செய்திகள்

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.40 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பினை (G.O) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சு.முத்துசாமி மற்றும் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கையில், இந்த பொது சுத்திகரிப்பு நிலையம் தினசரி 20 லட்சம் லிட்டர் கழிவுநீரை சேகரித்து சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. மேலும், மொத்த மதிப்பான ரூ.40 கோடியில் அரசின் பங்காக ரூ.20 கோடியும் மற்றும் சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பாக ரூ.20 கோடியும் வழங்குவதற்கும் ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளனர் என்றார்.

மேலும், தொழிற்சாலைகள் கழிவுநீரை நேரடியாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு மட்டுமே கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். அதே போல், கழிவுநீரை நிலத்தில் கண்டிப்பாக விடக்கூடாது. மேலும், காற்று மாசு அடைகின்ற வகையில் புகையோ, கழிவோ வெளியேறாமல் தொழிற்சாலைகள் பாரத்துக்கொள்ள வேண்டுமெனவும் சிப்காட் வளாகத்தில் தேங்கியிருக்கும் சுமார் 63,000 டன் கழிவுகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு விரைவில் எடுத்து செல்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:–

பொதுமக்களின் நலனுக்காக சிப்காட் வளாகத்தில் உள்ள நல்லான் ஓடை தூர்வாரி சுத்தப்படுத்தி மழைநீர் ஓடுகின்ற வகையில் பாதுகாக்கப்படும். மேலும், சிப்காட் வளாகத்தில் ஏற்கனவே மாசுபட்ட நிலத்தடி நீரை உறிஞ்சி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீர் எடுத்து சுத்தப்படுத்தப்படும்.

தேவையான இடத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மாசுபட்ட தண்ணீரை எடுத்து சுத்தப்படுத்தப்படும். அவ்வாறு சுத்திகரிக்கப்பட்டு வரும் தண்ணீர் மீண்டும் தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்படும். மேலும், விவாசய நிலங்களும், நீர்நிலைகளும் பாதிக்கப்படாமல் விவசாயத்தினை பாதுகாப்பது நமது அனைவரின் கடமையாகும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் சு.முத்துசாமி, மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், அரசு அலுவலர்கள், தொழிற்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *