செய்திகள்

இந்தியாவில் முதல்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரெயில் சேவை

பிரதமர் மோடி துவக்கி வைத்து மாணவர்களுடன் பயணித்து கலந்துரையாடினார்

கொல்கத்தா, மார்ச் 6–

இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியா முழுவதும் நிலையான மற்றும் வலுவான போக்குவரத்து இணைப்பை உருவாக்குவதற்காக விரிவான முன்முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நீருக்கு அடியில் மெட்ரோ ரெயில் வழித்தடம் உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் புதிய மைல்கல்லாக மேற்குவங்க மாநிலம் கிழக்கு – மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியாக ஹூக்ளி ஆற்றில் 16 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரெயில் பாதை கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு மெட்ரோ பிரிவு வரையில் நீருக்கு அடியில் மெட்ரோ ரெயில் பாதையை உருவாக்கி உள்ளனர். ஆற்றின் கீழ் சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்த இந்த பாதையை 45 வினாடிகளில் மெட்ரோ ரெயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயிலின் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் தொழில்நுட்ப கட்டுமான வல்லமையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இருக்கும். நீருக்கு அடியிலான இந்த மெட்ரோ ரெயில் சேவை மூலம், கொல்கத்தா நகரத்தின் 2 பரபரப்பான பகுதிகளை விரைவாக சென்றடைய முடியும். தினமும் 7 லட்சம் பயணிகள் இந்த மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வார்கள் என தெரிகிறது.

இதற்கான நிகழ்ச்சியில் மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ், அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மெட்ரோ ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ரூ.15,400 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களோடு சேர்ந்து மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணித்தார். அப்போது மாணவர்களோடு பிரதமர் கலந்துரையாடினார்.கவி சுபாஷ் – ஹேமந்த் முகோபாத்யாயா மெட்ரோ பிரிவு, ஜோகா – எஸ்பிளனேடு பாதையின் ஒரு பகுதியான தரதலா – மஜர்ஹெட் மெட்ரோபிரிவு ரயில் சேவையையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இது நகர்ப்புற போக்குவரத்தை மாற்றி அமைப்பதற்கான முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *