செய்திகள்

மிக்ஜாம் புயல் – கனமழை எதிரொலி: எர்ணாவூரில் மழைநீருடன் பல ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணை கலந்தது

5 கி.மீ. நீளத்துக்கு எண்ணெய் படலம்

தொழிற்சாலை மீது நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் உறுதி

திருவொற்றியூர், டிச.8-

கனமழை காரணமாக எர்ணாவூரில் தேங்கிய மழை நீருடன் பல ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் முகத்துவாரம் மற்றும் கடலில் மீன்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் சடையங்குப்பம் முதல் எண்ணுார் முகத்துவாரம் வரை 5 கி.மீ.க்கு வெள்ள நீர் எண்ணெய் படலத்துடன் தேங்கிய வெள்ளநீர் வடிய துவங்கி உள்ளது. மேலும் சுற்றுவட்டார வீடுகளில் கழிவுநீருடன் கலந்து தேங்கி உள்ளதால், வீடுகளில் உள்ள பொருட்கள் அனைத்தும் வீணாகி உள்ளன. வீட்டு சுவர்களிலும் ஆயில் படர்ந்துள்ளன. இதனால் அந்த பகுதி வாசிகள் உடல் உபாதைகள் மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் மழையை தொடர்ந்து புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து அதிகபட்சமாக 48,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. அத்துடன், வடசென்னையின் ஒட்டுமொத்த மழைநீரும் பக்கிங்காம் கால்வாயில் பெருக்கெடுத்தது. இந்த 3 நீர்நிலைகள் வழியாக வெளியேற வெள்ளநீர், எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும். ஆனால் அளவுக்கு அதிகமான வெள்ளநீரை உள்வாங்க முடியாமல் முகத்துவாரம் ஸ்தம்பித்தது. இதனால் நீர் வழித்தடங்களில் வெள்ளநீர் பின்னோக்கி ஏறி பல ஆயிரம் குடியிருப்புகள், தொழிற்சாலைகளை மூழ்கடித்தது.

தற்போது, வெள்ளம் வடிய துவங்கியிருக்கும் நிலையில், தொழிற்சாலைகளில் புகுந்த வெள்ளநீர் ஆயில் கழிவுகளுடன் கலந்து தற்போது எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்து வருகிறது.

முகத்துவாரம் அருகே கடலிலும் 2 கி.மீ.,க்கு ஆயில் கழிவுகள் படர்ந்துள்ளன. தூண்டில் வளைவு பாறைகள் மற்றும் படகுகள் அடிபாகத்தில் எண்ணெய் கழிவுகள் ஒட்டி உள்ளன. ஆயில் கழிவுகளால் எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளதாக, இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

பஸ் இயக்க நடவடிக்கை

இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

பஸ் போக முடியாத மணலிக்கு பஸ் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. திருவொற்றியூரில் 90 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. ஒரு சில இடங்களில் மின்சாரம் இல்லை. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மின்சாரம் கொடுக்கும்போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மழைநீரில் எண்ணெய் கலந்து கடல்நீரில் இருப்பதை கண்டுள்ளோம். சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதனுக்கு தகவல் கூறியுள்ளோம். அங்கிருந்து அலுவலர்கள் வந்து பரிசோதனைக்காக தண்ணீர் மாதிரியை எடுத்துச் சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு எந்த தொழிற்சாலையில் இருந்து அந்த எண்ணெய் வந்தது என கண்டுபிடித்து நிச்சயமாக அந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

8 லாரிகளில்

நிவாரண பொருட்கள்

திருவொற்றியூர் தொகுதியில் மழைநீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 8 லாரிகளில் வந்த நிவாரண பொருட்களை அமைச்சர்கள் சிவசங்கர், மதிவேந்தன், நாமக்கல் எம்.பி. ராஜேஷ், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி. ஆறுமுகம் ஆகியோர் வழங்கினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *