செய்திகள் நாடும் நடப்பும்

2024ல் தவறுகள் திருத்தப்படுமா?


ஆர்.முத்துக்குமார்


2023 ம் ஆண்டு விடைபெறத் தயாராகி விட்ட இத்தருணத்தில் 2024ல் செய்ய வேண்டிய கடமைகளை பற்றி விவாதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வந்து விடவில்லை . என்றாலும் அதன் தாக்கம் பலருக்கு ஏற்பட்டாலும் சாதாரண காய்ச்சல் வந்தவர்கள் போல் அதை கவலையின்றி எதிர்கொள்வது நடைமுறையாகி விட்டது.

ஒரு சில அசம்பாவித மரணங்கள் ஏற்பட்டது. அது அதன் பின்னணியில் அவருக்கு இருந்த பிற உபாதைகளால் என்பதை உணர முடிகிறது.

ஆக 2023 கொரோனாவை வசப்படுத்தி விட்டோம் என்ற நம்பிக்கை தந்து விடைபெறுகிறது, ஆனால் நாம் மிக எச்சரிக்கையுடன் 2024ல் நுழைய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

2023ல் ஏற்பட்ட பல இயற்கை சவால்களில் அதீத மழைப் பொழிவும் இருக்கிறது. உலக சராசரி மழைப் பொழிவும் இருக்கிறது. உலக சராசரி மழைப் பொழிவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்ததாக தெரியவில்லை. ஆனால் சில கடற்கரை ஊர் பகுதியில் ஊரையே நிலைக்குலைய வைக்கும் மழைப் பொழிவு ஏற்பட்டு வருகிறது.

பல கடல் சூழ் தீவு நாடுகளில் இத்தகைய ராட்சத மழையை எதிர்நோக்க உரிய கட்டுமானம் கொண்டே இருக்கிறது. சிங்கப்பூர், ஜப்பான் முதலிய சிறு தீவு நாடுகள் அதற்கு நல்ல உதாரணங்கள்.

எதிர்மறையாய் சென்னையும் அருகாமையில் இருக்கும் ஆந்திர மாநில கடற்கரைப் பகுதி நகரங்களையும் மீண்டும் மீண்டும் இயற்கை சீற்றம் சந்திக்கும்போதெல்லாம் ஒப்புக்காக எதையாவது குறை கூறுவதும் அதை நிவர்த்தி செய்யாது ‘வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்’ என்ற மனப்பான்மையுடன் இருப்பதும் நம் கண்முன் இருக்கும் நிதர்சனமாகும்.

அது நம் தமிழகத்தில் மட்டும் இருக்கும் நிலை என்பது கிடையாது. உலகமே இது பற்றி விரைந்து உரிய நடவடிக்கைகள் எடுக்காது இருக்கிறது.

பாரீஸ் ஒப்பந்தம் 2015ல் கையெழுத்தானது. அதில் பூமியின் வெப்ப மயம் அரை டிகிரியாவது குறைய வழிகள் காண சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிமுக்கியமான ஒரு முடிவு கரும்புகை வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது.

நமது கண்முன் தோன்றுவது சாலை வாகன கரும்புகையாக இருக்கிறது. கப்பல்களும் மிகப்பெரிய கரும்புகை கக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. அது கடல் பகுதியில் கரும்புகையுடன் எண்ணெய் கழிவுகளையும் வெளியேற்றி கடல்சார் உயிரினங்களுக்கும் பகையாக இருக்கிறது!

இதற்கு அடித்தளமாக இருப்பவை கச்சா எண்ணெய்யும் கரியும் என்பது புரிந்தும் அதன் உபயோகத்தை குறைக்க கடந்த 8 ஆண்டுகளில் எந்த நாடும் உறுதியாக இல்லை என்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

கச்சா எண்ணெய்க்கு மாற்றாக மின்மய தொழில்நுட்பங்கள் வருவதால் மட்டும் நல்ல தீர்வு கிடைத்து விடுமா? என்ற சந்தேகக் கேள்விகள் எண்ணெய் வள வளைகுடா நாடுகள் கேட்டு வருகிறது.

கரி உபயோகத்தை நிறுத்தினால் கடும் குளிர் பகுதிகளில் அன்றாடம் பல லட்சம் டன்கள் தேவையாக இருக்கும் கரிக்கு மாற்று என்ன? ஐரோப்பிய நாடுகளம், அமெரிக்காவும் பெருவாரியாக குளிர் காலத்தில் கதகதப்பான வெப்பத்தை வீடுகளிலும் பொது இடங்களில் வழங்க கரியை கொண்டு நீராவி ஏற்படுத்தித் தான் அந்த கதகதப்பான இதத்தை உருவாக்கி வருகிறார்கள்.

மொத்தத்தில் நிலக்கரி உபயோகம் அடுத்த 100 ஆண்டுகளில் குறைய நம் கண் எதிரில் வழி ஏதும் தெரியவில்லை.

பணக்கார எண்ணெய் வள நாடுகள் மாற்று எரிசக்திகளுக்கு உதவ நிதி வழங்கி வந்தாலும் உருவாகி உபயோகத்திற்கு வரும் வேகம் பற்றிய அக்கறையின்றி இருப்பார்கள். அது தான் நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா பாரீஸ் ஒப்பந்தத்தை விட்டு விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நமது பிரதமர் மோடி பாரத தேசம் வெப்பமய குறைப்பில் முன்மாதிரி நாடாகவே இருப்போம் என்று உறுதி தந்து செயல்பட்டு வருகிறார்.

சர்வதேச சோலார் கூட்டமைப்பை உருவாக்கி பல நாடுகளை அதில் பங்கேற்க செய்து சோலார் உபயோகங்களுக்கு புது வேகம் தரக் களம் இறங்கினார்.

அதன் பயனாக நம் நாட்டில் சோலார் மின் உற்பத்தி பல லட்சம் யூனிட்டுகள் அதிகரித்துள்ளது. அது மட்டுமின்றி மிகக் குறைந்த சூரிய வெளிச்சம் பெறும் பல ஐரோப்பிய நாடுகளும் கூட சோலார் மின் உற்பத்திக்கு விசேஷ சலுகைகள் தந்து நிர்மாணிப்புகளுக்கு வழி கண்டு வருகிறார்கள்.

இதில் தமிழகமும் பின்தங்கி விடவில்லை என்பது தான் உண்மை. நாம் சுனாமியின் சீற்றத்தையும் ராட்சத மழைப் பொழிவுகளையும் கடந்த 23 ஆண்டுகளில் பல முறை கண்டு விட்டோம்.

அடுத்தக்கட்ட வளர்ச்சிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கொரோனா கட்டுப்பாட்டிற்கு எடுத்த அதிரடி நடவடிக்கைள் போன்றே சோலார் மின் உற்பத்திக்கும் அது சார் தொழில்நுட்பங்களுக்கும் உத்வேகம் தர வேண்டும்.

பொறியியல் கல்லூரிகளில் மாசு தூசு பற்றிய ஆராய்வுகளுக்கு முன்னுரிமையும் ஆதரவுகளையும் தர தயங்கக் கூடாது.

தற்சயம் பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்கவும் அதை திறம்பட அகற்றவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் wasted 360 போன்ற அமைப்புகளுக்கும் பாராட்டி நற்சேவைகள் தொடர ஊக்கம் தர முன் வர வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *