நாடும் நடப்பும்

டிஜிட்டல் பாஸ்போர்ட் தயார்


ஆர்.முத்துக்குமார்


டிஜிட்டல் மய உலகில் எல்லாமே கையடக்க செல்போனில் வந்துவிட்டது! நம்மில் பலர் வங்கிக் கணக்குப் புத்தகத்தையோ, அச்சடித்த பேப்பர் டிக்கெட்டையோ கையில் பிடித்து படித்தது வெகுநாள் ஆகியிருக்கும்!

QR ஸ்கேன் செய்தால் வங்கிச் சேவைகளை பெற முடிகிறது, ஆடம்பர கார் வாங்குவது முதல் வீட்டிற்கு வரி செலுத்துவது வரை எல்லாமே டிஜிட்டல் முறைக்கு மாறி தவறுகள் ஏதுமின்றி சிறப்பாகவே செயல்படும் நிலை வந்துவிட்டது.

செல்போனில் எல்லாமே நடைபெற்று வருவதால் முன்பு போல் மடிக்கணினி உபயோகமும் கூட கண்ணில் படுவது கிடையாது.

குறிப்பாக விமானங்களில் பயணிப்பவர்கள் மடிக்கணினியில் அலுவல்களை செய்து கொண்டிருப்பது வாடிக்கை, அங்கேயும் செல்போனின் ஆதிக்கம் வந்துவிட்டது.

இணையவழி டிக்கெட்டை ஸ்கேன் செய்து நமக்கு அனுமதி வழங்கும் முறை சர்வதேச விமான நிலையங்களில் வந்துவிட்டது.

இத்தகைய மாற்றங்களிடையே பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் பாஸ்போர்ட் மட்டும் இன்றும் டிஜிட்டல் புரட்சியில் பயன் பெறாமல் பண்டைய புத்தக வடிவில் இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

பல நாடுகள் வழங்கும் அனுமதி விசா அச்சடிக்கப்பட்ட பக்கங்களுடன் பாஸ்போர்டை பத்திரமாக கையில் வைத்துக்கொண்டு பயணித்தாக வேண்டிய நிலை விரைவில் மாறத் துவங்கிவிடும்.

பல நாடுகளின் விசா டிஜிட்டல் மயமாகி விட்டது, அதனால் பாஸ்போர்ட்டில் பதிவேற்றப்பட வேண்டியதே கிடையாது. சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருக்கும் துபாய், சிங்கப்பூர், மக்காவ், ஜப்பான் போன்ற நாடுகளின் விசா வெறும் டிஜிட்டல் சமாச்சாரமாக இருக்கிறது.

முதல்முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது.

உலகில் முதன்முதலில் ஸ்மார்ட்போன் செயலி அடிப்படையில் செயல்படும் டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகம் செய்துள்ளது.

ஃபின்ஏர், ஃபின்னிஸ் போலீஸ் மற்றும் ஃபின்ஏவியா விமான நிலைய ஆபரேட்டருடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் 28–-ம் தேதி டிஜிட்டல் பாஸ்போர்ட்டுக்கான ஒரு பைலட் திட்டத்தை பின்லாந்து அரசு தொடங்கியது.

பயண தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த டிஜிட்டல் பாஸ்போர்ட்களை சோதிப்பதற்கான ஒரு மிகப்பெரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

முதலில் இந்த திட்டம் ஹெல்சின்கியில் இருந்து இங்கிலாந்து திரும்பும் சில ஃபின்ஏர் விமான பயணிகளிடம் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஃபின்டிசிசி பைலட் செயலியை பதிவிறக்கம் செய்து பயணிகள் தங்கள் முக அங்கீகாரம் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளை சரிபார்க்க வேண்டும். பின்னர், ஃபின்னிஸ் எல்லை காவலருக்கு செயலி மூலம் இந்த தகவல்களை அவர்கள் அனுப்ப வேண்டும்.

டிஜிட்டல் பாஸ்போர்ட் என்பது மொபைல் செயலியை அடிப்படையாக கொண்டது. இது, பயணிகள் தங்கள் பாஸ்போர்ட் தகவல்களை ஸ்மார்ட்போனில் சேமித்து வைத்து, தேவையான இடங்களில் உடனடியாக பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. தனியாக பாஸ்போர்ட் புத்தகங்களை உடன் எடுத்துச் செல்லத் தேவையில்லை.

எளிது, வேகம், பாதுகாப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்ட டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டம் சோதனை அடிப்படையில் 2024 பிப்ரவரி வரை செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு இத்திட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து, நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பின்லாந்து தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அனைவருக்கும் அவசியமானதாக மாறியுள்ளதால் எதிர்காலத்தில் டிஜிட்டல் பாஸ்போர்ட் எல்லா நாடுகளிலும் பிரபலமாகும் என்று தெரிகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் முன் நிற்கும் நாம் பாஸ்போர்ட் டிஜிட்டல் மயத்தில் பின்தங்கி விடக்கூடாது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *