செய்திகள் நாடும் நடப்பும்

“நம்மைக் காக்கும்–48 திட்டம்”: 2 லட்சம் குடும்பங்களின் குதூகலத்தை காப்பாற்றிய முதலமைச்சர் ஸ்டாலினின் புதுமையான சிந்தனை


–:கட்டுரை: – மா.இளஞ்செழியன்


ஒரு அரசு என்பதாகட்டும் நாடு என்பதாகட்டும் அது வெறுமனே நிலத்தை அடிப்படையாக கொண்டது இல்லை. மாறாக முழுக்க முழுக்க மனிதனை மனித சமூகத்தை அடிப்படையாக கொண்டதுதான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்த அடிப்படையில்தான் சமூகத்தில் உள்ள அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் சமூக நீதி (Social justice) என்ற சொல்லாடல் அரசியலில் மிகவும் பேசப்படும் ஒன்றாக உள்ளது.

திமுகவும் சரி, அதிமுகவும் சரி, தந்தை பெரியார் வலியுறுத்தி கூறியபடி, “மனிதனை நினை” என்ற மானுட சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதையே கொள்கையாக குறிக்கோளாக கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்கும் ஒவ்வொரு முறையும் பல்வேறு திட்டங்களையும் சட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார்கள். அதோடு அறநிலையத் துறையை சிறப்பாக கையாண்டு கடவுளர்களின் கோயில் திருப்பணிகளிலும் எந்தக் குறையும் வைக்காமல் மிகவும் திறம்பட பங்காற்றி வருகின்றனர்.

நாட்டிற்கே வழிகாட்டும் திட்டம்

அந்த வகையில் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப் பட்டுள்ள இந்தியாவுக்கே வழிகாட்டும் மிக சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” என்ற மனிதநேயம் மிக்க மிக அற்புதமான திட்டமாகும். முதலமைச்சர் ஸ்டாலினின் சிந்தனையில் பிறந்த குழந்தையான இந்த திட்டம் குறித்து 2021 நவம்பர்

18 ந் தேதி அறிவித்த முதலமைச்சர் அதற்கான தமிழ்நாடு அரசின் விரிவான அரசாணையை 2021 டிசம்பர் 18 ந்தேதி வெளியிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

இத்திட்டத்தின்கீழ் அதிக விபத்து நடைபெறும் 500 நெடுஞ்சாலை இடங்களை கண்டறிந்து, “இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48” திட்டத்தை செயல்படுத்த 218 அரசு மருத்துவமனைகள், 422 தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு மொத்தம் 640 மருத்துவமனைகளின் விவரங்களும் வெளியிடப்பட்டது. அந்தத் திட்டம் தொடங்குவதன் அடையாளமாக 18 மருத்துவமனைகளின் பிரதிநிதிகளிடம் அதற்கான கடவுச் சொற்களை வழங்கி, இன்னுயிர் காப்போம் திட்டத்தின் காணொலி குறுந்தகட்டினையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 ” என்ற உன்னதத் திட்டத்தின் முக்கிய அங்கமாக சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு, மாநில எல்லை இல்லை

சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் (ceiling limit) சிகிச்சை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிசிக்சை முறைகளில் (81 treatment Packages) சிகிச்சை அளிக்கப்படும். 48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக (Unstable) இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால் அதற்கான மூன்று வழிகாட்டுதல்களின்படி சிகிச்சைகள் வழங்கப்படும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாக பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் வலைத்தளங்களில் (https://cmchistn.com) வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் இது குறித்து விவரங்களை மருத்துவமனை, அவசரகால ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அறியும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டம் குறித்து மேலும் விவரங்கள் அறிய, கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.

2 லட்சம் குடும்பங்கள் பயன்

2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பது கடினமான செயலாக இருந்தது. காரணம், காவல் துறையின் விசாரணைகள், நீதிமன்றங்கள் சென்று வருவது போன்ற பல்வேறு சங்கடங்கள் இருந்தன.

‘இன்னுயிர் காப்போம்’ திட்டம் துவக்கப்பட்ட நாள் முதல், சாலைகளில் எங்கு விபத்து நேர்ந்தாலும்

பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் அவர்களின் இன்னுயிர் காப்பாற்றப்பட்டு வருகிறது.

அதேபோல் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இதுவரை, 2 லட்சம் பேர் பயனடைந்த நிலையில் அவர்களின் சிகிச்சைக்காக 173 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது என்று அண்மையில் மருத்துவம் மன்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 2 லட்சம் குடும்பங்களின் ஒளி விளக்குகள் அணையாமல் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதே அதன் பொருள் என்பதையும் மறந்து விடமுடியாது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *