சிறுகதை

குழந்தை மனம் – ராஜா செல்லமுத்து

ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் முதலாளி ஒண்டிப்புலி. நிறைய பேர் அவருடைய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஒண்டிப்புலி என்பது அவரின் குலதெய்வப் பெயர் என்று வைத்திருந்தார்கள். கோட், சூட் அணிந்திருந்தாலும் ஒண்டிப்புலி என்ற பெயர் அவருக்கும் அவர் தொழிலுக்கும் பொருத்தம் இல்லாமல் இருந்தது. அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.

ஒண்டிப்புலி என்பது சாமியின் பெயர் என்று சந்தோசப்படுவார்.

ஒண்டிப்புலிக்கு சாதனா என்ற மனைவியும் அனாமிகா என்ற மகளும் இருந்தார்கள். ஒண்டிப்புலி நிறைய சொத்து சேர்த்து வைத்திருந்தார் .

அத்தனை சொத்துக்கும் ஒண்டிப்புலியின் ஒரே மகள் அனாமிகா தான் வாரிசு. எச்சில் கையால் காக்கை ஓட்டாத பெருமையுடையவள் ஒண்டிப்புலியின் மனைவி சாதனா. ஒண்டிப்புலியோ இதைவிட கருமி. சிறுகச் சிறுகச் சேர்த்து இப்போது பணக்காரனாக இருப்பதாக சிரித்துக் கொண்டே செல்வார்.

தவறியும் யாருக்கும் உதவி என்பதை உதட்டில் கூட உச்சரிக்க மாட்டார் ஒண்டிப்புலி .

ஒரு தீபாவளி அன்று ஒண்டிப்புலி அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்களை விருந்துக்கு அழைத்திருந்தார் .நிறைய பேர் ஒண்டிப்புலி ஒரு மனைவியின் குணநலன்கள் அறிந்து வேண்டாம் என்று விலகிக் கொண்டாலும் விடாப்பிடியாக ஜெய்யும் சக்தியும் ஒண்டிப்புலியின் வீட்டுக்கு விருந்திற்கு போனார்கள்.

இவர்கள் எதுக்கு தான் வந்தார்களோ? என்று ஏளனப் பார்வை பார்த்தாள் சாதனா.

சாதனாவின் அம்மாவும் அங்கேயே தங்கி இருந்தாள். இவர்களுக்கு வேற வேலையில்ல சாப்பிட வந்துட்டானுங்க என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே சென்றாள் சாதனாவின் அம்மா.

ஒரு சின்னத் தட்டில் சாப்பாடு, அசைவ உணவும் கொண்டு வந்து வைத்தாள் சாதனா.

என்ன ஜெய் நல்ல நாளும் பொழுதுமா நாம இங்க வந்திருக்கக் கூடாது. இவங்க நடவடிக்கையை தவறா இருக்கு என்று ஜெய்யும் சக்தியும் பேசிக்கொண்டார்கள்.

தட்டில் வைக்கப்பட்ட சாப்பாட்டை எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். அருகில் இருக்கும் அசைவக் குழம்பை எடுத்து ஊற்றுவதா? இல்லை ஊற்றினால் என்ன சொல்வார்களோ ? என்று விழிபிதுங்கி இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

இவர்கள் சாப்பிடுகிறார்களா? என்பதை நோட்டமிட்ட சாதனாவின் அம்மா குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள் அந்தக் கிழவி.

அவளுடன் பேச வேண்டும் என்பதற்காகவே தண்ணீர் என்று கேட்டான் ஜெய்.

வேண்டா வெறுப்பாக ஒரு சாெம்பை எடுத்து வாஷ் பேசனால் தண்ணீர் பிடித்துக் கொடுத்தாள் அந்தப் பொறாமைக் கிழவி

என்னம்மா கை கழுவுற இடத்திலிருந்து தண்ணி கொண்டு வந்து தரீங்க?

என்று சக்தி கேட்க

இது எல்லாம் நல்ல தண்ணி தான் குடிங்க ஒன்னும் செத்துப் போக மாட்டீங்க

என்று ஏளனமாகச் சொல்லிச் சென்றாள் அந்த நூதனக் கிழவி

இதெல்லாம் நமக்கு தேவை தானா? இன்று இருவரும் சாப்பிட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் போது, அனாமிகா சிறுமி ஓடி வந்தாள் .

இவர்கள் முன்னால் இருக்கும் அசைவக் குழம்பை எடுத்து அவ்வளவையும் இரண்டு பேர் தட்டிலும் கொட்டினாள்.

சாப்பிடுங்க நல்லா சாப்பிடுங்க என்றாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஜெய்யும் சக்தியும் உறைந்து போய் உட்கார்ந்திருந்தார்கள்.

என்ன இது அவ்வளவு குழம்பையும் நமக்கு ஊத்திட்டு போயிருச்சு. அவங்க அம்மா வந்து என்ன பண்ண போறாங்களோ? என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே

சாதனா சாப்பிடும் இடத்திற்கு வந்தாள் இருவரையும் எரிப்பது போலவே பார்த்தாள்.

என்ன இது அவ்வளவு குழம்பையும் குப்புற ஊத்திட்டு உட்கார்ந்து இருக்காங்க.

என்று மனதுக்குள் நினைத்தவள் தான் சாப்பிட்டு முடியும் வரை அங்கு வரவே இல்லை .

இது அனாமிகா செய்ததுதான் என்று அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஜெய்யும் சக்தியும் தான் இந்தக் காரியத்தை செய்திருப்பார்கள் என்று நினைத்த சாதனா வெளியே வராமல் இருந்தாள்.

அடுப்படியில் நுழைந்த அனாமிகா இன்னும் அசைவ உணவை அள்ளிக் கொண்டு இருவர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் இடத்திற்கு ஓடி வந்தாள்.

ஏற்கனவே உங்க அம்மா எங்களை முறைச்சுட்டு போகுது. இதுல இன்னும் சாப்பிடணுமா? வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடினார்கள்.

அண்ணா சாப்பிடுங்க என்று ஓடி வந்தாள் அனாமிகா.

அவள் செய்ததைப் பார்த்த சாதனாவுக்கு சட்டென்று கோபம் வந்தது.

இன்னும் சாப்பிடாம எவ்வளவு பேர் இருக்கம். யாருக்கும் இல்லாம எல்லாத்தையும் கொண்டு போய் இவங்களுக்கு கொடுக்கிற அறிவு இருக்கா இல்லையா ? என்று அனாமிகாவை திட்டினாள் சாதனாவின் அம்மா.

வீட்டுக்கு வந்தவங்கள முகம் கோணாமல் பார்க்க வேண்டியதுதான் நம்மோட பொறுப்பு. நீ என்னடான்னா கை கழுவுற தண்ணிய குடுத்து அவங்கள அவமானப்படுத்துற? அம்மா என்னடான்னா குழம்பு ஊத்தாம அப்படியே விட்டுட்டு வருது. .அவங்க என்ன சாப்பிடுவதற்காக நம்ம வீட்டுக்கு வந்து இருக்காங்க. ஒரு மரியாதை வேணாமா ? என்று குழந்தையாய் இருந்த அனாமிகா இருவர் தலையிலும் கொட்டுவது போல கேள்வி கேட்டாள்.

சாதனாவுக்கும் அவள் அம்மாவுக்கும் முதுகில் சவுக்கை எடுத்து அடித்தது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *