும் தான் பல தரப்பட்ட திண் பண்டங்களின் மீது தீரா ஆசையை ஏற்படுத்துகிறது.

இந்த வண்ணம் சேர்ப்பு ரோஸ் மில்க், உடனடி நூடூல்ஸ், பாட்டிலில் உள்ள குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள், சிப்ஸ் வகைகளில் இருப்பது தான் உண்மை.

எல்லாப் பலசரக்கு கடைகளிலும் கண்ணை பறிக்கும் விதமாக தொங்கிக்கொண்டிருக்கும் சிப்ஸ் உட்பட பல நொறுக்கு தீனிகளில் சேர்க்கப்படும் ரசாயனங்களில், சாப்பிடுபவர்களுக்கு அடிமைதனத்தை ஏற்படுத்தும் ரசாயனம் இருப்பதால் அது கிட்டத்தட்ட போதைதன அடிமைதனத்தை சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் தருகிறது.

சிப்ஸ் ரகங்களையும் இனிப்பு பதார்த்தங்களையம் கடையில் தான் வாங்கி மகிழ வேண்டுமா? அதை வீட்டிலேயே செய்து சிறுவர்களுக்கும் இதர கும்பத்தாருக்கும் பரிமாறி மகிழலாம்.

சாதாரணமாக உடனடி உணவு ரகங்கள் உடனே வாங்கி மகிழ ஏதுவாக கடைகளில் நுழைந்து உடன் கண்ணில் பட்டு விடும்!

ஆனால் சிப்ஸ்சை வீட்டிலேயே செய்து கொள்ள தேவையான உருளையோ, வாழக்காயோ கடையின் வேறு பகுதியிலோ அல்லது வேறு கடைக்குத்தான் சென்று வாங்கி இதர தேவையான சங்கதிகளான காரம், பொறித்து எடுக்க எண்ணையையும் வாங்கிட முடியும்.

இன்றைய அசவர முறை வாழ்வியலில் இதற்கு ஏது நேரம்? அதற்குப் பதில் நல்ல ‘பிராண்ட்’ என்று உயர்ந்துள்ள ஒரு நிறுவனத்தின் பொருட்களை வாங்கித் தந்து விட்டால் பில்லை செலுத்தும் வேகத்தில் அப்பதார்த்தத்தை ரசித்து சாப்பிட ஆரம்பித்து விடலாம்!

பஞ்சு மிட்டாயைக் கூட நாமே வீட்டில் செய்து விடமுடியும் என்று பலரின் வீடியோக்கள் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் அது ஒரு கோப்பை காபி சாப்பிட ஒரு காபி தோட்டத்தையே வாங்கி பறிமாறுவது போன்ற ஒரு பணியாக இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மிக பிரபலமான நூடுல்சை மத்திய மாநில அரசுகள் தடை செய்தது. ஆனால் சில மாதங்களில் அந்தத் தடை விலகிவிட்டது! அப்படி என்றால் அதில் சேர்க்கப்பட்ட நச்சுத் தீமை கொண்ட ரசாயனங்கள் உபயோகிக்காமல் இருக்கிறார்களா?

அதுபற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் இல்லை என்பதை நுகர்வோர் தெரிந்து கொள்ள வேண்டும்.

பள்ளிப்பாடத்திட்டத்தில் சம சிந்தனையுடன் உணவு அதாவது Balanced diet, இருக்க வேண்டும் என்று படித்திருப்போம்.

அதில் எந்த உணவுகளில் அதை உறுதி செய்யப்படுகிறது; எதில் எல்லாம் நேர்மாறான பின்விளைவுகளை ஏற்படுத்தும் அம்சங்கள் சேர்க்கப்படுகிறது? என்பன பற்றி சொல்லிக் கொடுக்கப்படுவது கிடையாது.

நாம் உயிர்வாழ சுவாசிப்பது ஆக்சிஜன், வெளியேற்றுவது கார்பன் டை ஆக்சைட் என்பதை யாவரும் அறிவோம். ஆனால் ‘சுறு–சுறு’ தன்மை கொண்ட குளிர்பானங்களில் அந்த சுறுசுறு தன்மையை தருவது அதே கார்பன் டை ஆக்சைட் தான் என்று பானங்களின் பாட்டில்களிலும் வண்ணமிகு அட்டை பாத்திரங்களிலும் கண்ணுக்கு தெரியாத சிறு எழுத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கும்!

அதை சாப்பிடும் சிறுவர்கள் நேரிடையாக கார்பன் டை ஆக்சைடை குடிக்கிறார்கள், நேரடியாக வயிற்றுக்குள் செல்கிறதே அதை சிறுவர்களுக்கு பெற்றோர்களும் பள்ளிகளும் உடற்பயிற்சி ஆசிரியர்களும் சொல்லித்தரும் அணுகுமுறை நம் சமுதாயத்தில் கிடையாது.

இதை சாப்பிடக்கூடாது என கூறினால் அதை கேட்கும் சிறுவர்கள் மனதில் அதில் அப்படி என்ன இருக்கிறது? என்ற ஆசையை தூண்டும் எண்ணங்களே விஸ்வரூபம் எடுக்கும்.

ஆனால் இந்த பானத்தில் ‘சுறுசுறு’ தன்மைக்கு கார்பன் டை ஆக்சைட் இருக்கிறது. ஆனால் அம்மா செய்து தரும் பழ ரசங்களிலும் மோரிலும் தீங்கு ஏற்படுத்தும் எந்த பதார்த்தத்தையும் சேர்க்காது தயாராகி இருக்கிறது என்பதை புரிய வைத்தால் கனி இருக்கக் காயை ஏன் தேர்வு செய்யப் போகிறார்கள்!

19–ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்த பலர் பள்ளி பருவத்திலேயே அதீத குண்டுத் தன்மை கொண்ட உருவத்தை பெற்று இருந்தனர், அந்த கட்டத்தில் தான் உடனடி உணவுகள் புயலாய் நம் வாழ்வில் நுழைந்தது.

இந்த உண்மையின் பின்னணியில் பல சமாச்சாரங்களை பற்றி பால்ய வயதிலேயே பள்ளிப்பாட திட்டத்தின் அங்கமாக இருந்து விட்டால் நம் உடல் ஆரோக்கியம் உறுதியானதாக எப்போதும் இருக்கும் அது சமுதாய வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் காரணம் நல்ல சுவர் இருந்தால் தானே அருமையான சித்திரத்தை உருவாக்கி மகிழ முடியும்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *