செய்திகள்

வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கியது

சென்னை, ஏப்.1–

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கியது.

தமிழகம்–புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறுகிறது.

தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விரிவாக செய்து வருகிறது. தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் விழிப்புணர்வு செய்து வருகிறது.

இந்த தேர்தலில் 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண்கள், 3 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 69 பெண்கள், 8,465 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே 68,144 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில் 1500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மேலும் 177 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன.வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என்பதற்காக 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.இதற்காக எவ்வளவு பேர் தபால் ஓட்டுப்போட விருப்பம் தெரிவிக்கின்றனர் என்பதை அறிய அவர்களுக்கு விருப்ப படிவங்களையும் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. இதற்கான 12டி படிவத்தை 77,445 பேர் சமர்ப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 50,676 பேர் வழங்கி உள்ளனர். இதில் விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு அடுத்த வாரம் தபால் வாக்குச்சீட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 950 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யார்–யாருக்கு என்னென்ன சின்னங்கள் என்று ஒதுக்கப்பட்டு விட்டதால் மின்னணு வாக்கு யந்திரத்திலும் வாக்குச்சாவடி மையங்களிலும் ஒட்டுவதற்கான வேட்பாளரின் பெயர் சின்னங்கள் அச்சிடும் பணியும் இப்போது நடைபெற்று வருகிறது.

பூத் சிலிப் வழங்கும் பணிகள் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி 13ம் தேதி முடிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

அதன்படி வாக்காளர்கள் அனைவருக்கும் ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி உள்ளது.

வட்டார அளவிலான அதிகாரிகள் மேற்பார்வையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று ‘பூத் சிலிப்’ வழங்கி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திற்கு உட்பட 3 நாடாளுமன்ற தொகுதிகளில் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வழங்கும் பணியை இன்று வேப்பேரி ரித்தட்சன் சாலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான டாக்டர் ராதா கிருஷ்ணன் துவங்கி வைத்து பார்வையிட்டார்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலான துணை ராணுவ படையினரும் இன்று சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் எங்கெங்கு பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து டி.ஜி.பி. அலுவலகத்தில் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன்படி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *