செய்திகள்

வாக்குப்பதிவு யந்திரத்தில் ஒட்டப்படும் நாம் தமிழர் கட்சிக்கான ‘மைக்’ சின்னத்தில் குழப்பம்

தேர்தல் கமிஷனிடம் புகார்

சென்னை, ஏப்.11-

வாக்குப்பதிவு யந்திரத்தில் ஒட்டப்படும் நாம் தமிழர் கட்சிக்கான ‘மைக்’ சின்னத்தில் குழப்பம் உள்ளதாக தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வரும் 19-ந் தேதி நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டு மே 15ந்தேதியில் உள்ள சின்னங்களின் பொதுப்பட்டியலில் இருந்து அந்த சின்னம் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த சின்னத்தைத்தான் மக்களிடம் பரவலாக கொண்டு சேர்த்துள்ளோம். ஆனால் கடந்த மார்ச் 25ந் தேதி மேம்படுத்தப்பட்ட சின்னங்கள் பட்டியலில் அந்த மைக் சின்னத்தின் வடிவம் வித்தியாசமாக காணப்படுகிறது. மேலும், இந்திய தேர்தல் கமிஷன் அளித்த மைக்கில் ‘ஆன் – ஆப் பட்டன்’ காணப்படவில்லை. ஆனால் தற்போதைய பட்டியலில் உள்ள மைக் சின்னத்தில் அந்த பட்டன் உள்ளது. இது வாக்காளர்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே இந்த தேர்தலில் வாக்குப்பதிவு யந்திரத்தில் ஒட்டப்பட உள்ள சீட்டில் நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கிய மைக் சின்னத்தின் படத்தை பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் வக்கீல் பிரிவு மாநில செயலாளர் சங்கர் அளித்த பேட்டி வருமாறு:-

நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கிய மைக் சின்னத்துக்கு பதில் வேறு வடிவில் உள்ள ஒரு மைக் சின்னம், வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டு வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பட்டன் இல்லாத மைக் சின்னத்தையே அதில் பொருத்த வேண்டும். சின்னம் மாறுவதால், அது நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *