சிறுகதை

வானிலை மறந்த வானவில் – ராஜா செல்லமுத்து

அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. எப்படியும் இன்று மழை கொட்டோ கொட்டு என்று கொட்டத்தான் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள் மனிதர்கள்.

கருமேகங்கள் எல்லாம் திரண்டு ஒரு மேகமாகி உருண்டு உறுமி கொட்டோ கொட்டென்று மழை கொட்டித் தீர்த்தது.

தன் இரு சக்கர வாகனத்தில் மழை பொழிய துவங்கும் முன்னே பயணத்தைத் துவக்கி இருந்த மயிலன் .

அவன் நெடுஞ்சாலையில் வரும்போது நீர் அபிசேகம் செய்து கொண்டிருந்தது வானம்.

இடது பக்கம் வலது பக்கம் ஒரு இடமில்லாமல் கொட்டோ கொட்டு என்று கொட்டிய மழையில் தாெப்பல் தாெப்பலாக நனைந்தான் .

இனி நனைவதற்கு எதுவும் இல்லை. அத்தனையும் தண்ணீர் தடம் பார்த்து விட்டது என்று நினைத்த மயிலன்.

சரி நனைந்தது நனைந்து விட்டோம் இப்படியே செல்லலாம் என்று எண்ணினான். அதன்படியே அவனை நீர் சக்கர வாகனம் தார் சாலையின் நீரை உறிஞ்சிக்கொண்டு உருண்டது.

தூரத்தில் ஒரு பெண் மழையில் முளைத்த வானவில்லாய் நின்றிருந்தாள்.

அவள் கையில் குடை ஏதுமில்லை அப்படி இப்படி என்று ஒதுங்கிக் கொள்ளவும் அவளுக்கு மனம் இல்லை போல். மயிலனைப் போலவே உச்சி முதல் உள்ளங்கால் வரை நனைந்திருந்தாள்.

அவள் தேகத்தை தொட்டுக் தடவிய மழை நீர் மகிழ்ந்து வழிந்தோடியது. எந்த வாகனங்களையும் வழிமறிக்காத அந்த வண்ணமயில் மயிலன் வாகனத்தின் முன்னே வழி கேட்டு நின்றாள்.

அந்த ஈரம் பட்ட எச்சில் உதடுகளில் “ப்ளீஸ் ஹெல்ப் மீ” என்று தமிழ் மழையில் நனைந்து கொண்டு ஆங்கில உச்சரிப்பில் வார்த்தைகளை உதிர்த்தாள்

எஸ் என்றான் மயிலன் .அவள் ஏறி அமர்ந்த போது இரண்டு உடல்களும் ஈரம் பட்டிருந்தாலும் அந்த வேகத்தில் உரசி டச் செய்ய போது இருவருக்குள்ளும் தீப்பிடித்தது.

எங்க போகணும் என்றான்? மயிலன்

நீங்க எங்க போறீங்க? என்றாள் அந்த மழை மயில்.

நான் கோடம்பாக்கம் போய் ரைட்ல கட் பண்ணி வடபழனி போறேன். நீங்க என்றான் மயிலன் .

நீங்க எங்க வரைக்கும் போறீங்களோ அங்க வரைக்கும் நான் வரேன்

என்று ஈர உதடுகளில் இருந்து தேன் வார்த்தைகளை உதிர்த்தாள் அந்த தேவதை. ‘

அப்போது உச்சி குளிர்ந்த மயிலனின் உடல் வெப்பம் அவன் கைகளில் வேகத்தைக் கூட்டி இருந்தது.

தார்ச் சாலை நீர்ச்சாலையான போதும் அதை எல்லாம் கண்டுகொள்ளாத அவனது வேகம் புயலை ஒட்டி நின்றது.

மழை வலுத்துக் கொண்டுதான் இருந்தது.

பார்த்தீங்களா இளங்கன்று பயம் அறியாதுன்னு சொல்லுவாங்க எப்படி போறாங்க பாரு ?

என்று மழைக்கு ஒதுங்கி நின்ற ஆட்கள் புலம்பித் தீர்த்தார்கள்.

அந்த அழகி வேகத்தடையில் வேகமாகப் போகும் போதும் நிறுத்தத் தடையில் மயிலனின் மேனியோடு ஒட்டிய போதும் பஞ்சுப் பொதி ஒன்று அவன் முதுகை பதம் பார்த்துச் சென்றது.

ஆஹா என்ன இது இப்படி ஒரு ஆசை அவஸ்தையை இதுவரை அனுபவித்ததில்லையே? இப்படி என்றால் செங்கல்பட்டு வரை செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கலாமோ? என்று அவன் எண்ணப் பறவைகள் வண்ண வண்ணமாய் வார்த்தைகளை தொகுத்தது.

அதுவரையில் வேகம் கொண்டிருந்த அவனது இருசக்கர வாகனம் இப்போது குறைந்த வேகத்தில் சென்றது .

எப்படியும் சிறிது நேரத்தில் சொன்ன இடத்தை எட்டி விட்டால் அந்த ஈர தேவதையை இறங்கி விடவேண்டிவரும் என்று மனதிற்குள் கலங்கி நின்றான் மயிலன்.

நான் இங்க இறங்கிரவா ? என்றாள் அந்த ஈர தேவதை.

ஏன் வாங்க ஒரு காபி சாப்பிட்டு போலாம்? என்று மயிலன் அழைத்தான்

அந்த ஈரமயிலும் ஓ சாப்பிடலாமே? என்று இருவரும் ஈரம் சொட்டச் சொட்ட அந்த இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி தேநீர் கடைக்குள் தஞ்சம் அடைந்தார்கள்

இவர்கள் நனைந்து வந்த நேர்த்தியைப் பார்த்து கூடியிருந்தவர்கள் ஒதுங்கி நின்றார்கள்.

இவர்களுக்கு கிறுக்கு ஏதும் பிடிச்சுகிச்சா? இப்படி நனைஞ்சிட்டு வராங்க ? என்று கேள்வி .

தேநீர் கடையில் தேங்கி நின்றவர்கள்

சூடா காபி என்று ஆர்டர் கொடுக்க சிறிது நேரத்திற்கெல்லாம் இருவர் கையிலும் ஆவி பறக்க காபி வந்திருந்தது.

இருவரும் உறிஞ்சி குடித்தார்கள் இருவர் தொண்டையிலும் இதமாக இறங்கியது காபி மழை.

சரி புறப்படலாமா? என்றான் மயிலன்

தாராளமா என்றாள் அந்த ஈர தேவதை ‘மறுபடியும் அந்த இரு சக்கர வாகனம் மழை என்றும் பாராமல் தார்ச் சாலையில் விரைந்தது .

இங்கே நிறுத்தலாமா? என்றாள்.

இங்கு இறங்கப் போறீங்களா? இன்னும் கொஞ்ச நேரம் போலாமே? என்று பஞ்சுப் பொதிகை மனதில் சுமந்த மயிலன் ஆசையாய் கேட்டான்.

சரி போலாமே ?என்றாள் அந்த ஈர தேவதை.

அவன் அவளை இறக்கி விட வேண்டும் என்று நினைக்கவே இல்லை .

எங்கெங்கோ சுற்றித் திரிந்தான்.

கடைசியில் இதற்கு மேல் மழையில் நனைந்தால் நாளை அலுவலகம் செல்வதற்கு வாய்ப்பு இல்லை

என்று

நாளை சந்திக்கலாம் என்றான்.

ஓ சந்திக்கலாமே? என்ற அந்த ஈர தேவதையின் எதிரே வந்து நின்றன இரண்டு இரு சக்கர வாகனங்கள்.

எவ்வளவு நேரம் தான் பின்னாடியே வர்றது? சட்டுபுட்டுன்னு நிறுத்தி வேலையை முடிச்சிட்டு அனுப்ப வேண்டாமா? என்று ஈர தேவதையைப் பார்த்து வந்தவர்கள் திட்ட

நான் என்ன செய்றது? பயபுள்ள வண்டியை ஓட்டிகிட்டே இருக்கான். பஞ்சுப் பாெதி பட்டதுக்கே இந்த மாதிரி அலைஞ்சானா, ராத்திரியை நினைச்சிருந்தா என்னை விட்டு இருக்கவே மாட்டான்.

சரி வந்த வேலையை முடிங்க என்ற போது

இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று விழித்துக் கொண்டிருந்த மயிலனை பிடரியில் தட்டி அவன் கழுத்தில் அணிந்திருந்த தங்கநகை, கையில் அணிந்திருந்த கடிகாரம் செல்போன் அத்தனையும் பிடுங்கிக் கொண்டு கடைசியில் இரு சக்கர வாகரத்தையும் ஓட்டி முதுகிலும் அடியை கொடுத்து, எந்தப் பொம்பள வந்தாலும் பல்ல இளிச்சுக்கிட்டு ஏத்துறது? ஒரு ஆம்பள வந்தா இந்த மாதிரி லிப்ட் கொடுப்பியாடா?

என்று நையப் புடைத்தார்கள்.

அண்ணா பண்ணது தப்புதான் மன்னிச்சிடுங்க. வண்டியை கொடுங்க என்றபோது போறயா புண்ணாக்க எடுக்கவா? என்ற போது இது வெளியில் தெரிந்தால் அசிங்கம்

என்று நினைத்த மயிலன் சட்டையும் பேண்டையுமாவது மிச்சம் விட்டார்களே ?

என்று அந்த இடத்தை விட்டு ஓடினான் .

கெட்ட புத்தி இந்த அளவுக்கு நம்மள கொண்டு வந்துருக்கு. இனிமேல் ஜாக்கிரதையா இருக்கணும்

என்று கொட்டும் மழையில் தார் சாலையின் ஓரத்தில் ஓடினான்.

அந்த ஈர மயில் இன்னொருவன் பின்னே அமர்ந்து பறந்தாள்.

மயிலன் நனைந்தபடியே ஓடினான்

அந்த ஈர மயிலை இன்னொரு இடத்தில் இறக்கி விட்டனர்

மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடியே நின்றவள் இன்னொரு வாகனத்திற்காக காத்துக் காெண்டருந்தாள்.

தூரத்தில் ஒரு கார் வருவது தெரிந்தது .

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அந்த ஈரமயில் அந்த கார்காரனிடம் லிப்ட் கேட்டாள்

அந்த காரும் அந்த ஈர மயிலை உள்வாங்கிக் காெண்டு பறந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *